ஐ.ஏ.எஸ் அதிகாரியைக் கௌரவித்த ஹார்வேர்டு பல்கலைக்கழகம்! - தமிழ் இருக்கைக்காகக் கிடைத்த சிறப்பு

தமிழ் இருக்கைக்காக நன்கொடை அளித்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரனை, ஹார்வேர்டு பல்கலைக்கழகம் கௌரவித்துள்ளது. 

அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கென பிரத்யேக இருக்கை அமைக்கும் முயற்சியில் உலகத் தமிழர்கள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, அமெரிக்க வாழ் தமிழர்களான திருஞானசம்பந்தம், ஜானகிராமன் உள்ளிட்டோர் இந்தப் பணிகளில் முழுமுயற்சியுடன் ஈடுபட்டுள்ளனர். அதற்காக, உலகமெங்கிலும் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழர்கள் நன்கொடை அளித்து வருகின்றனர். இதற்காகத் தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டிருக்கிறது. அது தவிர பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் தனி நபர்களும் ஹார்வேர்டு தமிழ் இருக்கைக்காக நன்கொடை அளித்து வருகின்றனர். 

அந்தவகையில், தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலச்சந்திரன் ரூ.25 லட்சம் (38,500 அமெரிக்க டாலர்கள்) நன்கொடை அளித்தார். தமிழ் இருக்கைக்காக இவ்வளவு பெரிய தொகையை நன்கொடையாக அளித்த பாலச்சந்திரனை, கலை மற்றும் அறிவியல் புலம் சார்பில் ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தின் பிரசிடென்ட்ஸ் அசோசியேட்ஸ் (President's associates) என்ற அங்கீகாரத்தை அளித்துள்ளது. ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தின் பிரபலமான முன்னாள் மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக வளர்ச்சிக்கென 25,000 அமெரிக்க டாலர்களுக்கு அதிகமாக நன்கொடை அளித்தவர்களுக்கு மட்டுமே இந்தக் கௌரவம் அளிக்கப்பட்டு வருகிறது. பிரசிடென்ட்ஸ் அசோசியேட்ஸ் அங்கீகாரம் பெற்றவர்களிடம் பல்கலைக்கழகத்தின் குறிப்பிட்ட துறையின் வளர்ச்சி குறித்து பல்வேறு ஆலோசனைகளைக் கேட்பது வழக்கம். 

மேற்கு வங்க அரசில் கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரனிடம் பேசினோம். " இது எனக்குக் கிடைத்த அங்கீகாரமாக நான் பார்க்கவில்லை. தமிழுக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே பார்க்கிறேன். இந்த அங்கீகாரத்தின் மூலமாகத் தமிழ் இருக்கையை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்வது குறித்த ஆலோசனைகளை நாம் அளிக்க முடியும். பிரசிடென்ட்ஸ் அசோசியேட்ஸ் கௌரவம் பெற்றவர்களுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் விழாவுக்கு அழைப்பு விடுக்கப்படும். அந்த விழாவில் குறிப்பிட்ட நிற டை அல்லது ஸ்கார்ஃபுடன் கலந்துகொள்ள வேண்டும். தமிழ் இருக்கைக்கான ஆலோசனைகளை அளிக்கவும் இந்த அங்கீகாரம் பயன்படும்" என்றார் நெகிழ்ச்சியுடன். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!