வெளியிடப்பட்ட நேரம்: 21:10 (28/12/2017)

கடைசி தொடர்பு:21:10 (28/12/2017)

நெல்லையில் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு!

நெல்லை மாவட்டத்தில் நிலநடுக்கம் உணரப்பட்ட பகுதிகளில் வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள். நிலஅதிர்வு தொடர்பாக அச்சமடையத் தேவையில்லை எனப் பொதுமக்களிடம் அதிகாரிகள் விளக்கிக் கூறினார்கள். 

அதிகாரிகள் ஆய்வு

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள அச்சன்புதூர், வடகரை, உள்ளிட்ட பகுதிகள் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கின்றன. இந்தப் பகுதிகளில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 10 விநாடிகள் வரை உணரப்பட்ட இந்த நிலஅதிர்வால் வீடுகளில் பாத்திரங்கள் உருண்டன. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் வீட்டை விட்டு ஓடி வந்தார்கள். இரவு முழுவதும் அந்தப் பகுதியில் பதற்றம் நீடித்தது. நிலநடுக்கம் காரணமாக அப்பகுதி முழுவதும் இடி இடித்தது போன்ற பயங்கர சத்தம் கேட்டதாக மக்கள் தெரிவித்தனர். இந்த நிலநடுக்கத்தை தென்காசி அருகே உள்ள மேலகரம் பகுதி மக்களும் உணர்ந்தனர். மேலும், சாம்பவர் வடகரை பகுதியிலும் நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதி மக்களும் வீடுகளிலிருந்து அலறியடித்துக் கொண்டு, வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கம் கேரளாவிலும் உணரப்பட்டது. அச்சன்கோவில், ஆரியங்காவு, கழுதுருட்டி, தென்மலை அணைப்பகுதி, புனலூர், பத்தினம்திட்டா ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களும் இந்த நில நடுக்கத்தை உணர்ந்தனர். 

இது தொடர்பாக செங்கோட்டை தாசில்தார் செல்வக்குமார், பண்பொழி வருவாய் ஆய்வாளர் பாக்கிய லெட்சுமி மற்றும் அதிகாரிகள் வடகரை பகுதிக்குச் சென்று ஆய்வு நடத்தினர். மேலும் நில அதிர்வு உணரப்பட்ட செங்கோட்டையின் சுற்றுப்புறக் கிராமங்களுக்கும் சென்று மக்களைச் சந்தித்த அதிகாரிகள், மிதமான இந்த நில நடுக்கத்தால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பதையும் அதனால் பொதுமக்கள், இதுகுறித்து அச்சமடையத் தேவையில்லை எனவும் தெரிவித்தனர்.