`திருந்துங்கள்... இல்லையேல் மக்கள் திருத்திவிடுவார்கள்!’ - ஆட்சியாளர்களை எச்சரிக்கும் எம்.எல்.ஏ தினகரன்

ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக டி.டி.வி.தினகரன் பதவியேற்றுக்கொண்டார். 

dinakaran

ஜெயலலிதா மறைவால் காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்குக் கடந்த 21-ல் இடைத்தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க மற்றும் எதிர்க்கட்சியான தி.மு.க ஆகியவற்றைத் தோற்கடித்து சுயேச்சையாகப் போட்டியிட்ட டி.டி.வி.தினகரன் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். அ.தி.மு.க வேட்பாளர் மதுசூதனன் தவிர, தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ் உட்பட 57 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். தினகரனின் வெற்றி குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும் என்று அ.தி.மு.க சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.  

dinakaran
 

இந்த நிலையில், டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ-வாக இன்று தலைமைச் செயலகத்தில் பதவியேற்றார். சபாநாயகர் தனபால், தினகரனுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். பின்னர் தலைமைச் செயலகம் வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன், ‘சசிகலா தலைமையிலான அ.தி.மு.க.தான் உண்மையான அ.தி.மு.க இதை நிரூபிக்கும் வகையில் தமிழக மக்கள் சார்பில் ஆர்.கே.நகர் மக்கள் என்னை வெற்றிபெறச் செய்து மாபெரும் தீர்ப்பை வழங்கியுள்ளனர். ஜெயலலிதா விட்டுச் சென்ற தொகுதி, அவர்கள் விட்டுச் சென்ற பொறுப்பை நான் தொடர்வேன் என்று ஆர்.கே.நகர் மக்களுக்கு வாக்கு கொடுத்துள்ளேன்.

தற்போது உள்ள துரோக ஆட்சியை, செயல்படாத ஆட்சியை, முதுகெலும்பில்லாத ஆட்சியை, கைக்கூலிகளின் ஆட்சியை ஒரு முடிவுக்கு கொண்டுவர அனைவரும் எதிர்பார்த்த தேர்தல் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல். வெறும் சின்னமும் கட்சியும் இருந்தால் போதாது. கட்சிக்கு ரத்தமும் சதையுமாய் இருக்கின்ற தொண்டர்கள் யாரிடம் இருக்கிறார்களோ அவர்கள்தான் உண்மையான அ.தி.மு.க. மக்கள் விரோத ஆட்சியாளர்கள் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். யாருக்கோ நீங்கள் கைக்கட்டி வாய்பொத்தி கட்டுப்படுவதால்தான் ஆர்.கே.நகர் மக்கள் உங்களைத் தோற்கடித்துவிட்டனர். உங்களின் துரோகங்களுக்கு தற்போது விடை கிடைத்திருக்கிறது. உலக வரலாற்றில் எப்போதும் துரோகத்துக்கு வெற்றி கிடைத்ததில்லை. ஆர்.கே.நகர் மக்கள் உங்களுக்கு பாடம் புகட்டியிருக்கிறார்கள். ஏணியில் ஏற்றிவிட்டவர்களையே கீழே தள்ளிவிட்டீர்கள். தயவுசெய்து திருந்துங்கள். இல்லையென்றால் மக்கள் திருத்திவிடுவார்கள். இருக்கும் பதவிக்காவது நேர்மையாக நடந்துகொள்ளுங்கள்’ என்று ஆளும் அ.தி.மு.க நிர்வாகிகளை எச்சரித்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!