தொடரும் அதிரடி! - தினகரன் ஆதரவாளர் நூற்றுக்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க.விலிருந்து நீக்கம்

முன்னாள் எம்.பி. திருப்பூர் சிவசாமி உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட தினகரன் ஆதரவாளர்கள் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.


ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்வி அ.தி.மு.க.வில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தோல்விக்குப் பின்னர் சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அவசரமாகக் கூடிய முக்கிய தலைவர்கள், தினகரன் ஆதரவாளர்களைக் கட்சியில் இருந்து நீக்கும் முடிவை எடுத்தார்கள். அதன்படி தினகரன் ஆதரவாளர்கள் பலரது கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டதுடன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் பலரை நீக்குவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.   

இந்த நிலையில், அ.தி.மு.க.விலிருந்து தினகரன் ஆதரவாளர்கள் அதிரடி நீக்கம் குறித்த அறிவிப்பு இன்றும் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், கட்சியின் கொள்கை, குறிக்கோள்களை மீறியதாக திருப்பூர், புதுக்கோட்டை, தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் நீக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. சிவசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் விசாலாட்சி உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்குவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதுக்கோட்டை, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் என மொத்தம் நூற்றுக்கும் மேற்பட்டோரை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் கட்சியினர் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதேபோல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தினகரன் ஆதரவாளர்களைக் கட்சியில் இருந்து நீக்குவதாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!