வெளியிடப்பட்ட நேரம்: 21:50 (28/12/2017)

கடைசி தொடர்பு:21:50 (28/12/2017)

பயிர்க்காப்பீட்டுப் பணம் எப்போது கிடைக்கும்? குறைதீர் கூட்டத்தில் கொந்தளித்த விவசாயிகள்!

கூட்டுறவு வங்கிகளில் பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை கிடைத்தும், விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்காமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். 

                       
இந்நிலையில், அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் லெட்சுமி பிரியா தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், உரக்கடைகளில் விற்பனை செய்யப்படும் உரம், பூச்சி மருந்துகளை கள ஆய்வு செய்ய வேண்டும். தரமற்ற விதைப்பொருள்கள் விற்பனை செய்வதன் மூலம் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். கூட்டுறவு வங்கிகளில் பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை கிடைத்தும், விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள்.

                                             

பருத்திக்குப் பூச்சிமருந்து அடிக்கும்போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும். பூச்சி மருந்து அடிக்கும் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு குறித்து விவசாயிகளுக்கு விழிப்புஉணர்வு ஏற்படுத்த வேண்டும். பாதுகாக்கப்பட்ட குடிநீர் என்று விநியோகம் செய்யப்படும் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர்த் திட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் சாக்கடை நீர் கலந்து வருகின்றது. இதனை சீரமைக்க வேண்டும். மருதையாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும். திருமானூர் பகுதிகளில் காட்டுப்பன்றிகள் தொல்லை இருப்பதால், அவற்றைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர். கூட்டத்தில் விவசாய சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.