வானதி புகாரைக் கிடப்பில் போட்ட தமிழிசை! - ஆறு மாதங்களுக்குப் பிறகு நீக்கப்பட்ட பா.ஜ.க-வினர் 

தமிழக பா.ஜ.க பொதுச் செயலாளர் வானதி சீனிவாசனை முகநூலில் விமர்சித்த இருவரைக் கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறார் மாநிலத் தலைவர் தமிழிசை. 'பொது வாழ்க்கைக்கு வரும் பெண்களை எப்படி வேண்டுமானாலும் அவமானப்படுத்தலாம் என நினைப்பவர்களுக்கு எதிராகக் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கிறேன். சட்டப்படியாகவும் இந்த விவகாரத்தை அணுகுவேன்' என்கிறார் வானதி சீனிவாசன். 

வானதி

`திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணிய ஆதித்தன், மதுரையைச் சேர்ந்த டி.எஸ்.சங்கரநாராயணன் ஆகியோர் கட்சியையும் கட்சி நிர்வாகிகளைப் பற்றியும் சமூக வலைதளங்கள் மூலமாகக் கட்சிக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்துள்ளனர். இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணை நடத்தியது. குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுகிறார்கள். இவர்கள் மீது கட்சி நிர்வாகிகள் யாரும் எந்தவிதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது' என நேற்று அறிவிப்பை வெளியிட்டிருந்தார் தமிழிசை சௌந்தரராஜன். 

தமிழிசை

இதுகுறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க தலைமை அலுவலக நிர்வாகி ஒருவர், "வானதி சீனிவாசன் மீது இவர்கள் தரக்குறைவான விமர்சனங்களை முகநூல் வழியாக முன்வைத்துக்கொண்டிருந்தனர். அடிப்படை ஆதாரமில்லாத இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்தாலும் தொடர்ந்து கற்பனையான விஷயங்களைப் பதிவு செய்தனர். கட்சியைச் சேர்ந்தவர்களே இதுபோன்று செயல்படுவதைக் கண்டு பொறுக்க முடியாமல், மாநிலத் தலைவரிடம் புகார் மனு கொடுத்தார் வானதி. இந்தப் புகாரைப் பெற்றுக்கொண்ட தமிழிசை மூன்று மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொதுவாக, கட்சி நிர்வாகிகள் புகார் கொடுத்தால் அதன்பேரில் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும். மூன்று மாதங்களுக்குப் பிறகு, ஒழுங்கு நடவடிக்கைக்குழு அளித்த பரிந்துரையையும் கிடப்பில் போட்டுவிட்டார். ஆறு மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

நேற்று அகில இந்திய நிர்வாகி ஒருவர் கமலாலயத்துக்கு வந்திருந்தார். அவர் கூறியதன் அடிப்படையிலேயே இவர்கள் இருவரையும் கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறார் தமிழிசை. வானதி அளித்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்காததற்கு அரசியல்ரீதியாக சில காரணங்கள் இருக்கின்றன. சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிட்ட வானதி சீனிவாசன், 33 ஆயிரம் வாக்குகளைப் பெற்றார். பா.ஜ.க வேட்பாளர்கள் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளைவிடவும் வானதி பெற்ற வாக்குகள் அதிகம். இதையடுத்து, பா.ஜ.க தலைவர் பதவிக்கு அவர் முன்னிறுத்தப்படலாம் என்ற பேச்சு எழுந்தது. இந்தநேரத்தில்தான், அவரைப் பற்றி நடவடிக்கைக்கு ஆளாகியுள்ள இருவரும் கடுமையான விமர்சனங்களை எழுப்பினார்கள். கட்சியின் எந்தப் பொறுப்பிலும் இல்லாதவர்கள், அவதூறாகச் செய்தி வெளியிடுவதைக் கண்டித்தார் வானதி. தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டு நீதிமன்றத்திலும் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார் வானதி. மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கே.டி.ராகவன், கறுப்பு முருகானந்தம் ஆகியோரைப் பற்றியும் அவதூறாக எழுதி வந்தனர். காலம் தாழ்த்தி நடவடிக்கை எடுத்திருக்கிறார் தமிழிசை" என்றார் விரிவாக. 

nellai bjp

வானதி சீனிவாசனிடம் பேசினோம். "கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லாதவர்கள் தொடர்ச்சியாக என்னைப் பற்றி அவதூறாகப் பேசி வந்தனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு கொடுத்திருந்தேன். அதன் அடிப்படையில் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணை நடத்தி அறிக்கை அளித்தது. அதன்பேரில் மாநிலத் தலைவர் நடவடிக்கை எடுத்திருக்கிறார். என்னைப் பற்றி கற்பனையான வதந்திகளைப் பரப்பியவர்கள் மீது கிரிமினல் அவதூறு வழக்குகளையும் தொடுத்திருக்கிறேன். பொதுவாழ்க்கைக்கு வரக்கூடிய பெண்களை எளிதாக அழித்துவிட முடியும் என சிலர் நினைக்கிறார்கள். இவர்களுக்கு சட்டப்படியாகவும் தண்டனை கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் நீதிமன்றத்துக்குச் சென்றிருக்கிறேன்" என்றார் நிதானமாக. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!