வெளியிடப்பட்ட நேரம்: 01:12 (30/12/2017)

கடைசி தொடர்பு:01:12 (30/12/2017)

பாரதியார் படித்த வகுப்பறையில் சாமி-2 பட சூட்டிங்? சமூக ஆர்வலர்கள் வருத்தம்

நெல்லையில் பாரதியார் படித்தப் பள்ளியை திரைப்பட சூட்டிங் நடத்த வாடகைக்கு விடப்பட்டுள்ளது. தற்போது, அவர் படித்த வகுப்பறை காவல்நிலையம் போல வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இது சமூக ஆர்வலர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

பள்ளியில் சூட்டிங்

நெல்லை மாநகரில் நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட ம.தி.தா. இந்து மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் பாரதியார் பயின்றுள்ளார். அதனால் அவர் படித்த வகுப்பறை நினைவுச் சின்னமாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. பாரதியாரின் பிறந்த தினம் மற்றும் நினைவு தினத்தன்று அந்த வகுப்பறையில் பாரதியார் படத்துக்கு மாலை அணிவித்து மாணவர்களும் ஆசிரியர்களும் பாரதியாரின் புகழை நினைவுகூர்வது வழக்கம்.

பாரம்பரியம் மிகுந்த இந்தப் பள்ளி திரைப்பட சூட்டிங்குக்கு வாடகைக்கு விடப்பட்டு உள்ளது. தற்போது அரையாண்டு விடுமுறை என்பதால் இந்தக் கட்டடத்தில் சாமி -2 திரைப்பட சூட்டிங் 30-ம் தேதி நடக்க உள்ளது. காவல்நிலையக் காட்சிகள் இந்தப் பள்ளி வகுப்பறைகள் மற்றும் வளாகத்தில் வைத்து எடுக்கப்பட இருக்கின்றன. அதனால் இந்தப் பள்ளியின் வகுப்பறைகளின் வெளிப்புறச் சுவர்களில் காவல்நிலையத்தைப் போன்று சிவப்பு வர்ணம் பூசப்பட்டு இருக்கிறது.

நடிகர் விக்ரம் பங்கேற்கும் காட்சிகளைப் படம் பிடிக்க ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பாரதியார் படித்த வகுப்பறையின் வெளிப்பகுதியிலும் காவல்நிலைய வர்ணம் பூசப்பட்டு இருப்பது சமூக ஆர்வலர்களை அதிருப்தி அடைய வைத்திருக்கிறது. சினிமாவுக்கு வாடகைக்கு விட்ட போதிலும், ’பாரதியார் படித்த வகுப்பறைப் பகுதியில் எந்த மாற்றத்தையும் செய்யக் கூடாது’ என்கிற விதிமுறையுடன் சூட்டிங் நிறுவனத்தினரிடம் பேசியிருக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

ம.தி.தா பள்ளி

பள்ளித் தரப்பினரோ, ’ஏற்கெனவே இந்த பள்ளி வளாகத்தில் சினிமா சூட்டிங் நடைபெற்று உள்ளது. சிங்கம் -2 சூட்டிங் கூட இந்த வளாகத்தில் தான் நடந்தது. அத்துடன், பல்வேறு கலை நிகழ்வுகளுக்கும் இந்த வளாகம் வாடகைக்கு விடப்படுவது வழக்கமானது தான். அப்போது எதுவும் தெரிவிக்காத சிலர், இப்போது மட்டும் இது போன்று கருத்துத் தெரிவித்து இருப்பதன் காரணம் புரியவில்லை. பாரதியார் படித்த வகுப்பறையில் சூட்டிங் நடத்த அனுமதிக்கப்படவில்லை. அதனால் அங்கு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை’ என்று தெரிவித்தார்கள்.