வெளியிடப்பட்ட நேரம்: 17:53 (28/12/2017)

கடைசி தொடர்பு:17:53 (28/12/2017)

அசத்தல் ஆய்வு, அரசுக்குக் கேள்வி... அறிவியல் மாநாட்டுக்குச் செல்லும் மலைக்கிராம மாணவர்கள்! #VikatanExclusive

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கொங்காடை வனப்பகுதியைச் சேர்ந்த பழங்குடி இனச் சிறுவர்கள், இந்திய அறிவியல் மாநாட்டுக்குத் தேர்வாகி மலைக்கிராம மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறார்கள். இந்தக் குழுவைச் சேர்ந்த சிறுவன் சின்னக்கண்ணனுக்கு, அகமதாபாத் நகரில் நடந்துவரும் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் மாநாட்டில் `இளம் விஞ்ஞானி' பட்டம் வழங்கப்படவிருக்கிறது.

அறிவியல் விருது

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, ஒவ்வோர் ஆண்டும் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் மாநாட்டை நடத்திவருகிறது. இதில், இந்தியா முழுவதும் உள்ள பள்ளி மாணவ-மாணவிகள் பங்குபெற்று தங்களுடைய அறிவியல் படைப்புகளை முன்வைக்கின்றனர். கலந்துகொள்ளும் மாணவர்களில் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் தேர்வுசெய்யப்பட்டு, தேசிய அளவில் நடைபெறும் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் மாநாட்டில் கலந்துகொள்ள வாய்ப்பு வழங்கப்படும். மிகச்சிறப்பாகச் செயல்படுபவர்களை `இளம் விஞ்ஞானி'களாகத் தேர்வுசெய்து, அறிவியல் அறிஞர்கள் கலந்துகொள்ளும் மாநாட்டில் பங்குபெறுவர்

இந்த ஆண்டு, அறிவியல் மாநாடு `நீடித்த வளர்ச்சியுடன்கூடிய மேம்பாடு' என்ற தலைப்பில் நடக்கவிருக்கிறது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் அமைந்துள்ள கொங்காடை கிராமத்தில் தேசியக் குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பள்ளியில் எட்டாம் வகுப்புப் படிப்பு படித்துவரும் சின்னக்கண்ணனும், அவரது குழுவினரும் மாநில அளவிலான அறிவியல் ஆய்வுக் கட்டுரைக்கான போட்டியில் வெற்றிபெற்றிருக்கிறார்கள். இந்தப் போட்டியில் தனியார் பள்ளி மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களும் கலந்துகொண்டிருந்தாலும், மலைப்பகுதியிலிருந்து வந்திருந்த சின்னக்கண்ணன் குழுவினரை முதன்மையாகத் தேர்வு செய்திருக்கிறது தமிழ்நாடு அறிவியல் இயக்கம். 

அறிவியல் விருது

சின்னக்கண்ணன் வசிக்கும் பகுதி, மலையும் மலை சூழ்ந்த வனப்பகுதி. பள்ளிக்கூடம் போக வேண்டுமென்றால், மலைக்காடுகளைக் கடந்து 60 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். பள்ளி செல்வதற்குச் சரியான பாதையோ வாகனமோ இல்லாததால், பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளே அதிகம். இவர்கள் புத்தகம் சுமக்கவேண்டிய வயதில் கரும்பைச் சுமந்தும், செங்கல்சூளையில் வேலைபார்த்தும் வருகின்றனர். பேருந்து வசதி இல்லை என்பதால், இவர்கள் டெம்போ வேன்களில்தாம் பயணிக்க வேண்டும்.

அறிவியல் விருது கொங்காடை கிராமம்

மலைக்கிராமங்களில் மாணவர்கள் பள்ளிக்குச் சென்று திரும்புவதற்கு ஒரு நாளைக்கு 120 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். இவர்களைப் பள்ளிக்கு அழைத்துச்செல்ல பத்துக்கும் மேற்பட்ட வேன்கள் மலைக்கிராமங்களில் பயணிக்கின்றன. பத்து வேன்களும் மலையில் ஏறி இறங்கும்போது வெளியிடப்படும் புகை அளவு என்ன, வேன்களில் பயணிக்கும்போது ஏற்படும் பயணச் செலவுகள் எவ்வளவு என்பதை எல்லாம் கணக்கிட்டு, இதே மலைக்கிராமங்களில் அரசுப் பேருந்தை இயக்கினால் ஆற்றல் இழப்பும், பொருளாதார இழப்பும், தேவையில்லாமல் வெளியிடப்படும் கார்பன் டை ஆக்ஸைடு அளவும் குறையும் என்பதையே ஆய்வுக் கட்டுரையாக மாற்றி, விருதை பெற்றிருக்கிறார்கள்.

சின்னக்கண்ணனிடம் பேசினோம். ``எங்களது மலைப்பகுதிகளில் போக்குவரத்து வசதியில்லாததால், காலம், பணம் என, பல இழப்புகள் ஏற்படுகின்றன. இதை கிராம மக்களிடம் பேசி, இழப்புகளை வகைப்படுத்தி, கணக்கிட்டு, அதற்கான தீர்வுகளைக் கண்டறிந்திருக்கிறோம். 

அறிவியல் விருது சின்னக்கண்ணன்கொங்காடை கிராம மக்கள் மளிகைச் சாமான்கள் வாங்க, மருத்துவமனைக்குப் போக,  மின்சாரக் கட்டணம் கட்ட, வருவாய்த் துறை அலுவலரைச் சந்திக்க, வங்கி, பள்ளிக்கூடம் என தினமும் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்தியூருக்குத்தான் செல்ல வேண்டும். பேருந்து வசதியில்லாததால் டெம்போக்களில் பயணிப்பதால் ஒரு நபருக்குப் போக்குவரத்துக்கு மட்டும் நூறு ரூபாய் செலவாகிறது. நாற்பது ரூபாய் மின் கட்டணம் செலுத்த நூறு ரூபாய் செலவு செய்கிறோம். பேருந்து வசதி இல்லாததால் ஒரு மணி நேரத்தில் செய்து முடிக்கவேண்டிய வேலையைச் செய்ய ஒரு நாளாகிறது. 

மலையிலிருந்து அந்தியூருக்கு வந்து செல்ல, ஒவ்வொரு மாதமும் எட்டு லட்சம் ரூபாய் என ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்குமேல் செலவு செய்கிறோம். இதுவே பேருந்து வசதி செய்து தரும்போது 60 சதவிதச் செலவு குறையும். 

உயர்நிலைப் பள்ளி வசதி இல்லாததால், 15 கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டும் அல்லது 60 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். இதனால் என்னுடன் படிப்பவர்கள் நடுநிலைப் பள்ளியோடு படிப்பை நிறுத்திவிட்டு, குழந்தைத் தொழிலாளர்களாக மாறிவருகின்றனர். எங்கள் ஊரில் மட்டும் கடந்த மூன்று ஆண்டுகளில் 50 பேர் பள்ளியிலிருந்து இடையில் நின்றிருக்கிறார்கள். இதையெல்லாம் தவிர்க்க, பள்ளிக்கூட வசதியையும் பேருந்து வசதியையும் செய்து கொடுத்தால், தேசத்தின் வளர்ச்சியில் நாங்களும் முக்கியப் பங்காற்றுவோம்" என்று நம்பிக்கையோடு சொல்கிறார் `இளம் விஞ்ஞானி' சின்னக்கண்ணன்.


டிரெண்டிங் @ விகடன்