தியாகராஜ சுவாமி கோயிலில் உழவாரப் பணிகளைச் செய்த மாணவர்கள்!

இன்று காலை ஒன்பது மணி அளவில் திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயிலின் சுற்றுவட்டாரத்தில் பெரும் பரபரப்பு உண்டானது. ஆம், நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் இணைந்து திருவொற்றியூர் வடிவுடையம்மன் சமேத தியாகராஜ சுவாமி கோயிலின் மாடவீதிகளில் பஜனை செய்துகொண்டு வந்தனர். ஒவ்வொரு ஆண்டும் திருவொற்றியூர் ஸ்ரீ ராம்தயாள் கேம்கோ விவேகானந்தா வித்யாலயா பள்ளி மாணவ, மாணவிகள் மார்கழி மாதத்தை முன்னிட்டு இப்படி பஜனை செய்வது வழக்கமாம்.

தியாகராஜ ஸ்வாமி

திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை இனிய இசையில் பாடிக்கொண்டே வந்தனர். இறுதியில் திருவொற்றியூர் திருக்கோயிலில் கூடி உழவாரப் பணிகளை மேற்கொண்டனர். கோயிலின் பிராகாரங்களை தூய்மைப்படுத்தி அழகுப்படுத்தினர். பின்னர் பள்ளி மாணவ மாணவியர்களால் பரத நாட்டியம், இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மாணவ மாணவிகளின் பெற்றோர்களும் இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு பிரசாதங்களை செய்து கொண்டுவந்து எல்லோருக்கும் விநியோகித்தனர்.

தியாகராஜ ஸ்வாமி கோயில்

பள்ளிப்பிள்ளைகளின் இந்த அருமையான செயலை பக்தர்கள் பெரிதும் பாராட்டினார்கள். பக்தியும் சேவையும் மிக்க இந்த பிள்ளைகளின் செயல் அற்புதமானது. சிதிலமடைந்து வரும் பல கோயில்களையும் இப்படி மாணவ, மாணவிகள் மனது வைத்தால் காக்க முடியும். நல்ல செயல்புரிந்த அனைவருக்கும் எங்களது பாராட்டுகள் எப்போதும் உண்டு. வாழ்த்துகள் மாணவச் செல்வங்களே! 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!