வெளியிடப்பட்ட நேரம்: 16:50 (29/12/2017)

கடைசி தொடர்பு:19:43 (29/12/2017)

பாபுவைக் கொன்றது யார்; எஃப்.ஐ.ஆர் சொல்வது என்ன?

கூலித்தொழிலாளியின் உயிரைக் காவு வாங்கிவிட்டு, உதகையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. கோவையில் மென்பொறியாளர் ரகுவின் உயிரை அலங்கார வளைவு பறித்தது. தற்போது, உதகையில் பாபுவின் உயிரை அ.தி.மு.க கட்சி கொடி பறித்துள்ளது. அவரது மறைவுக்கு தற்போதுவரை, தமிழக அரசு இரங்கல் தெரிவிக்கவில்லை.

பாபு

பாபுவின் மரணம் தொடர்பாக உதகை டவுன் சென்ட்ரல் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முதல் தகவல் அறிக்கை எனப்படும் எஃப்.ஐ.ஆரில், கோடப்பமந்து சுடுகாட்டுக்கு அருகில்,  28.12.2017 மாலை 4.40 மணி அளவில் உர மூட்டை லோடு இறக்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு டிரான்பார்மர் அருகே, அ.தி.மு.க கொடி இரும்பு பைப்பால் நடப்பட்டிருந்தது. பாபு லாரியில் இருந்து இறங்கும்போது, அந்த கொடியை பிடிக்க, அந்த கம்பம் டிரான்பாமரில் சாய்ந்து, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பாபு மயங்கி விழுந்துவிட்டார். உதகை அரசு மருத்தவமனைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தபோது, அவர் ஏற்கெனவே இறந்துவிட்டார் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். என்று கூறப்பட்டுள்ளது.

முதல் தகவல் அறிக்கை

கோவையில், ரகுவின் உயிரிழப்புக்கு அலங்கார வளைவு காரணம் என்று கூறியதுபோல, இதையும் கடந்துவிட முடியாது. பொதுமக்களின் உயிரைவிட, எம்.ஜி.ஆருக்கு பிரமாண்டமாக விழா நடத்துவதுதான் அரசுக்கு முக்கியமா?

இந்நிலையில், பாபுவின் உடலுக்கு உதகை தி.மு.க மாவட்ட செயலாளர் முபாரக் மற்றும் நிர்வாகிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முபாரக், "எம்.ஜி.ஆர் நுற்றாண்டு விழா என்ற பேரில் தொடர்ந்து உயிர்களை காவு வாங்கி வருகின்றனர். ஏற்கெனவே, கோவையில் ரகு என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார். அ.தி.மு.க-வின் கட்சிக் கொடியால்தான் பாபு உயிரிழந்துள்ளார். எனவே, அ.தி.மு.க தனது கட்சி நிதியில் இருந்து, 25 லட்ச ரூபாயை இழப்பீடாக பாபு குடும்பத்துக்கு வழங்க வேண்டும்" என்றார்.