நெல்லையில் மத்தியக் குழுவின் ஆய்வு கண்துடைப்பே! கொதிக்கும் விவசாயிகள் | Cyclone Ockhi: Central team visit is an eye wash feels tirunelveli farmers

வெளியிடப்பட்ட நேரம்: 15:15 (29/12/2017)

கடைசி தொடர்பு:15:15 (29/12/2017)

நெல்லையில் மத்தியக் குழுவின் ஆய்வு கண்துடைப்பே! கொதிக்கும் விவசாயிகள்

ஒகி புயல் பாதிப்பு குறித்து மத்திய குழு நெல்லை மாவட்டத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டது. ஆனால், இது வெறும் கண்துடைப்பு நாடகம் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் குற்றம் சாட்டினார்கள்.

மத்திய குழு ஆய்வு

கடந்த நவம்பர் மாதம் வீசிய ஒகி புயலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மத்திய குழுவினர் நேற்று ஆய்வுமேற்கொண்டனர். குமரி மாவட்டத்தில் புயல் பாதிப்பு ஏற்பட்ட விவசாய நிலங்கள், ரப்பர் தோட்டங்கள், மீனவக் கிராமங்களில் அக்குழுவினர் ஆய்வுசெய்தனர். பாதிப்புக்குள்ளான மீனவர்கள், விவசாயிகளிடம் புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்துக் கேட்டறிந்தனர்.

இந்த நிலையில், இன்று அதிகாலையில் குமரி மாவட்டம் திருப்பதிசாரம் பகுதியில் விவசாய நிலங்களில் ஏற்பட்ட பாதிப்புகுறித்து ஆய்வு செய்த அந்தக் குழுவினர், அங்கிருந்து அவசரமாக களக்காடு பகுதியில் உள்ள திருக்குறுங்குடி நம்பியாறு பாலம் உடைப்பு குறித்து நேரில் பார்வையிட்டனர். பின்னர் அணைக்கரைப் பகுதியில் பாலத்தில் உடைப்பு ஏற்பட்டதையும் பார்வையிட்ட பின்னர் திரும்பிச் சென்றனர். 

பெரும்படையார் - விவசாயி

நெல்லை மாவட்டத்தில் மத்திய குழுவினர் அவகரகதியில் ஆய்வு நடத்தியதற்கு விவசாயிகள் தரப்பில் கடும் எதிர்ப்புக் கிளம்பி உள்ளது. இதுதொடர்பாக நம்மிடம் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவரான பெரும்படையார், ‘’ஒகி புயலால் நெல்லை மாவட்டத்திலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட விவசாயிகள் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளனர். குறிப்பாக களக்காடு, கடையநல்லூர், தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் வாழைகள் பெருமளவுக்கு பாதிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிடாத மத்திய குழுவினர், கண்துடைப்புக்காக ஆங்காங்கே நின்று புகைப்படம் மட்டும் எடுத்துக்கொண்டிருப்பது வேதனையளிக்கிறது. நம்பியாறு பாலம், அணைக்கரை பாலம் ஆகியவற்றை பார்வையிட்ட குழுவினர், பாதிக்கப்பட்ட விவசாயிகளைச் சந்தித்திருக்க வேண்டும். அத்துடன், தமிழக அரசு சார்பாக பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 45,000 முதல் 65,000 ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது மிகவும் சொற்பத் தொகையாகும்.

ஒரு வாழையை வளர்த்துப் பராமரிக்க 200 ரூபாய் தேவைப்படும் நிலையில், அரசு அறிவிப்பின்படி, ஒரு வாழைக்கு 3 ரூபாய் முதல் 7 ரூபாய் வரை மட்டுமே கிடைக்கும் என்பதால், விவசாயிகளுக்கு இதனால் எந்தப் பலனும் கிடைக்கப்போவதில்லை. அதனால் ஒரு வாழைக்கு 200 ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்தியக் குழுவினர் முழுமையாகப் பார்வையிடாமல், விமானத்தைப் பிடிக்கச் செல்ல வேண்டும் என்கிற அவசரத்தில் சென்றதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாகக் கண்டிக்கிறோம்’’ என்றார்.