வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (29/12/2017)

கடைசி தொடர்பு:19:04 (29/12/2017)

`பயிர் கருகுது தண்ணீர் திறங்கள்' - கொந்தளித்த விவசாயிகள்; பணிந்த அதிகாரிகள்

''தண்ணீர் திறக்காததால் கடும் நஷ்டத்தைச் சந்தித்து வருகிறோம்' என்று அதிகாரிகள் மற்றும் ஆட்சியரிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்பதால், ஆத்திரமடைந்த விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

                        

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள வடவார் தலைப்பில் விவசாயிகள் தண்ணீர் திறக்கக் கோரி முற்றுகைப் போராட்டம் செய்தனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தாலுகாவுக்கு உட்பட்ட கொண்டாயிருப்பு, கஞ்சங்கொல்லை, ஆச்சாள்புரம், குச்சிப்பாளையம், பல்வாய்கொண்டம் என 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களுக்கு அணைக்கரை கீழ் அணையில் உள்ள வடவார்தலைப்பிலிருந்துதான் தண்ணீர் வழங்குவது வழக்கம். ஆனால், கடந்த இரண்டு மூன்று மாதங்களாகத் தண்ணீர் வழங்கப்படவில்லை. இதனால், கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் பயிர் செய்யப்பட்ட நெற்பயிர்கள் அனைத்தும் கருகத் தொடங்கின. இதுகுறித்து அப்பகுதியில் உள்ள விவசாயிகள் அணைக்கரை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடமும் ஆட்சியரிடமும் பலமுறை தண்ணீர் திறக்க மனு கொடுத்து தண்ணீர் திறக்கவில்லை. பயிர் கருகுவதைப் பார்த்து வேதனையுற்ற விவசாயிகள் வடவார் தலைப்பில் உள்ள தடுப்பு அணையின் முன்பு சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.  

தகவலறிந்த மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடேசன் மற்றும் போலீஸார் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர், விவசாயிகள் சாலைமறியலின்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் வர வேண்டும் என்று கூறினார்கள். இதையடுத்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 800 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால், சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து அணைக்கரை பாசன வாய்க்கால் உதவிப் பொறியாளர் வெற்றிவேல் கூறியதாவது, இந்த மேட்டுவாய்க்காலில் சுமார் 300 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. அணையில் 8 அடிஉயரம் நீர் நிரம்பினால் மட்டுமே இந்த வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும், கொள்ளிடத்திலிருந்து தண்ணீர் வரவில்லை, தற்போது இருப்பது ஊற்றுத் தண்ணீரும் மழைநீரும் மட்டுமே, இதைத் திறந்து விடுவதால் மற்ற வாய்க்காலுக்குத் தண்ணீர் திறந்தால் நீர் அனுப்பமுடியாது. விவசாயிகளின் வேண்டுகோளுக்கு இனங்க தற்போது 800 கன அடி திறந்துவிடப்படுகின்றது என்றார்.