நெடுஞ்சாலைத் துறைக்கு எதிராகக் குமரி தி.மு.க போராட்டம்!

குலசேகரம் - உன்னியூர் கோணம் சாலை, ஆற்றூர் - குட்டக்குழி சாலை, நாகர்கோவில்- திருவரம்பு சாலை எனப் பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட மோசமான சாலைகளைச் சீரமைக்காத நெடுஞ்சாலைத் துறையைக் கண்டித்து இன்று குலசேகரத்தில் தி.மு.க-வினர் மாபெரும் மறியல் போராட்டம் நடத்தப்போவதாகப் பத்மநாபபுரம் எம்.எல்.ஏ-வும் குமரி தி.மு.க மேற்கு மாவட்டச் செயலாளருமான மனோ தங்கராஜ்  ஏற்கெனவே அறிவித்து இருந்தார்.

 

அதன்படி இன்று குலசேகரம் அரசமூடு சந்திப்பில் மனோதங்கராஜ் எம்.எல்.ஏ தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது தி.மு.க-வினர் சாலைகளை சீரமைக்கக் கோரி நெடுஞ்சாலை துறைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். மறியல் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதிகாரிகள் வந்து சாலைகளை உடனடியாகச் சீரமைப்போம் என உறுதி தந்தால்தான் போராட்டம் முடிவுக்கு வரும் என மனோதங்கராஜ் எம் எல்.ஏ தெரிவித்தார்.

அதனால் ஆர்.டி.ஓ முனுசாமி நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் வருகிற ஜனவரி 15-ம் தேதிக்குள் சாலைகளைச் சீரமைத்து கொடுப்பதாக உறுதி அளித்தார். அதன்பின் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!