வெளியிடப்பட்ட நேரம்: 11:45 (29/12/2017)

கடைசி தொடர்பு:12:58 (29/12/2017)

`சசிகலா மௌன விரதமா... வெறுப்பா?' - தினகரனைத் தவிக்கவிட்ட சிறை சந்திப்பு #VikatanExclusive

சசிகலா

ன் வாழ்நாளில் மௌன விரதத்தையே கடைப்பிடிக்காத சசிகலா, 'ஜனவரி இறுதி வரையில் மௌன விரதம் இருப்பார்' என டி.டி.வி.தினகரன் கூறியதை ஆச்சர்யத்தோடு கடந்து செல்கின்றனர் மன்னார்குடி உறவுகள். 'ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றி மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், அதைக் கொண்டாடும் மனநிலையில் சசிகலா இல்லை. தினகரன் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்' என்கின்றனர் மன்னார்குடி உறவினர்கள். 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்திக்க முடிவு செய்தார் தினகரன். தேர்தலுக்கு முதல்நாள் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை வெளியிட்டதைச் சசிகலாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. `தினகரன் உடன் இருக்கும் வெற்றிவேலின் கீழ்த்தரமான செயல்' எனக் காட்டமாக விமர்சித்தார் கிருஷ்ணபிரியா. தினகரனுக்கும் இளவரசி குடும்பத்துக்கும் இடையில் கடும் மோதல் மூண்டது. சத்தியம் வாங்கிக்கொண்டு கொடுத்த வீடியோவை பொதுவெளியில் உலவவிட்டதைச் சசிகலா ரசிக்கவில்லை. `ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றாலும் தினகரனைச் சந்திக்க எனக்கு விருப்பமில்லை' என உறுதியாகக் கூறியிருந்தார் சசிகலா. அதற்கு ஏற்றார்போல நேற்று தினகரனிடம் ஒருவார்த்தைகூடப் பேசாமல் அனுப்பிவிட்டார் சசிகலா. 

பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் நடந்த விஷயங்கள் குறித்து, சசிகலா ஆதரவு நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். "சசிகலா மௌன விரதம் இருக்கிறார் என்ற தகவலை அறியாமலா, தினகரன் சிறைக்குச் சென்றிருப்பார். அப்படி எதுவும் இல்லை. தினகரன் முகத்தில் விழிப்பதையே சசிகலா விரும்பவில்லை. இப்படியொரு சந்திப்பு நடக்காமல் போனால், அரசியல்ரீதியாக வேறுமாதிரியான விமர்சனங்கள் கிளம்பும் என்பதால்தான் சந்திக்க இசைவு தெரிவித்தார். அதற்கு முன்னதாக, வீடியோ விவகாரம் குறித்து தன்னுடைய நிலையைத் தெரியப்படுத்த பெங்களூரு புகழேந்தியை அனுப்பினார் தினகரன். அவருக்கு சசிகலாவை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து, மனைவி அனுராதா மூலம் சசிகலாவை சமாதானப்படுத்த முயன்றார். அவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

தினகரன்அதேநேரம், விவேக் ஜெயராமனும் சசிகலாவிடம் தகவலைச் சொல்வதற்காகத் தன்னுடைய ஆதரவாளர்களான வினோத் ராஜ், செல்வம் ஆகியோரை அனுப்பினார். அவர்களையும் சசிகலா சந்திக்கவில்லை. அந்தளவுக்கு மிகுந்த மனவேதனையில் இருக்கிறார். நேற்று சசிகலாவை சந்திக்க இரண்டரை மணி நேரம் காத்திருந்தார் தினகரன். சிறை ஃபார்மாலிட்டிகள் முடிவதற்கே 45 நிமிடங்கள் ஆகிவிட்டது. அதன்பிறகு, மொத்தமாக 15 நிமிடங்கள்தான் அவர் சசிகலாவிடம் பேசினார். வீடியோ குறித்து அவர் கூறிய எந்தவொரு விளக்கத்துக்கும் சசிகலா பதில் சொல்லவில்லை. மிகுந்த இறுக்கமாக அந்த அறையில் அமர்ந்திருந்தார். சசிகலாவை சமாதானப்படுத்திவிடலாம் என்ற எண்ணத்தில்தான் சிறைக்குள் சென்றார் தினகரன். அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கு உள்பட அடுத்து செய்ய வேண்டிய பணிகள் குறித்து சசிகலாவிடம் விளக்கினார். அதை அமைதியாகக் கேட்டுக் கொண்டார். வழக்கமாகச் சிறைக்கு வெளியே பேட்டி கொடுக்கும் தினகரன் முகத்தில் நேற்று உற்சாகம் எதுவும் இல்லை" என விவரித்தவர், 

``தினகரனின் செயல்பாடுகள் குறித்து தகுதிநீக்கத்துக்கு ஆளான எம்.எல்.ஏ-க்கள் சிலர் கடிதம் எழுதியுள்ளனர். அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த விஷயங்கள், சசிகலாவை உச்சகட்ட கோபத்துக்கு ஆளாக்கிவிட்டது. அந்தக் கடிதத்தில், 'ஆர்.கே.நகர் தேர்தலின்போது, சின்னம்மா படத்தை போஸ்டர்களில் போடுவதற்கு நிர்வாகிகள் அனுமதி கேட்டபோது, ' அதெல்லாம் வேண்டாம்' என மறுத்துவிட்டார் தினகரன். அடுத்து, செந்தில்பாலாஜியும் தங்க.தமிழ்ச்செல்வனும் சின்னம்மா குறித்து பேசியபோது, ' இனிமேலும் பழைய புராணம் பாடாதீங்க...' எனக் கூறி தடுத்துவிட்டார். 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கை அவர் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. ' ஆர்.கே.நகர் தேர்தல் முக்கியம்தான். ஒரு எம்.எல்.ஏ முக்கியமா, 18 எம்.எல்.ஏ-க்கள் முக்கியமா... நீங்களே சொல்லுங்க சின்னம்மா. உங்க பதிலுக்காகக் காத்திருக்கிறோம்' எனக் கடிதத்தில் விளக்கியுள்ளனர்.

தினகரனை நேரில் சந்தித்த தகுதிநீக்கத்துக்கு ஆளான எம்.எல்.ஏ-க்கள் இருவரிடம், 'நானா உங்களை எல்லாம் ராஜினாமா செய்ய வைத்தேன். வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. அது முடிவுக்கு வரட்டும்' எனச் சத்தம் போட்டு அனுப்பிவிட்டார். இந்தத் தகவலையெல்லாம் படித்த பிறகு, சசிகலா மனநிலையில் பெரும் மாற்றம் வந்துள்ளது. 'ஒருவர் புகார் கூறினால் பரவாயில்லை. ஒட்டுமொத்த ஆதரவாளர்களும் புகார் கூறுகிறார்கள். 18 எம்.எல்.ஏ-க்கள் நமக்கு முக்கியமில்லையா?' என்றெல்லாம் இளவரசியிடம் ஆதங்கப்பட்டிருக்கிறார். அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருக்கிறார் சசிகலா" என்றார் விரிவாக. 

கிருஷ்ணபிரியா``சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குச் செல்வதற்கு முதல்நாள் நள்ளிரவு 1 மணியளவில் உறவினர்கள் முன்னிலையில் பேசினார் தினகரன். `நீயும் உள்ளே போய்விட்டால், இந்தக் கட்சியை யார்தான் வழிநடத்துவது. எல்லோரையும் அரவணைத்துச் செல்வது என்றால், நான்தான் சரியாக இருக்கும் என அனைவரும் சொல்கிறார்கள். திவாகரனை கட்சிப் பதவிக்கு முன்னிறுத்தினால், எடுத்தேன் கவிழ்த்தேன் என நிலைமையை மாற்றிவிடுவார்' எனக் கூறியபோது, மறுபேச்சில்லாமல் துணைப் பொதுச் செயலாளர் பதவிக்கு டி.டி.வி.தினகரனைக் கொண்டு வந்தார் சசிகலா. இந்தச் சம்பவத்தின்போது குடும்பத்தின் மகளிர் உறவுகள் அனைவரும் உடன் இருந்தார்கள். சசிகலாவை சந்திக்கும்போதெல்லாம் காலில் விழுந்து கண்ணில் ஒற்றிக்கொள்வார் தினகரன். இதை மற்ற குடும்ப உறவுகள் யாரும் செய்வது கிடையாது.

கட்சிப் பதவிக்கு வந்த நாளிலிருந்தே தினகரனின் ஒவ்வொரு நடவடிக்கையையும் அவர் கவனித்து வருகிறார். அனைத்தையும் பொறுத்துக்கொண்டவர், வீடியோ விவகாரத்தில் எளிதில் சமாதானம் அடையவில்லை. பொதுவாக, சசிகலாவுக்கு விரதம் இருக்கும் வழக்கமே இருந்தது கிடையாது. அவர் விரதம் இருந்தது என்றால், ஜெயலலிதாவோடு அவர் சிறையில் அடைக்கப்பட்ட ஒரு வருட காலம் அசைவ உணவுகளைச் சாப்பிடாமல் இருந்ததுதான். இதுதான் அவர் மேற்கொண்ட ஒரே விரதம். சிறையில் அசைவம் போடும் நாளில் உணவு மிகச் சிறப்பாக இருக்கும். 'சர்க்கரை குறைபாடு இருக்கிறது. அசைவ உணவுகளைச் சாப்பிடுங்கள்' எனச் சிறைக் காவலர்கள் கூறியபோதுகூட அவர் மறுத்துவிட்டார். அப்படிப்பட்டவர் மௌனவிரதம் இருக்கிறார் எனத் தினகரன் சொல்லலாம். சசிகலாவின் கோபத்தை எதிர்கொள்ள முடியாமல்தான் சிறை சந்திப்பை சீக்கிரமே முடித்துக்கொண்டு வெளியே வந்தார் டி.டி.வி.தினகரன்" என்கிறார் போயஸ் கார்டன் நிர்வாகி ஒருவர். 

'சசிகலா மௌன விரதத்தில் இருப்பதால் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுக்கான ஆலோசனைகளை எழுத்து மூலம் பெற்றேன்' என நேற்று அளித்த பேட்டியில் தெரிவித்தார் தினகரன். அடுத்து வரக்கூடிய நாள்களில் தினகரனின் அரசியல் நகர்வுகள், மன்னார்குடி உறவுகளுக்குள் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெரிந்துவிடும். 
 


டிரெண்டிங் @ விகடன்