‘நெல் பயிரில் டிராக்டர் உழுதது திட்டமிட்ட சதி’ - சாமுண்டீஸ்வரிக்கு எதிராகச் சீறும் டி.எஸ்.பி ஜெரீனா | DSP Jerina slams chamundeshwari

வெளியிடப்பட்ட நேரம்: 17:55 (29/12/2017)

கடைசி தொடர்பு:18:33 (29/12/2017)

‘நெல் பயிரில் டிராக்டர் உழுதது திட்டமிட்ட சதி’ - சாமுண்டீஸ்வரிக்கு எதிராகச் சீறும் டி.எஸ்.பி ஜெரீனா

நெல் பயிரில் டிராக்டரை உழுத இடத்தில் நீதிபதி விசாரணை

நெல் பயிரில் டிராக்டரை ஓட்டி உழுத சம்பவத்தில் திட்டமிட்டு சாமுண்டீஸ்வரி என்னைச் சிக்கவைத்துவிட்டதாகப் போலீஸ் டி.எஸ்.பி ஜெரீனா பேகம் தெரிவித்துள்ளார். 

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகில் உள்ள காமக்கூர் கிராமத்தில் நெல் பயிரில் டிராக்டரை ஓட்டி நாசம் செய்த சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலானது. இந்தச் சம்பவத்தில் போலீஸ் டி.எஸ்.பி ஜெரீனா பேகம் பேசும் ஆடியோ அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்தச் சம்பவம் தொடர்பாக மனித உரிமை ஆணைய மாவட்ட நீதிபதி மகிழேந்தி சம்பவ இடத்துக்குச் சென்று நேரில் விசாரணை நடத்தியுள்ளார்.

சம்பவ இடத்தில் என்ன நடந்தது என்று போலீஸ் டி.எஸ்.பி ஜெரீனா பேகத்திடம் பேசினோம். “சாமுண்டீஸ்வரிக்கும் சாவித்ரிக்கும் இடையே சொத்துப் பிரச்னை இருந்துவருகிறது. சாவித்ரியின் உறவினர்கள் காவல்துறையில் பணியாற்றுகின்றனர். சொத்துப் பிரச்னை தொடர்பாக சாமுண்டீஸ்வரி, அடிக்கடி போலீஸில் புகார் கொடுத்துவந்தார். அவரது புகாருக்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்தச் சமயத்தில்தான் காமக்கூர் கிராமம் வழியாகச் சம்பவத்தன்று சென்றேன். அப்போது, சாமுண்டீஸ்வரி மற்றும் சாவித்ரியிடம் பிரச்னை நடந்த இடத்தின் அருகே வைத்தே விசாரித்தேன். சாவித்ரியும் அவர் தரப்பினரும் என்னைப் பெண் என்றுகூட பார்க்காமல் தகாத வார்த்தைகளால் திட்டினர். இதனால் எமோஷனில் நானும் அவர்களைத் திட்டினேன்.

நெல் பயிரில் டிராக்டரை ஓட்டி நாசம் செய்த சம்பவம்

இந்தச் சமயத்தில்தான் சாமுண்டீஸ்வரியின் உறவினர் சதாசிவம், டிராக்டரை வேகமாக எடுத்துக்கொண்டு வந்து பயிரில் ஓட்டி நாசப்படுத்திவிட்டார். அதைப்பார்த்தவுடன் நிறுத்துங்கள் என்று தெரிவித்தேன். அதற்காக சாமுண்டீஸ்வரி, வயலுக்குள் ஓடினார். அவரைப் பின்தொடர்ந்து சாவித்ரியும் என்னுடன் வந்த பெண் போலீஸும் ஓடினார்கள். சாமுண்டீஸ்வரி திட்டமிட்டு இந்தக் காரியத்தை செய்துவிட்டார். அதை சாவித்ரியும் வீடியோ எடுத்து எனக்கு எதிராக மாற்றிவிட்டார். அவர்கள் இருவருக்கும் நடந்த முன்விரோதத்தில் நான் சிக்கிக்கொண்டேன். விசாரணையின்போது என்தரப்பு நியாயத்தைத் தெரிவிப்பேன். நெல் பயிரில் டிராக்டரை ஓட்டி உழுதது தொடர்பாக சாமுண்டீஸ்வரி, சதாசிவம் ஆகியோர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார். 

இது குறித்து, போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், “டி.எஸ்.பி ஜெரீனா பேகத்தின் மீது காவல்துறையில் குற்றச்சாட்டுகள் இல்லை. சாவித்ரியின் உறவினர்கள் காவல் துறையில் இருப்பதால் போலீஸார் அவருக்குச் சாதகமாகச் செயல்படுவதாக சாமுண்டீஸ்வரி போலீஸ் உயரதிகாரிகளிடம் புகார் கொடுத்தார். இதனால்தான் டி.எஸ்.பி ஜெரீனாபேகத்திடம் விசாரணை நடத்த உயரதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி, ஜெரீனாபேகமும் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்துள்ளார். அவரை சிக்கலில் சிக்க வைத்துவிட்டனர். வீடியோவை முழுமையாகப் பார்த்தால் ஜெரீனாபேகம் தரப்பிலிருக்கும் நியாயங்கள் தெரியும். அதே நேரத்தில் ஜெரீனாபேகமும் சம்பவ இடத்தில் அமைதியாக இருந்திருக்கலாம்" என்றனர்.


டிரெண்டிங் @ விகடன்