வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (29/12/2017)

கடைசி தொடர்பு:16:48 (09/07/2018)

கலெக்டருக்கு பிஸ்லெரி... அதிகாரிகளுக்கு அம்மா குடிநீர்!

 

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் நிறைய சுவாரஸ்யமான விசயங்கள் நிகழ்ந்தன. அதில் மிக முக்கியமான காட்சி ஒன்று அங்கு வந்திருந்த அத்தனை விவசாயிகள் மற்றும் விவசாயச் சங்க பிரதிநிதிகள் கவனத்தை ஈர்த்தது. விவசாயத் துறையைச் சார்ந்த அதிகாரிகள் இடது வலமாக இருக்க, நடுநாயகமாக ஒரு நவீன மன்னரைப்போல் வீற்றிருந்தார் ஆட்சியர் சு.கணேஷ். அவருக்கு முன்பாகப் பிஸ்லெரி வாட்டர் பாட்டில் வைக்கப்பட்டிருந்தது. அவரோடு அமர்ந்திருந்த அதிகாரிகளுக்கு முன்பாக அம்மா குடிநீர் பாட்டில் வைக்கப்பட்டிருந்தன. விவசாய பிரதிநிதிகள் அதை ஆரம்பத்திலேயே கவனித்து, தங்களுக்குள் முணுமுணுப்பாகப் பேசிக்கொண்டார்கள்.  பொதுவாக இதுபோன்ற கூட்டங்களில் ஒரே மாதிரியான வாட்டர் பாட்டில்கள் வைப்பதுதான் வழக்கம். இந்தத் தடவை வித்தியாசம் காட்டும் விதமாக இப்படி ஒரு விசயத்தை ஒழுங்குப்படுத்தியிருந்தார்கள். இந்த ஏற்பாட்டை திட்டமிட்டே அதிகாரிகள் செய்திருந்தாலும், யார் கவனிக்கப் போகிறார்கள் என்றே நினைத்துவிட்டார்கள். ஆனால், வந்தவர்கள் அதைத்தான் முதலில் கவனித்தார்கள். கலெக்டருடன் அமர்ந்திருந்த அதிகாரிகளுக்கு இரண்டு பேருக்கு ஒரு அம்மா குடிநீர் பாட்டில் என்று கணக்கிட்டு வைத்திருந்தார்கள். "பத்துரூபா வாட்டர் பாட்டில். அதைக்கூட அதிகாரிக்கு ஒண்ணுனு தரமாட்டாங்களா. இதுல மிச்சம் பிடிச்சு என்ன பண்ணப் போறாங்க" என்று அங்கிருந்த விவசாயப் பிரதிநிதிகள் பேசிக்கொண்டார்கள். மற்றபடி, "அதிகாரிகளுக்கு மட்டும்தான் அம்மா வாட்டரா. எங்களுக்கு ஒரு 'சும்மா' வாட்டர்கூட கிடையாதா" என்றெல்லாம் அங்கிருந்தவர்கள் வருந்தவில்லை. அதுதான் விவசாயிகள்.


.

அடுத்ததாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்த விஷயம், கலெக்டர் தலைக்கு மேலாக இருந்த இரண்டு படங்கள்தான்.அதில் ஒன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இதைவிட அவருக்கு அருகில் இருந்த தற்போதைய முதல்வர் எடப்பாடியார்  படம்தான் எல்லோருடைய கவனத்தையும் அதிகமாக ஈர்த்தது. எந்த வகையிலும் அம்மா படத்தைவிட எடப்பாடியார் படம் பிரைட்டாகத் தெரிந்துவிடக் கூடாது என்று திட்டமிட்டே அதிகாரிகள் வைத்திருந்தது பட்டவர்த்தனமாகத் தெரிந்தது. இருப்பதிலேயே ரொம்ப சுமாரான படத்தைத்தான் வைத்திருந்தார்கள். அம்மா படத்தைவிட கொஞ்சம் சிறியதாகவும் அது இருந்தது.

இதுபற்றி அங்கிருந்த அதிகாரிகளிடம் விசாரித்தபோது, "இந்தப் படம் தலைமைச் செயலகத்திலிருந்து வந்தது. அரசு அலுவலகங்களில் வைக்கப்படும் முதல்வரின் படம் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவர்கள்தான் முடிவு செய்வார்கள்" என்றார்கள். 'வாட்டர் பாட்டில்?' என்றோம். "இதையெல்லாமா சார் கவனிப்பீங்க" என்று சிரித்தபடியே கேட்டவர்கள், "அதை நாங்கதான் முடிவு பண்றோம். வாட்டர் பாட்டில் வேஸ்ட் ஆகக்கூடாதுனு இப்படி செய்கிறோம்" என்றார்கள். குறைதீர்ப்புக்கூட்டம் முடிந்தபோது, கலெக்டர் உட்பட யாருமே பாட்டிலை திறந்து, ஒரு மிடறுகூட தண்ணீர் அருந்தவில்லை என்பதுதான் இங்கே குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்.