தி.நகர் சுரங்கப்பாதையில் சிக்கிய தனியார் சொகுசுப் பேருந்து!

சென்னை தி.நகரில் உள்ள துரைசாமி சுரங்கப்பாதையில் தனியார் சொகுசுப் பேருந்து சிக்கிக்கொண்டது. இதனால் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஜே.எம்.எஸ் என்ற தனியார் சொகுசுப் பேருந்து இன்று மாலை 5 மணிக்கு தி.நகர் நோக்கி வந்துகொண்டிருந்தது. தி.நகர் துரைசாமி சுரங்கப்பாதையில் பேருந்து வேகமாக வந்துகொண்டிருந்தபோது மேல் பகுதி திடீரென சிக்கிக்கொண்டதோடு பலத்த சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் கீழே இறங்கி வந்துபார்த்துள்ளார். அப்போது, சுரங்கப்பாதை கட்டடத்தில் பேருந்தின் மேல்கூரை சிக்கியிருந்ததைப் பார்த்து தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தார். எப்போதும் வாகனங்கள் செல்லும் சுரங்கப்பாதையில் இப்பேருந்து சிக்கிக்கொண்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால், பேருந்தைப் பின் பக்கமாக அங்கு கூடியிருந்தவர்கள் தள்ளினர். அவர்களால் பேருந்தை அங்கிருந்து வெளியேற்ற முடியவில்லை. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறை வீரர்கள், கடும் முயற்சிக்குப் பின்னர், பேருந்தைச் சுரங்கப் பாதையிலிருந்து மீட்டனர். இதைத் தொடர்ந்து போக்குவரத்து நெரிசலைக் காவல்துறையினர் சரி செய்தனர். "படுக்கை வசதிகள் கொண்ட தனியார் சொகுசுப் பேருந்துகள் மற்ற பேருந்துகளைவிட உயரம் அதிகம். இதனால்தான் பேருந்து சுரங்கப்பாதையில் சிக்கிக்கொண்டது. இப்படிப்பட்ட பேருந்துகள் சுரங்கப்பாதையில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்" என்று காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!