ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்விகுறித்து ஆலோசனை - தி.மு.க. உயர்நிலைக் குழு இன்று கூடுகிறது!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்விகுறித்து ஆய்வு செய்வதற்காக தி.மு.க.வின் உயர்நிலைக் குழுக் கூட்டம் சென்னையில் இன்று மாலை நடக்கிறது. 

ஜெயலலிதா மறைவால் காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆகிய கட்சிகளை ஓரங்கட்டி சுயேச்சையாகக் களமிறங்கிய  டி.டி.வி. தினகரன் வெற்றிபெற்றார். இந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் களமிறக்கப்பட்ட மருது கணேஷ், டெபாசிட்கூட பெற முடியாமல் தோல்வியைத் தழுவினார். தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தில் இருக்கும் தி.மு.க. டெபாசிட் இழந்தது அக்கட்சி வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுதொடர்பாக விசாரணை நடத்த தி.மு.க. கொறடா சக்கரபாணி தலைமையில் குழு ஒன்றை தி.மு.க. தலைமை அமைத்துள்ளது. அந்த குழுவினர் வரும் 31-ல் தங்கள் அறிக்கையைத் தலைமையிடம் அளிக்க உள்ளனர். 

இடைத்தேர்தல் தோல்விகுறித்து ஆலோசனை நடத்துவதற்காக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில், தி.மு.க. உயர் நிலைக் குழுக் கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாலை 5 மணிக்குத் தொடங்க உள்ள இந்த கூட்டத்தில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் களப்பணி ஆற்றாத நிர்வாகிகள்மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன், முதன்மைச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர். ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் நிர்வாகிகள் பலர் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!