வெளியிடப்பட்ட நேரம்: 20:50 (28/12/2017)

கடைசி தொடர்பு:20:50 (28/12/2017)

வாட்ஸ் அப் மூலம் லாட்டரி விற்பனை! புதுச்சேரியில் புது ரூட்

புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட லாட்டரிகள் வாட்ஸ் அப் மூலம் விற்கப்படுவது பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

லாட்டரி

தமிழகத்தைப் போல புதுச்சேரியிலும் லாட்டரி சீட்டுகள் விற்பனை தடை செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும் பல இடங்களில், புதுப்புது யுக்திகளைக் கையாண்டு மறைமுகமாக லாட்டரி விற்பனை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. காவல்துறை அவ்வப்போது அவர்களைக் கைது செய்தாலும் கடுமையான நடவடிக்கை இல்லாததால் இந்தக் கும்பலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கடந்த நவம்பர் மாதம் லாஸ்பேட்டை குறவர் குடியிருப்புப் பகுதியில் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை செய்த 5 பேர் கும்பலை போலீஸ் கைது செய்தது. அப்போது 3 நம்பர் லாட்டரியை கேரள லாட்டரி என்று சொல்லி வாட்ஸ் அப் மூலம் விற்பனை செய்தது தெரிய வந்ததும் அதிர்ச்சியில் உறைந்தது போலீஸ்.

புதுச்சேரி

கேரள லாட்டரி என்று சொல்லி விற்கப்பட்டாலும் உண்மையில் கேரள லாட்டரிக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று சொல்லும் போலீஸ், ஒரு நம்பருக்கு 50 ரூபாய் என வசூல் செய்து ஒரு நாளைக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை ஏமாற்றி விடுவார்கள் என்றும் சொல்கிறது.

இந்நிலையில் இன்று புதுச்சேரி-விழுப்புரம் சாலையில் இருக்கும் திருவண்டார்கோவிலில் வாட்ஸ் அப் மூலம் லாட்டரி விற்கப்படுவதாக திருபுவனை போலீஸுக்குத் தகவல் சென்றது. அதன் அடிப்படையில் எஸ்.ஐ.பிரியா தலைமையிலான போலீஸ் திருவண்டார்கோவில் நான்கு முனை சந்திப்பில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கையில் இரண்டு செல்போன்களை வைத்திருந்த வாலிபர் ஒருவர் ஒரு போனில் வரும் தகவல்களை மற்றொரு போனில் அனுப்பிக்கொண்டிருந்தார். அதைப் பார்த்து சந்தேகமடைந்த போலீஸார் அந்த வாலிபரைப் பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் பெயர் செல்வம் என்பதும், கேரள லாட்டரிக்கான 3 நம்பர் லாட்டரி சீட்டுகளின் முடிவுகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிக்கொண்டிருந்ததும் தெரியவந்தது. அதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸ் அவரிடம் இருந்த இரண்டு செல்போன்களையும், லாட்டரி விற்றதன் மூலம் கையில் வைத்திருந்த 2,820 ரூபாய் ரொக்கப்பணத்தையும் பறிமுதல் செய்தது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க