வெளியிடப்பட்ட நேரம்: 10:50 (29/12/2017)

கடைசி தொடர்பு:11:03 (29/12/2017)

விசைப்படகு மீனவர்களுக்குத் துணைபோகும் அதிகாரிகளைக் கண்டித்து நாட்டுப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தம்!

விசைப்படகு மீனவர்களின் விதிமீறல் மீன்பிடிப்புக்குத் துணைபோகும் அதிகாரிகளைக் கண்டித்து ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள
10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தம்

விசைப்படகு மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும், மீன்பிடித்தல் சட்டத்துக்கு எதிராக விசைப்படகு மீனவர்கள் கடலில் 6 நாள்கள் வரை தங்கி இருந்து மீன்பிடிப்பதை அனுமதிக்ககூடாது, கடற்கரையோரத்தில் 3 கி.மீ.க்குள் விசைப்படகு மீனவர்கள் கடலில் மீன்பிடித்து, நாட்டுப்படகு மீனவர்களின் வலைகளையும் மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்துகின்றனர். கீழக்கரையிலும் ஏர்வாடியிலும் சீன இன்ஜின்களைப் பொருத்தி விசைப்படகு மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். எனவே, விசைப்படகு மீனவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாட்டுப்படகு மீனவர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளரான பாம்பனைச் சேர்ந்த அருள் தலைமையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜனை சந்தித்து புகார் செய்திருந்தனர்.

இந்தப் புகாரின் தொடர்ச்சியாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மீன்வளத்துறைக் கூடுதல் இயக்குநர் அலுவலகத்தில் விசைப்படகு மீனவர்கள் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கலந்துகொண்டு பேசும் சமாதானக் கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. கூட்டத்துக்கு மீன்வளத்துறையின் ராமநாதபுரம் மாவட்ட துணை இயக்குநர் ஐசக் ஜெயசீலன் தலைமை வகித்தார். கூட்டத்தில் நாட்டுப்படகு மீனவர்களின் கோரிக்கைகள் முழுமையாக ஏற்கப்படவில்லை எனக் கூறி நாட்டுப்படகு மீனவர்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் சமாதனாப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை நாட்டுப்படகு மீனவர்கள் தொடங்கியுள்ளனர். இந்த வேலைநிறுத்தம் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பாம்பன் முதல் முந்தல் வரையிலான தென்கடல் பகுதியில் உள்ள 2 ஆயிரம் நாட்டுப் படகுகளைச் சார்ந்து மீன்பிடி தொழில் செய்யும் சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.