`ஐ லைக் டுமிலிசை!’ - 2017 தமிழிசைக்கு எப்படி இருந்தது? #2017ViralCelebs #ThrowBack2017

tamilisai

தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத பெண் ஆளுமையாக உருவெடுத்து வருகிறார் பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.   சமூக வலைத்தளங்களில் அதிகம் விமர்சிக்கப்படும் வைரல் செலிப்பிரிட்டி லிஸ்டில் டாப் 10-ல் இருப்பவர். பாசிடிவ் விமர்சனங்களையும் நெகட்டிவ் விமர்சனங்களையும் ஒரே மாதிரியாக எடுத்துக்கொள்ளும் ’ஸ்போர்டிவ்’ குணமுடையவர். 

தமிழிசையிடம் பேசினோம்...

2017-ல் உங்களுக்கு மிகவும் சந்தோஷமளித்த ஒரு விஷயம்? 

குஜராத், இமாசலப் பிரதேசம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜ.க பெற்ற வெற்றியால் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

2017-ல் உங்களுக்கு மிகவும் வேதனையளித்த ஒரு விஷயம்? 

சுனாமி எப்படி தமிழகத்தைப் புரட்டிப் போட்டதோ அதேபோன்று இந்தாண்டு ஒகி புயல் கன்னியாகுமரி மாவட்டத்தைப் புரட்டி போட்டது. 100 ஆண்டுகளாக புயலையே பார்க்காத குமரி மண்ணில் வீசிய ஒகி புயல் மிகவும் வேதனையளித்தது. இதையடுத்து இந்தாண்டு இறுதியில் நடந்த ஆர்.கே.நகர் தேர்தல் மிகவும் வேதனையளித்தது. காரணம் ஆர்.கே.நகர் தேர்தலில் விதிமுறை அல்ல ’நிதிமுறை’ தான் இருந்தது.


2017-ல் நீங்கள் அடிக்கடி கேட்ட வார்த்தை?

(சிறிது நேரம் சிரிக்கிறார்..) ’டுமிலிசை’ என்ற வார்த்தைதான்.. (மீண்டும் இடைவிடாமல் சிரிக்கிறார்)


2017-ல் உங்களுக்குப் பிடித்த ஒருவர்?

எனக்குப் பிடித்த நபர் எப்பவுமே மோடிதான். மோடியைத் தொடர்ந்து இந்த ஆண்டு என்னை மிகவும் வியக்க வைத்த ஒரு இளைஞர் பா.ஜ.க மன்ற தலைவர். ஐ.டி-யில் பணிபுரியும் அவர், வாய்ப்பேச முடியாத பெண்ணை திருமணம் செய்து, அவரை அன்பாக கவனித்துக் கொள்வதைப் பார்த்து நெகிழ்ந்தேன்.


இந்த வருடம் உங்களைப் பற்றிய கிண்டலில் நீங்களே ரசித்தது எது? 

சமூக வலைத்தளங்களில் அதிகம் கிண்டலுக்கு ஆளாகும் அரசியல்வாதிகளில் நானும் ஒருவர். என்னை கலாய்ப்பதை நானே ரசிப்பேன். இந்த ஆண்டு மிகவும் ரசித்தது என்னை கலாய்க்கும் வீடியோவில் ஒருவர் (மெட்ராஸ் சென்ட்ரல் கோபி) தாமரை மலர்ந்தே தீரும்’ ’மலர்ந்தே தீரும்’  என்று மீண்டும் மீண்டும் ஆவேசமாக கூறுவார். அதை நான் மிகவும் ரசித்தேன். 


இந்த வருடம் பார்த்த/ பிடித்த சினிமா?

’அறம்’. நான் சினிமா பார்த்து 3 ஆண்டுகள் ஆகிறது. எனக்கு சினிமா பார்க்கும் பழக்கமே கிடையாது. ஆனால் ’அறம்’ திரைப்படத்தை அனைவரும் பார்க்கச் சொன்னார்கள். அந்தத் திரைப்படத்தில் அரசியல்வாதிகளைக் கடுமையாகத் தாக்கி இருந்தாலும், ஒரு பெண்ணின் போராட்டமாகவே அதை நான் பார்த்தேன். ரசித்தேன். மக்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

2017-ஐப் பற்றி ஒரே வார்த்தையில் சொல்லுங்கள்...?

ஒளிரும் என்று நினைத்தோம். ஒளிமயமாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால், ஒகி போன்ற அழிவையும் தந்துவிட்டுச் சென்றது. அடுத்த ஆண்டாவது இயற்கை அழிவுகள் இல்லாமல் செயற்கை அழிவுகளும் இல்லாமல் ஒளிர வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொள்கிறேன்.


2018-க்கு உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக்கொள்ளும் மந்திரம் என்ன? 

’தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்’.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!