வெளியிடப்பட்ட நேரம்: 05:31 (29/12/2017)

கடைசி தொடர்பு:07:15 (29/12/2017)

கந்துவட்டியை ஒழிக்க சபதம் ஏற்றுள்ளோம்; பாண்டியன் கிராம வங்கித் தலைவர் பேச்சு..!

`தமிழகத்தில் கந்துவட்டியை முழுவதுமாக ஒழிக்க சபதம் எடுத்துள்ளோம்' என கந்துவட்டி விழிப்பு உணர்வு முகாமில் பாண்டியன் கிராம வங்கித் தலைவர் தெரிவித்துள்ளார். 

ராமநாதபுரத்தில் பாண்டியன் கிராம வங்கியின் சார்பில் கந்து வட்டி ஒழிப்பு விழிப்பு உணர்வு முகாம் மற்றும் கடன் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் நடராஜன் தலைமையில் நடந்தது. இந்த முகாமில் 2,255 பயனாளிகளுக்கு 5.05 கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

கந்துவட்டி ஒழிப்பு விழிப்புணர்வு முகாமில் மாவட்ட ஆட்சியர்


கந்துவட்டி ஒழிப்பு முகாமுக்கு முன்னிலை வகித்த பாண்டியன் கிராம வங்கியின் தலைவர் ரவிச்சந்திரன், ''வங்கிகள் மக்களின் நண்பர்களாக இருக்க வேண்டும். மக்கள் கூடுதல் வட்டிக்கு கடன் வாங்கி கஷ்டப்பட விட்டு விடக்கூடாது. முக்கியமாக கந்து வட்டிக்கு கடன் வாங்கக்கூடாது. திருநெல்வேலியில் 200 பேருக்கு 10 கோடி ரூபாய் மதிப்பில் குறைந்த வட்டிக்கு கடன் வழங்கி பலரையும் கந்து வட்டி கொடுமையிலிருந்து விடுவித்திருக்கிறோம்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 5 கிராமங்களில் உள்ள மக்களுக்கு 6 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. இக்கிராமங்களில் உள்ள மக்கள் மது அருந்த மாட்டோம் எனவும் முக்கிய இடங்களில் எழுதி வைத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலும் 6 கோடி ரூபாய்க்கு குறைந்த வட்டியில் கடனுதவிகள் வழங்கியிருக்கிறோம். 

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் 325 கிளைகளோடு செயல்பட்டு வரும் பாண்டியன் கிராம வங்கி 11 ஆயிரம் கோடி ரூபாய் மொத்த வணிகம் செய்திருக்கிறது.1996 முதல் லாபத்தில் இயங்கி வரும் வங்கியாகும். தமிழகத்தில் கடற்கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்களை வீடு வீடாகவும், தெருத்தெருவாகவும் கிளை மேலாளர்கள் நேரில் சென்று சந்தித்து கிராமத்து மக்களுக்குத் தேவையான தொழில் கடன்களை குறைந்த வட்டிக்கு வழங்கி பல கிராமங்களைக் கந்து வட்டிக் கொடுமையிலிருந்து காப்பாற்றியிருக்கிறோம்.

ஆழ்கடல் மீன்பிடிக்கத் தேவைப்படும் விசைப்படகுகள் ஒன்று 80 லட்ச ரூபாயாகும். இதில் 40 லட்ச ரூபாய் மத்திய அரசும்,16 லட்சம் மாநில அரசும் மானியமாக தருகிறது. 8 லட்ச ரூபாய் மக்கள் பங்களிப்பு போக மீதி தொகை 16 லட்ச ரூபாய் பாண்டியன் கிராம வங்கி சார்பில் கடனுதவியாக வழங்கப்படுகிறது. ராமநாதபுரத்தில் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வாங்க முதல் முதலாக பாண்டியன் கிராம வங்கி 22 பேருக்கு கடனுதவியளித்து அதனடிப்படையில் கப்பல்கள் கட்டும் பணி தொடங்கியுள்ளது.

ராமநாதபுரத்தில் கருப்பட்டி செய்யும் பனைத்தொழிலாளர்கள் 206 பேருக்கு மொத்தம் 1.85 கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்பட்டுள்ளது. கல்வி, தொழில், பெண்கள் முன்னேற்றம் ஆகியனவற்றுக்கு பிணையம் இல்லாத கடன்களும் வழங்கிவருகிறோம். இவற்றின் மூலம் கந்துவட்டியை முழுதுமாக ஒழிக்க சபதம் எடுத்துச் செயலாற்றி வருகிறோம்'' என்றார். இந்த முகாமில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சியாமளாநாதன், நபார்டு வங்கி மேலாளர் மதியழகன், மாவட்டத் தொழில் மைய பொதுமேலாளர் மாரியம்மாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.