``ஜெயலலிதாவைப்போல நான் பொய் சொல்லவில்லை'' : கடுகடுத்த ராசா!

2ஜி வழக்கிலிருந்து விடுதலையான பிறகு, ஆ.ராசா கோவை மற்றும் நீலகிரிக்கு விசிட் அடித்து வருகிறார். நேற்று கோவை மாவட்டம் சென்ற ராசா, இன்று நீலகிரி மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்து தி.மு.க தொண்டர்கள் மற்றும் மக்களைச் சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார்.

ராசா

இதையொட்டி, கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் தடபுடலாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர் செல்லும் இடங்களெல்லாம் பேனர்கள் வைத்து, பட்டாசு வெடித்து, மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டன. ஊட்டியில் மக்கள் மற்றும் தொண்டர்களை அவர் சந்தித்தார். அவருக்கு பூ மாலைகள், சால்வைகள் அணிவித்து தி.மு.க-வினர் அதகளம் செய்தனர்.

இதன் பிறகு, ராசா பேசியதாவது, "7 ஆண்டுகளுக்கு முன்பு 2ஜி வழக்கைப் பூதாகரமாக்கி, கிராமப்புறங்களிலும் தொலைத்தொடர்பு வசதி கிடைப்பதற்காக எடுத்த முயற்சியை ஊழல் என்று சித்தரித்தனர். அவற்றை நம்பி, விஜிலென்ஸ் கமிஷன், மத்திய கணக்காயம், சி.ஆர்.ஜி, சி.பி.ஐ ஆகியவற்றால் வழக்கு தொடரப்பட்டது. எனது உறவினர்களின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

ராசா

தற்போது இது ஜோடிக்கப்பட்ட வழக்கு, மோசடி ஏதும் நடைபெறவில்லை என்று கூறி நீதிபதி சைனி தீர்ப்பு வழங்கியுள்ளார். பொதுவாக குற்றவாளிகள் சாட்சிக் கூண்டுக்குப் போவதில்லை. ஆனால், 'என்னிடம் விசாரணை நடத்துங்கள்' என்று நானே சாட்சியாக மாறினேன். சி.பி.ஐ என்னைத் துருவித் துருவி விசாரணை நடத்தியது. நான் கோபப்படவில்லை. ஜெயலலிதாவைப்போல, வேறு யாரோ போட்ட கையெழுத்தை என்னுடைய கையெழுத்து என்று நீதிமன்றத்தில் பொய் சொல்லவில்லை. 2ஜி வழக்கு குறித்து, சி.பி.ஐ-க்குத் தெரியவில்லை.

இந்த வழக்கை வைத்து அரசியல் கட்சிகள் அரசியல் நடத்தின. சதிகள் தீட்டினர். 15 மாதங்கள் சிறையில் இருந்தேன். ஒரு குழந்தையைத் தாய் காப்பாற்றுவதுபோல, கலைஞர் என்னைக் காப்பாற்றினார். நீலகிரி மக்கள் காட்டிய அன்புக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

2ஜி வழக்கில் நானும் கனிமொழியும் சிறைக்குச் சென்றுவிடுவோம் என்றெல்லாம் எதிர்பார்த்தனர். ஆனால், அதெல்லாம் நடக்கவில்லை. மீண்டும் தி.மு.க ஆட்சி வரும். ஸ்டாலின் முதல்வராவார். உங்களுடைய பிரச்னைகளையெல்லாம் நாங்கள் ஒன்றிணைந்து சரி செய்வோம்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!