மலைகளின் அரசியையும் விட்டுவைக்காத தமிழக அரசு... திணறும் ஊட்டி!

எத்தனை உயிர்கள் போனாலும், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடியே தீருவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு சுற்றி வருகிறது தமிழக அரசு, கோவையில் மென்பொறியாளர் ரகு மரணம், ஒக்கி புயல் பாதிப்பு, தற்போது உதகையில் பாபு என்று உயிர்ப்பலிகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. உதகையில் நாளை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது.

ஊட்டி

இதையொட்டி, உதகை முழுவதும் பேனர்கள், அலங்கார வளைவுகள், அ.தி.மு.க கொடிகள் வைக்கப்பட்டுள்ளன. உதகையில் இது சீசன் நேரம். சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ள இந்த நேரத்தில், போக்குவரத்துக்கு கடும் நெருக்கடியை ஆளுங்கட்சியினர் கொடுத்துள்ளனர். இதில் தி.மு.க-வும் தங்களது பங்குக்கு, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் வருகைக்காக போக்குவரத்து நெருக்கடி கொடுத்துள்ளனர். நடைமேடையைக்கூட விட்டுவைக்காமல், அதில் கொடிக் கம்பத்தை நட்டு, மக்களை நடக்க முடியாதபடி செய்துள்ளனர்.

ஊட்டி

இதன்காரணமாக பாபு என்ற கூலித்தொழிலாளி உயிரிழந்துவிட்டார். 6 முறை தள்ளிப்போகி, தற்போது அவசரஅவசரமாக நூற்றாண்டு விழா நடைபெற உள்ளதால், ஆளையே உருக்கும் கடும் குளிரிலும் ஏராளமான தொழிலாளர்கள் நள்ளிரவிலும் பணிபுரிந்து வருகின்றனர். மலைப் பாதையில் தொடர்ந்து பேனர்களும், மற்ற உபகரணங்களும் உதகைக்கு வந்த வண்ணம் உள்ளது.

ஊட்டி

ரகுவின் உயிரிழப்புக்கு லாரி டிரைவரும், தி.மு.க-வும்தான் காரணம் என்று மழுப்பிய தமிழக அரசு, பாபுவின் மரணத்துக்கும் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை நடத்தத்தான் போகிறது. நாளை நடைபெற உள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் அம்மாவின் ஆட்சி சிறப்பாக நடக்கிறது என்று அனைவரும் பெருமை பேசத்தான் போகிறார்கள். ஆனால், ரகு மற்றும் பாபுவின் குடும்பத்துக்கு உங்களது பதில் என்ன?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!