வெளியிடப்பட்ட நேரம்: 06:34 (29/12/2017)

கடைசி தொடர்பு:07:08 (29/12/2017)

பாம்பன் பாலத்தைக் கடந்துசென்ற சுற்றுலா கப்பல்கள்..!

கோவாவில் கட்டப்பட்ட 3 சுற்றுலாப் பயணிகள் கப்பல்கள் இன்று பாம்பன் பாலத்தைக் கடந்து அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயருக்கு சென்றது.

பாம்பன் பாலத்தை கடந்து சென்ற சுற்றுலா கப்பல்கள்

நாட்டின் மேற்குப் பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் இருந்து கிழக்குப் பகுதியில் உள்ள துறைமுகங்களுக்கு செல்ல வேண்டிய கப்பல்கள் பாம்பன் பாலத்தின் வழியாக கடந்துசெல்கின்றன. இந்தக் கப்பல்கள் பாம்பன் ரயில் பாலத்தைக் கடந்து செல்ல ஏதுவாக ரயில் போக்குவரத்து இல்லாத நேரங்களில் பாலத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஹெர்சர் தூக்கு பாலம் திறக்கப்படுகிறது. 
இந்நிலையில், இன்று கோவா துறைமுகத்தில் புதிதாக கட்டப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்கான 3 சுற்றுலாக் கப்பல்கள் பாம்பன் பாலத்தின் வழியாக அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயருக்குச் சென்றன.

ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்துச் சென்ற இந்தச் சுற்றுலாக் கப்பல்களை பாம்பன் சாலை பாலத்தின் மீது நின்று நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்தனர்.  இந்த சுற்றுலாக் கப்பல்களுடன் கடந்த இரு தினங்களுக்கு முன் பாலத்தைக் கடக்க முயன்றபோது இன்ஜின் பழுது ஏற்பட்டதால் மன்னார் வளைகுடா கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு கப்பலும் பழுது நீக்கப்பட்டு இன்று பாம்பன் பாலத்தைக் கடந்து கொல்கத்தா துறைமுகத்தை நோக்கிச் சென்றது.