வெளியிடப்பட்ட நேரம்: 19:10 (28/12/2017)

கடைசி தொடர்பு:19:20 (28/12/2017)

மத்திய அரசின் முத்தலாக் சட்டத்துக்கு அ.தி.மு.க எதிர்ப்பு!

மக்களவையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய முத்தலாக் சட்டத்துக்கு அ.தி.மு.க எதிர்ப்புத் தெரிவித்தது. 

இஸ்லாமியர்கள் தலாக் என்று 3 முறை கூறி விவாகரத்து செய்வதை சட்ட விரோதம் என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி தீர்ப்பளித்தது. இந்தநிலையில், முத்தலாக்கை சட்ட விரோதமாக அறிவிக்கும் மசோதாவை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். அதில், முத்தலாக் கூறி விவாகரத்து செய்தால், அது கிரிமினல் குற்றமாகப் பாவிக்கப்பட்டு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கவும் அந்தச் சட்டத்தில் இடமளிக்கப்பட்டுள்ளது. முத்தலாக்கைக் கிரிமினல் குற்றமாக்கும் நடைமுறைக்கு காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தது. 

இதுகுறித்து மக்களவையில் பேசிய ராமநாதபுரம் தொகுதி அ.தி.மு.க  எம்.பி. அன்வர் ராஜா, ‘மூன்று முறை தலாக் கூறுவது தவறுதான். ஆனால், முத்தலாக் மசோதாவில் கிரிமினல் குற்றம் வருவதைத்தான் தமிழக அரசு எதிர்க்கிறது. முத்தலாக் சட்டத்தில் உள்ள பிரச்னைகளுக்கு முஸ்லிம் சட்ட வாரியம்தான் தீர்வு காண வேண்டும். முத்தலாக் தடைச்சட்டம் பெண்களுக்குப் பயனளிக்காமல் போய்விடக் கூடாது. முத்தலாக் செய்தால் பெண்ணுக்கு நிவாரணம் வழங்கவும் இஸ்லாமில் வழியிருக்கிறது. இந்த மசோதாவால், இஸ்லாமியப் பெண்களுக்கு எந்தப் பலனும் கிடைக்காது. கணவர் சிறைக்குச் சென்றுவிட்டால், குடும்பத்தைப் பார்த்துக்கொள்வது யார்?

அதனால், 3 வருட சிறைத்தண்டனையை மசோதாவில் இருந்து நீக்க வேண்டும். முத்தலாக்கை கிரிமினல் குற்றமாகக் கருதி தண்டனை அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. முத்தலாக் சட்ட மசோதாவை நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்பி பரிசீலிக்க வேண்டும்’ என்று பேசினார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் பா.ஜ.க-வுக்கு, தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க அரசு ஆதரவு தெரிவித்து வருவதாகப் பரவலாகப் பேசப்பட்டு வந்தது. இந்தநிலையில், மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்த மசோதாவுக்கு அ.தி.மு.க எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.