வெளியிடப்பட்ட நேரம்: 20:41 (28/12/2017)

கடைசி தொடர்பு:20:41 (28/12/2017)

ரஜினிகாந்த் என்ன செய்ய வேண்டும்... மக்கள் கருத்து #VikatanSurveyResults

ரஜினிகாந்த்

'மீண்டும்' அரசியல் உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் ரஜினிகாந்த். இந்த 'மீண்டும்' என்ற வார்த்தை அவரது 22 ஆண்டுகால அரசியலைச் சொல்லும். காலம் சிலருக்கு ஒருமுறை மட்டும் வாய்ப்புகளை வழங்குவதில்லை. அடுத்தடுத்து வாய்ப்புகளைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. அந்தச் சிலரில் ஒருவராக இருக்கிறார் ரஜினிகாந்த்.

"ரஜினி இதையேதான் 22 ஆண்டுகளாகச் சொல்லி வருகிறார்' என்ற விமர்சனங்கள் பரவலாக முன்வைக்கப்பட்டாலும், இப்போதும் ரஜினி பேசியது தலைப்பு செய்தியாகிறது; விவாதமாக்கப்படுகிறது என்றால், அவருக்கு இன்னுமொரு வாய்ப்பு இருக்கிறது என்பதை ஏற்கத்தானே வேண்டும்" என்பது ரஜினி ஆதரவாளர்களின் கருத்தாக இருக்கிறது.

"திரைப்படத்துறை சார்ந்த புள்ளிகளே அரசியல் தலைமைகளாக உருவாகும் போக்குதான், தமிழகத்தில் நீண்டகாலமாக நிலவி வருகிறது. அண்ணா, கலைஞர் இருவரும் திரைத்துறை வசன கர்த்தாக்கள். இதன் பின்னர் வந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என இருவரும் நடிகர்கள். இப்போது திரைத்துறையிலிருந்து வந்த ஜெயலலிதா நம்மிடையே இல்லை. கருணாநிதியும் உடல்நலம் குன்றி, செயல்பட முடியாமல் இருக்கிறார். சினிமா கவர்ச்சியின் பின்னணியில் உருவாகும் அரசியல் ஆளுமைகள் என்பது இப்போதைக்கு ரஜினியை விட்டால் வேறு யாருமில்லை," என்ற ஆதரவுக்குரல்கள் எழுகின்றன. 

ரஜினிகாந்த்

அதேநேரத்தில் "ரஜினிக்கான வாய்ப்பு என்பது 1996ம் ஆண்டோடு முடிந்து விட்டது. இப்போது அவருக்கான ஆதரவும், வாய்ப்புகளும் குறைவாகவே இருக்கும். அரசியல் பிரவேசம் அவருக்கு வாய்ப்புகளைத் தரும், தராது என்பதைக் கடந்து, அவர் அரசியலுக்கு வருவது என்பது நிச்சயம் நடக்காது. அரசியல் களத்தில் ரஜினிகாந்த் என்பவர் முரண்பாடுகள் நிறைந்த ஒரு மனிதர். அதனால்தான் அவர் பேச்சுக்கு அவரே விளக்கம் கொடுக்க வேண்டிய இக்கட்டான சூழல் ஏற்படுகிறது. திரைப்பட வெளியீட்டின் போது அரசியல் பேசுவது அவருக்கு வாடிக்கையான ஒன்று," என்ற எதிர்குரல்களும் பரவலாக ஒலிக்கின்றன.

இந்தச் சூழலில் தன் ரசிகர்களைச் சந்திப்பதற்காக, அடுத்த சந்திப்பை தொடங்கிய ரஜினிகாந்த், ஊடகங்களை வைத்துக்கொண்டு அரசியல் பற்றிய தன் கருத்தை மீண்டும் பேசியிருக்கிறார். "அரசியலுக்கு நான் புதிதல்ல. 1996-ம் ஆண்டு முதல் அரசியலில் உள்ளேன். யுத்தத்துக்கு வந்தால் ஜெயிக்க வேண்டும். வெற்றிக்கு வீரம் மட்டும் போதாது. வியூகமும் வேண்டும். அரசியலில் ஜெயிக்க வியூகம் மிக முக்கியம். ஏன் நான் இத்தனை ஆண்டிகளாக இழுக்கிறேன் எனக் கேட்கிறார்கள். வரும் 31-ம் தேதி என் அரசியல் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவேன். அரசியலுக்கு வருவேன் எனச் சொல்லவில்லை. அரசியல் முடிவை அறிவிப்பேன் என்றுதான் சொல்கிறேன்," எனப் பேசி மீண்டும் பரபரப்பை கிளப்பியிருக்கிறார்.

இந்தச் சூழலில் ரஜினிகாந்த் வரும் 31-ம் தேதி அறிவிக்கும் அறிவிப்பு என்னவாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?. உண்மையில் ரஜினிகாந்த் என்ன செய்யவேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என மக்களின் கருத்துகளைக் கேட்டிருந்தோம். ஆயிரக்கணக்கானோர் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்திருந்தீர்கள்.

 'அரசியல் நிலைப்பாடு குறித்து, டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பேன்' என ரஜினிகாந்த் தெரிவித்துள்ள நிலையில், அவர் அறிவிப்பு என்னவாக இருக்கும் என நினைக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு 51.3 சதவிகிதம் பேர், அரசியல் பிரவேசம் குறித்த எந்த அறிவிப்பும் இருக்காது எனத்தெரிவித்திருக்கிறார்கள். 33.3 சதவிகிதம் பேர் ரஜினிகாந்த் புதுக்கட்சி தொடங்குவார் என்றும், 10 சதவிகிதம் பேர் நடிகர் கமல்ஹாசனை ரஜினி ஆதரிப்பார் என்றும் கருத்துத் தெரிவித்திருந்தனர். வேறு கட்சிகளை ரஜினி ஆதரிக்கக் கூடும் என 5.4 சதவிகிதம் பேர் தெரிவித்திருந்தனர். 

சர்வே முடிவுகள்


'அரசியல் எனக்குப் புதிது அல்ல; அரசியல் பற்றி தெரிந்ததால்தான் வர தயங்குகிறேன்' என ரஜினி சொல்வது...? அவரது வியூகமா, பயமா என்ற கேள்விக்கு, பெரும்பாலானோர் அதாவது 57 சதவிகிதம் பேர், 'அவரது பயத்தைக் காட்டுகிறது' என்று தெரிவித்தனர். 36.9 சதவிகிதம் பேர் 'அது வியூகம்' எனச்சொல்லியிருந்தனர். 6 சதவிகிதம் பேர் கருத்து இல்லை எனப் பதிவு செய்தனர்.

சர்வே முடிவுகள்

'யுத்தத்துக்கு வந்தால் ஜெயிக்கணும். ஜெயிக்க வீரம் மட்டும் பத்தாது. வியூகமும் தேவை' என ரஜினி சொல்வதை...பெரும்பாலானோர் ஏற்றிருக்கிறார்கள். 47.3 சதவிகிதம் பேர், தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி அவசியம் என்ற ரஜினியின் கருத்தை ஏற்றிருக்கிறார்கள். அதற்கு சற்று குறைவக 47 சதவிகிதம் பேர், 'ரஜினி சொல்வதை ஏற்கவில்லை. தேர்தலில் வெற்றி, தோல்வி பார்க்காமல் போட்டியிட வேண்டும்' எனத் தெரிவித்திருக்கிறார்கள். 5.6 சதவிகிதம் பேர் கருத்து இல்லை எனப் பதிவு செய்திருக்கிறார்கள்.

சர்வே முடிவுகள்

'நான் அரசியலுக்கு வர்றேன்னு சொல்லலை. 31ம் தேதி முடிவை அறிவிக்கிறேன்னுதான் சொன்னேன்' என ரஜினி சொல்வது? அரசியல் குறித்த அறிவிப்பை அவர் வெளியிட மாட்டர் என்பதை உணர்த்துவதாகப் பெரும்பாலானோர் (52.6 சதவிகிதம்) கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். ரஜினி இறுதிக்கட்ட ஆலோசனையில் இருப்பதைக் காட்டுகிறது' என 47.4 சதவிகிதம் பேர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

சர்வே முடிவுகள்

ரஜினி என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு, ஆயிரக்கணக்கான பதில்களை வாசகர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அவற்றில் முக்கியமான சில கருத்துகள்.

  • அரசியல் வர விரும்பினால் அதை உடனடியாக அறிவித்து, களம் காண வேண்டும்.
  • அரசியலுக்கு வராமல் தவிர்ப்பது அவருக்கு நல்லது.  தன் ரசிகர்களை நற்பணி இயக்கமாக மாற்ற வேண்டும்.
  • அரசியலுக்கு வராமல் மக்களுக்காகக் களப்பணிகள் செய்யலாம்.
  • ரஜினி தனிக்கட்சி தொடங்க வேண்டும்.
  • மக்களை அவர் குழப்பாமல் சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தலாம்.
  • அரசியலுக்கு வருவது வராததும் அவரின் தனிப்பட்ட விருப்பம். அரசியலுக்கு வருவது அவரின் உரிமையும்கூட. ஆனால் இந்த ஆண்டின் இறுதி நாளிலாவது அரசியல் பற்றி தெளிவாக ஒரு முடிவு எடுக்க வேண்டும்.வீணாக அவரும் குழம்பி, மக்களையும் குழப்பிக்கொண்டிருக்கக் கூடாது.
  • கமலுக்கு தன் ஆதரவை தெரிவித்துவிட்டு ஓர் ஆலோசகர் போல் இருக்கலாம் .  சினிமாவில் அமிதாப்பச்சன் போல் கதாபாத்திரம் ஏற்று நடிப்போடு நறுத்திக்கொள்ள வேண்டும் . தீவிர அரசியலுக்கு அவரது உடல் நிலை ஒத்துழைப்பது கடினம் . 

ரஜினிக்கு அரசியல் ஆசை நிறைந்திருப்பதைதான்  அவரின் தொடர்ச்சியான பேச்சு உணர்த்துகிறது. இப்போது பேசியதும் அப்படித்தான். பார்ப்போம். இன்னும் 3 நாள்கள்தானே இருக்கிறது.


டிரெண்டிங் @ விகடன்