'தண்ணீர் திறந்தது மகிழ்ச்சிதான்; கால்வாய் தூர்வாரலையே' - விவசாயிகள் வேதனை

வெலிங்டன் நீர் தேக்கத்திலிருந்து பாசனத்துக்காகத் தண்ணீர் திறக்கப்பட்டதால் திட்டக்குடி மற்றும் விருத்தாசலம் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ள அதேநேரத்தில், பாசன கால்வாய்க்கால்களைத் தூர்வாரி, வெலிங்டன் ஏரியின் கரையைப் பலப்படுத்தினால் விவசாயிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கும் என்று கூறினர்.

கடலூர் மாவட்டம், திட்டக்குடி வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் மு.வடநேரே 2017-18-ம் ஆண்டு பாசனத்துக்காகத் தண்ணீர் திறந்து வைத்தார். நீர் இருப்பு மற்றும் பருவமழையைக் கருத்தில்கொண்டு 23 நாள்களுக்குத் தற்போது 250 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதன் மூலம் திட்டக்குடி மற்றும் விருத்தாசலம் பகுதிகளில் உள்ள சுமார் 62 கிராமங்களில் 24,060 ஏக்கர் விளைநிலங்கள் பாசனவசதி பெறும்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள், "பாசனத்துக்காகத் தண்ணீர் திறப்பு என்பது பெரும் மகிழ்ச்சிதான். அதே சமயத்தில், பாசனக் கால்வாய்களைத் தூர்வாரி, வெலிங்டன் ஏரியின் கரையைப் பலப்படுத்தினால் விவசாயிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கும். இதற்காகப் பலமுறை நிதி ஒதுக்கியிருக்கிறார்கள். அப்போதெல்லாம் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் கணக்குக்காகத் தூர்வாரிவிட்டு ஒதுக்கிய பணத்தைச் சுருட்டிவிட்டார்கள். இந்தத் தண்ணீர் திறப்பும் அப்படித்தான். ஏரியில் உள்ள தண்ணீர் வற்றியதும் வண்டல் மண்ணைச் சுரண்டத்தான் என்று ஆளுங்கட்சியினர் சிலர் கூறுகின்றனர். நீர்ப்பிடிப்பு இருந்தால்தானே நிலத்தடி நீர்மட்டம் உயரும். கோடைக்காலம் என்றால் இப்பகுதிகளில் விவசாயமே இருக்காது. எல்லாமே வரண்டு போய்விடும். அப்போது, குடிக்கத் தண்ணீர் கிடைத்தாலே போதும் என்ற நேரத்தில் விவசாயத்தை எப்படி நினைத்துப் பார்க்க முடியும்" என்கிறார்கள் வேதனையோடு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!