வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (28/12/2017)

கடைசி தொடர்பு:21:30 (28/12/2017)

ஜல்லிக்கட்டு வெற்றியை நினைவுகூரும் ’செம்புலம்’ கால்நடை திருவிழா!

sempulam, செம்புலம்

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் வெற்றியை நினைவுகூரும் வகையிலும், தமிழ்நாட்டின் பாரம்பர்ய கால்நடைகளை இப்போதைய தலைமுறையிடத்தில் கொண்டுசேர்க்கும் விதமாகவும் ஜனவரி 6 மற்றும் 7-ம் தேதிகளில் சென்னை ராஜீவ் காந்தி சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ’செம்புலம் – தி கிரேட்னஸ் ஆஃப் ரூட்ஸ்’ என்னும் தலைப்பில் கால்நடை திருவிழா நடைபெற உள்ளது.

கால்நடைகளின் முக்கியத்துவம் குறித்தும், அதை சார்ந்து இயங்கும் இயற்கை வேளாண்மை, பொருளாதாரம், பாதுகாப்பான உணவுமுறை குறித்தும் எடுத்துரைக்க பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் ஒன்றிணைகிறார்கள். ’செம்புலம்’ கால்நடை திருவிழாவை 'விவசாயத் தோழமை இயக்கத்தி'ன் துணையோடு, 'தேனு கால்நடை பாதுகாப்பு அறக்கட்டளை'யும், தென்னிந்திய அங்கக உற்பத்தியாளர் மற்றும் விற்பனை சங்கமும் இணைந்து நடத்துகின்றனர். 'தேனு கால்நடை பாதுகாப்பு அறக்கட்டளை'யின் ராஜா மார்த்தாண்டன் கூறுகையில், “நமது தமிழ்நாட்டில் மட்டும்தான் 30க்கும் மேற்பட்ட கால்நடை இனங்கள் உள்ளன. இதைக் காட்சிப்படுத்துவது மட்டுமல்லாமல் இதன் முக்கியத்துவத்தையும் மக்களுக்குத் தெரிவிக்க உள்ளோம். மேலும், விவசாயம், நீர் நிலைகள் என்ற அடிப்படையில் நிகழ்ச்சி அரங்கேற உள்ளதால், அதை குறிக்கும் விதமாக செம்மையான புலம் - ’செம்புலம்’ என்ற தலைப்பில் நிகழ்ச்சியை நடத்துகிறோம். இது ஜல்லிக்கட்டு வெற்றியின் ஓராண்டை நினைவுகூரும் வகையில் நிகழ உள்ளது” என்றார். 

செம்புலம், sempulam

"பறையாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், கரகாட்டம் போன்ற பாரம்பர்ய கலைகளும், விளையாட்டுகளும் நகரத்து குழந்தைகளுக்குப் புதிய அனுபவமாக இருக்கும். அதைப் போற்றிப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை என்பதை ’செம்புலம்’ உணர்த்தும்" என்கிறார் தென்னிந்திய அங்கக உற்பத்தியாளர் மற்றும் விற்பனை சங்கத்தின் தலைவர் ஜிதேந்திர பிரசாத். “கடன் தொல்லை மற்றும் விலை எற்ற, இறக்கம் காரணமாகவும், அதிக பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவதாலும் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். இயற்கை விவசாயம், உயிரோட்ட விவசாயம், இடுபொருள்கள் மற்றும் பலதரப்பட்ட தலைப்புகளில் நிகழ்ச்சிகள் செம்புலத்தில் இருக்கும்” என்று விவசாயத் தோழமை இயக்கத்தின் சார்பில் நவீன் சுப்ரமணியன் கூறினார். இரண்டு நாள்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியானது காலை 9 மணி முதல் இரவு 10 மணிவரை நடைபெறவுள்ளது. மேலும் தகவல்களை ‘SempulamTN’ என்ற முகப்புத்தக முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.