'குமரியை தேசியப் பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவியுங்கள்'! மத்தியக் குழுவிடம் ஒலிக்கும் குரல்கள் | Announcing ockhi Hurricane as national disaster; Kanyakumari Peoples said to central Crew

வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (29/12/2017)

கடைசி தொடர்பு:21:30 (29/12/2017)

'குமரியை தேசியப் பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவியுங்கள்'! மத்தியக் குழுவிடம் ஒலிக்கும் குரல்கள்

கடந்த நவம்பர் மாதம் ஒகி புயல் கன்னியாகுமரி மாவட்டத்தை புரட்டிப் போட்டு விட்டு போனது. இதனால் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரமும் நசுங்கிப் போனது. மீனவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் கடலில் தத்தளித்தார்கள். பலர் கடலில் மூழ்கி இறந்து போனார்கள். அவர்களின் உடல்கள் கூட இன்றும் கண்டுபிடிக்கப்பட வில்லை. இந்த நிலையில் பல்வேறு கட்சியின் அரசியல் தலைவர்கள் கன்னியாகுமரியில் முகாமிட்டு ஒகி புயல் பாதித்த இடங்களை ஆய்வு செய்தார்கள்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தூத்தூர் வந்து மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றினார். அதனை தொடர்ந்து பிரதமர் மோடியும் கன்னியாகுமரிக்கு வந்து பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து, முதல்வரோடு ஆலோசனை நடத்திவிட்டுச் சென்றார். முதல்வர் எடப்பாடி, பிரதமரிடம் தேசியப் பேரிடர் நிதியிலிருந்து உடனடி நிவாரணமாக ரூ.747 கோடியும், நிரந்தரச் சீரமைப்புப் பணிக்கு ரூ.5,255 கோடியும், மத்திய அரசு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தார். இந்த நிலையில், இரண்டு நாள்கள் கன்னியாகுமரி மாவட்டத்தை ஆய்வு செய்ய மத்தியக் குழு வந்துள்ளது. இந்தக் குழுவில் மத்திய உள்துறை இணைச் செயலாளர் சஞ்சீவ் குமார் ஜிந்தால் தலைமையில் மத்திய கால்நடை பாராமரிப்பு மற்றும் மீன்வள ஆணையர் டாக்டர் பால்பாண்டியன், மத்திய மின் துறை துணை இயக்குநர் சுமன், மத்திய கப்பல் துறை அலுவலர் பரமேஸ்வர் பாலி, மத்திய வேளாண்மைக் கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நல இயக்குநர் டாக்டர் கே.மனோகரன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள் நேற்று காலை கொல்லங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி விட்டு, தூத்தூரில் உள்ள ஜூட்ஸ் கல்லூரியில் மீனவர்களையும் மீனவப் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசினார்கள். அப்போது, நீரோடியைச் சேர்ந்த ஆக்னஸ் மேரி என்கிற பெண், “கணவனை இழந்து விட்டேன்,காப்பாற்ற யாரும் இல்லை.உதவ யாரும் இல்லை” எனக் கதறி அழுதார். மீனவர்களைக் காப்பாற்றாமல் விட்டவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என மீனவர்கள் கோஷங்களை எழுப்பினர். மாலையில் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் பிரதிநிதிகளோடு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இன்று இரண்டாவது நாளாக மத்தியக் குழுவின் ஆய்வு தொடர்ந்தது. ஆய்வுக் குழு செல்கிற இடங்கள் அனைத்திலும் “கன்னியாகுமரி மாவட்டத்தை தேசியப் பேரிடர் மாவட்டமாக அறிவியுங்கள்“ என்கிற குரல்கள்தான் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க