வெளியிடப்பட்ட நேரம்: 12:49 (31/12/2017)

கடைசி தொடர்பு:12:49 (31/12/2017)

“அவங்களும் குழந்தைங்கதான்!” - ஆட்டிசம் குழந்தைகளை ஏற்றுக்கொள்ளும் அரசுப் பள்ளி

அரசுப் பள்ளிகள் என்றாலே, கடமைக்கு இயங்கும். எந்த முன்முயற்சியும் செய்யமாட்டார்கள் என்கிற பிம்பத்தை அர்ப்பணிப்பு மிக்க சில ஆசிரியர்கள் தவிடுபொடியாக்கி, முன்மாதிரி விஷயங்களைத் தங்கள் பள்ளிகளில் செயல்படுத்தி வருகிறார்கள். அந்த ரகம்தான், கரூர் மாவட்டம், காந்திகிராமம் காலனியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி. 3 ஆட்டிசம் பாதித்த மாணவர்கள், 15 மாற்றுத்திறன் மாணவர்களைப் பள்ளியில் சேர்த்து, அக்கறையுடன் கல்வி கற்பித்துவருகிறார்கள். இதற்காக மாவட்ட, மாநில விருதுகளை வென்றிருப்பதோடு, குஜராத்தில் நடக்க இருக்கும் தேசிய அளவிலான அறிவியல் மாநாட்டுக்கும் தங்கள் மாணவர்களை அனுப்புகிறார்கள். 


திலகவதி - ஆட்டிசம் பாதித்த மாணவர்களுக்கு உதவும் டீச்சர்

அந்தப் பள்ளியின் ஆசிரியை திலகவதி, “கடந்த இரண்டு வருஷமா இந்த மாணவர்களை எங்கள் பள்ளியில் சேர்த்துப் படிக்கவைக்கிறோம். ஐந்து வருஷத்துக்கு முன்பு, வட்டார வளமை மையத்தில் நான் வேலை பார்த்துட்டிருந்தேன். அதன் சார்பாக காந்தி கிராமம் பகுதியில் ஆய்வு பண்ணினோம். அங்கே நானூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் குழந்தைகளும், பதினைந்துக்கும் மேற்பட்ட ஆட்டிசம் குழந்தைகளும் இருக்கிறது தெரிஞ்சது. அப்பவே, இந்தக் குழந்தைகள் மற்ற குழந்தைகள்போல வாழ நம்மால் முடிஞ்ச முயற்சிகளை செய்யணும்னு முடிவுப் பண்ணினேன். மூன்று வருஷத்துக்கு முன்னாடி இந்தப் பள்ளியில் ஆசிரியர் பணிக்கு வந்ததும், அந்தக் குழந்தைகளின் வீட்டுக்குப் போய், அவங்களைப் பள்ளிக்கு அனுப்பச் சொன்னேன். பலரும் தங்களுக்கு ஆட்டிசம் பாதித்த குழந்தை இருக்கிறதைச் சொல்லவே அவமானமாக நினைச்சாங்க. நல்லா படிச்சு அரசு வேலையில் இருக்கும் ஒருவரே, 'நீங்க யார்? எதுக்கு உங்களுக்கு இந்த வேலை? உங்க நம்பரை கொடுங்க. கலெக்டர் ஆபிஸிலிருந்து பேச சொல்றேன்'னு மிரட்டலா சொன்னார். 

ஆட்டிசம் பாதித்த மாணவர்
 

அதுக்காக நான் சோர்ந்துடலை. என் வகுப்பு மாணவர்களையும் சேர்த்துக்கிட்டு தொடர்ந்து முயற்சி பண்ணினேன். 'ஆட்டிசம் என்பது சிறு மனக்குறைபாடுதான். குறிப்பிட்ட வயசு வரை நார்மலான மாணவர்களுடன் அவர்களைப் பழகவிட்டால், அவர்கள் முழுமையாக விடுபட முடியும்'னு பிரசாரம் பண்ணினோம். வீடு வீடாகத் துண்டுப் பிரசுரங்களைக் கொடுத்தோம். நாங்க பட்ட பாட்டுக்கு பலன் கிடைச்சது. இரண்டு வருஷத்துக்கு முன்னாடி ஒரு வீட்டில் சம்மதிச்சு பள்ளிக்கு அனுப்பினாங்க. அதைப் பார்த்து மற்றவர்களும் முன்வந்தாங்க. நம்மை நம்பி அனுப்பும் அந்தக் குழந்தைகளை ரொம்ப அக்கறையுடன் கவனிச்சுக்கணும்னு நினைச்சேன். அரசு ஒதுக்கும் பகல்நேர பாதுகாப்பு மையத்தை தாந்தோன்றிமலை ஒன்றியத்துல எங்க பள்ளிக்குக் கிடைக்கச் செய்தோம்'' என்று புன்னகையுடன் தொடர்கிறார்.

“ஆட்டிசத்தில் ஹைபர், ஹைபோ என ரெண்டு வகை இருக்கு. இங்குள்ள மூன்று மாணவர்களும் துறுதுறுன்னு இருக்கிற ஹைபர் வகையைச் சேர்ந்தவங்க. ஒரு இடத்துல நிற்க மாட்டாங்க. நாம் எதைக் கேட்டாலும், பதில் சொல்லாமல், நாம சொன்னதையே திருப்பிச் சொல்வாங்க. சொல்றதை எழுத மாட்டாங்க. தனியா சாப்பிட மாட்டாங்க. தன்னைதானே அடிச்சுக்குவாங்க. அடுத்தவங்களையும் அடிப்பாங்க. இந்த மூன்று பேரும் இங்கே வந்த ஆரம்பத்தில் அப்படித்தானதிருந்தாங்க. தனி ஆசிரியை கிறிஸ்டினாவை நியமிச்சு, மாணவர்களுக்குப் பயிற்சி கொடுத்தோம். மத்த மாணவர்களோடு பழகவிட்டோம். இப்போ, நிறைய மாற்றங்கள். மூன்று பேருமே கேட்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்றாங்க. சொல்றதை எழுதறாங்க. இப்போ இந்தப் பகுதியில் 11 ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் இருக்காங்க. மற்றவர்களையும் இந்தப் பள்ளியில் சேர்க்கவெச்சு அவங்களையும் சிறந்த நிலைக்கு கொண்டுவரணும். 'இங்கே சேர்த்த பிறகு எங்க குழந்தையிடம் முன்னேற்றம் தெரியுது. எங்க குழந்தையின் எதிர்காலம் பற்றி புது நம்பிக்கை உண்டாகி இருக்கு'னு சொல்லும் பெற்றோர்களின் மகிழ்ச்சியான வார்த்தைகளே நாங்க அடுத்து எடுக்கும் முயற்சிகளுக்கு டானிக்காக இருக்கு" என்கிற திலகவதி குரலில் பெருமிதம். 


ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள்

இந்த ஆட்டிசம் பிரச்னையை ஏழாவது படிக்கும் கோபிநாத் தலைமையில் ஐஸ்வர்யா, தேவா, சந்திரமதி, திய்வா ஆகியோர் அடங்கிய மாணவர்கள் குழுவை வைத்து, 'ஆட்டிசம் குழந்தைகளும், அவர்கள் எதிர்கொள்ளும் வாழ்வியல் பிரச்னைகளும்' என்ற தலைப்பில் ஆய்வு பண்ணச் சொன்னோம். அந்த ஆய்வு அறிக்கை கரூர் என்.எஸ்.என் கல்லூரியில் நடந்த தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய மாவட்ட அளவிலான போட்டியில் தேர்வானுச்சு. அப்புறம், கோவை சத்தியபாமா கல்லூரியில் நடந்த மாநில அளவிலான கண்காட்சியிலும் தேர்வாகி, தேசிய அளவில் வரும் 27-ம் தேதியில் இருந்து ஐந்து நாள்கள் குஜராத்தில் நடக்க இருக்கும் கண்காட்சியிலும் கலந்துக்க இருக்கிறோம்.

அதற்கு, நானும், தேவாவும் போறோம். இப்போ இந்தப் பகுதியில் 11 ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் இருக்காங்க. அவர்களையும் இந்தப் பள்ளிக்கு வரவைத்து, அவர்களையும் மத்த நார்மலான மாணவர்களாக மாற்றிக் காட்டி, இங்கே ஆட்டிசம் என்பது இல்லை. அதோடு, ஆட்டிசம் என்பதை நாம் அவமானதாக கருத வேண்டியதில்லை என்ற நிலையை உருவாக்குவதே எனது லட்சியம். 'ஆட்டிசம் பாதித்த தங்களது குழந்தைகளை வீட்டுக்குள்ளேயே மறைச்சு வச்சு குமுறிக்கிட்டு இருந்த அந்த பெற்றோர்கள் இப்போ மகிழ்ச்சியாக இருக்கின்றனர். அந்த மகிழ்ச்சிதான் நாங்கள் இன்னும் எடுக்கும் அத்தனை முயற்சிகளுக்குமான டானிக்" என்றார் முத்தாய்ப்பாக!.


பூங்கொடி

அடுத்து பேசிய இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை பூங்கொடி, “எங்கள் பள்ளிக்கு இன்றும் போதிய இடமில்லை. ஆனால், எங்கள் பள்ளி பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. அதற்கு காரணம், திலகவதி மற்றும் மாணவர்களின் கூட்டு முயற்சி செயல்கள்தான். நார்மல் மாணவர்களை கல்வியில் சிறந்து விளங்க வைக்கவும், அவர்களை சமூகத்தில் தலையாய மனிதர்களாக மாற்றவும் வகுப்புக்கு ஒரு நூலகம் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்திட்டு வருகிறோம். இந்திய அளவில் சிறந்த அரசு நடுநிலைப்பள்ளியாக இதை தரம் உயர்த்துவதுதான் எங்களின் உச்சப்பட்ச இலக்கு" என்றார்.


டிரெண்டிங் @ விகடன்