வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (29/12/2017)

கடைசி தொடர்பு:17:46 (09/07/2018)

``புழுத்த அரிசியை வாங்குறதுக்கு குப்பை நாற்றத்தில் நிற்கிறோம்!" பொங்கும் புதுக்கோட்டை மக்கள்

"இந்தக்கொடுமையை எங்கே போய் சொல்ல. ரேஷன்ல எப்போ அரிசி, பருப்பு போடுவாங்கனு தொக்கி நிற்குறோம். அரிசியும் பருப்பும் வந்தாதான் நிச்சயம். அப்படி வந்துட்டா, பார்க்குற வேலையெல்லாம் அப்படி அப்படியே போட்டுட்டு அரக்க பரக்க  கடைக்குப்போனா, குடலைப் புரட்டுகிற நாற்றத்துல மணிக்கணக்கில் நின்னு சாக வேண்டிக் கிடக்கு. புழுத்த அரிசியை வாங்குறதுக்கு குப்பை நாற்றத்தில் நிற்கிறோம்" என்று வேதனை தெறிக்கும் குரலில் அங்கலாய்க்கிறார்கள் புதுக்கோட்டையின் ஒருபகுதி மக்கள்.

புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட வடக்கு இரண்டாம் வீதியில் அமைந்துள்ள ரேஷன் கடை பற்றித்தான் இவ்வளவு அங்கலாய்ப்பும் ஆத்திரமும். ரேஷன் கடையை ஒட்டியே இருக்கிற சந்து முழுக்க அவ்வளவுக் குப்பைகளும் கழிவுகளும் கொட்டிக்கிடக்கின்றன. இது தவிர, மலம் கழிக்கும் இடமாகவும் அந்தச் சந்து இருக்கிறது.

"முன்னாடி இது பொது வழிப்பாதையாகத்தான் இருந்தது. குடியிருப்புகள் அதிகமானதும் இந்தப் பாதை பாழ்பட்டுடுச்சு. இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் கொஞ்சம்கூட பொறுப்பு இல்லாமல், பிளாஸ்டிக் கேரிப்பைகள், பாட்டில்கள், உணவுக் கழிவுகள் எல்லாவற்றையும் இங்கு கொண்டுவந்துப் போட்டு விடுகிறார்கள். நகராட்சித் துப்புரவுப் பணியாளர்கள் இந்தப் பகுதியைச் சுத்தம் பண்ண வருவதே இல்லை. கேட்டால், 'தெருவில் கிடக்கும் குப்பையைத்தான் நாங்க அள்ளுவோம்'னு சொல்றாங்க. மாடி வீட்ல இருக்கிறவங்க ரேஷன் வாங்க வந்து நின்னா, புரியும், இந்தக் கழிவு நாற்றத்தை நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு சகிச்சுகிட்டு, க்யூவில நின்னு பொருள்களை வாங்கறோம்னு கொஞ்சம் வேகமா காத்தடிச்சாலும் குப்பைகள் பறந்து வந்து, எங்க மூஞ்சில ஒட்டிக்கும். தூசியும் தும்பும் எங்க மூக்குல நுழைஞ்சு, சளி, இருமல், காய்ச்சல் மாதிரியான சுகவீனங்களைக் கொண்டு வந்துடும். நாங்க சொல்றது உண்மையா பொய்யானு நீங்களே கொஞ்ச நேரம் இங்கே நின்னு பாருங்க புரியும்" என்கிறார்கள் வடக்கு இரண்டாம் வீதியில் வசித்துவரும் பொதுமக்கள். 

இவர்களின் நிலைமை இப்படியென்றால், பொருள்கள் வழங்கும் ஊழியர்கள் நிலைமை கொடுமையாகத்தான் இருக்கிறது. "இந்தக் கொடும் நாற்றத்தில் நாங்க எப்படி நிற்குறது. சீக்கிரமா பொருளைப் போட்டு அனுப்புங்கனு நாங்கள் கத்துவோம். அப்போ, அவங்க 'ஏம்மா, நீ கொஞ்ச நேரம் இருந்து அரிசியை வாங்கிட்டுப் போயிடுவே. நாங்க நாள் முழுக்க இங்கே கிடந்து நொம்பலப்படுறோமே'னு அவங்க புலம்புகிற புலம்பல் பெருசா இருக்கும்.அதைக் கேட்கும்போது, நம்ம பாடு எவ்வளவோ தேவலாம்போல இருக்கும். இந்தக் குப்பைக் கூளத்து தாக்கத்துக்குப் பயந்துகிட்டே கடையை அடிக்கடி திறக்கமாட்டாங்க. இதனாலயும் நாங்க பாதிக்கப்படுறோம்" என்று வெளிப்படையாகப் புலம்பினார்கள் அந்தப் பகுதி மக்கள்.

இது குறித்து, புதுக்கோட்டை நகராட்சி சுகாதார அலுவலர் டாக்டர் யாழினியிடம் பேசினோம். "மக்களிடமிருந்து அந்த இடம் குறித்து எனக்கு எந்தப் புகாரும் வரவில்லை. நீங்கள் சொன்னதையே தகவலாக எடுத்துக்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன்" என்றவர், நம்மிடம் சொன்னபடியே உடனடியாக அந்த இடத்துக்கு ஆய்வுசெய்ய புறப்பட்டார்.