வெளியிடப்பட்ட நேரம்: 17:18 (31/12/2017)

கடைசி தொடர்பு:17:18 (31/12/2017)

“நாடோடி வாழ்க்கை போயாச்சு... இப்போ எழுதுற பாட்டை யூடியூப்ல போடுறோம்!” - இருளர் சமூகப்பெண் ராணி

புள்ளி மானு துள்ளி ஓடுது... 

என் நெஞ்சத் தொட்ட மாமா 

என்னத் திரும்பிப் பாரைய்யா - இது, மாமனைக் கண்டு லவ்சு உடுறதுக்கு. 


அன்ன நடையும் 

சின்ன நடையும் 

ஒய்யார நடையுமா வந்த நெல்லுமணி 

சுந்தர கலைவாணி - இது, பொண்ணுங்க பெரிய மனுஷியானதும் குச்சிலுக்கு அழைச்சுட்டு வரும்போது பாடுறது 


வாரோம் வாரோம் நலுங்குக்கு 

வைரமணி மண்டபத்தில் 

வந்த சனம் கூடியிருக்க 

நாலு காலு பந்தலிலே - இது, கல்யாணத்துக்கு 


மஞ்சக்குருவி ஊஞ்சலாடுது... அது 

மாமனாரக் கண்டுபுட்டு மாமியாரக் கண்டுபுட்டு 

முறுக்கிக்கிட்டு திருப்பிக்கிட்டு 

வேலந்தோப்புல ஒரு 

பஞ்சண மேடையில - இது, வேட்டைக்குப் போகும்போது 

இப்படி ஒவ்வொரு பாடலைப் பாடும்போதும் ராணியின் முகம் வெட்கத்தில் சிவக்கிறது. பக்கத்தில் இருக்கும் பெரியவர், ஏதோ ஒரு பாடலின் முதல் வரியை எடுத்துவிட, அதைப் பிடித்துக்கொண்டு அடுத்தடுத்த வரிகளுக்குச் சொந்தமாக வார்த்தைகளைக் கோர்க்கிறார், சிறுசேரியில் வசிக்கும் இருளர் சமூகத்துப் பெண்ணான, ராணி. 

ராணி

“பாத்தீங்கள்ல... எங்க பெருசுங்களுக்குக்கூட எங்க சனத்து ஆளுங்களின் பாரம்பரிய பாட்டு மறந்துபோயிருச்சு. ஏதோ ஒண்ணு ரெண்டு வரிங்க அவங்க மனசுல நிக்குது. அதனாலதான் அந்தப் பாட்டுகளை எல்லாம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்துறதுக்காக, 'டோள்கட்டை இருளர் கலைக்குழு'னு ஒரு குழுவை ஆரம்பிச்சிருக்கோம்” என்கிறார், இந்தக் குழுவின் தலைவியான ராணி. 

1996-ம் ஆண்டிலிருந்து செயல்படும் இந்த 'டோள்கட்டைக் குழு', இருளர் சமூகத்தின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் மீட்டெடுத்து வருகிறது. 

“எங்க இருளர் சமூகத்துல உள்ள மக்கள் நாடோடியாத்தான் வாழ்வாங்க. எங்களுக்குன்னு வழி வழியா பாரம்பர்யமும் கலாசாரமும் இருக்கு. மூலிகைத் தொழில் பண்றது, ஊர் ஊரா திரிஞ்சு வியாபாரம் பண்றதுனு நிலையில்லாத வாழ்க்கை எங்களோடது. காலங்காலமாவே எங்க சனங்களுக்கு பூர்வீகப் பாடல்கள் இருக்குது தம்பி. ஆனால், அது அப்பா, அம்மா தலைமுறையோடு மறந்துபோனதுதான் துரதிர்ஷ்டம். முன்னெல்லாம் நாங்க பேசுற பாஷையே வித்தியாசமா இருக்கும். இப்போ அப்படி இல்லே. நிலையான வாழ்க்கைக்கு வந்துட்டோம். வேட்டையாடுறதை விட்டுட்டோம். புள்ளைங்க பள்ளிக்கூடத்துக்கும் பெரிய உத்தியோகங்களுக்கும் போக ஆரம்பிச்சுட்டாங்க. பாஷையும் மத்தவங்களை மாதிரி பழக்கத்துக்கு வந்துடுச்சு. கொஞ்ச காலம் கழிச்சு எங்க மக்கள் இன்னும் வளர்ச்சி அடையலாம். அப்போ, பழைய தொழில்களையும் வாழ்க்கை முறையையும் அடியோடு மறந்துடக்கூடாதுல்ல. அதனால், எங்களுக்கு முந்தைய தலைமுறையில் உள்ளவங்க மனசுல நிக்கும் பாட்டுக்களை பாடச் சொல்லி கேட்கிறோம். அதை கொன்றைப்பூ, சுடலிப்பூ, தாளம்பூ, மகுடம்பூ, தரணிப்பூ, களக்காப்பூ, தும்பைப்பூ எனப் பல வகை பூக்களோடும், காட்டோடும், மண் வாசத்தோடும் சம்பந்தப்படுத்தி மறு உருவாக்கம் செய்யுறோம்” என்கிறார் ராணி. 

இருளர் சமூகத்துப் பெண் ராணி

தங்கள் சமூகத்தின் பாரம்பர்ய பாடல்களை தற்போதைய காலத்துக்கு ஏற்ப மறுஉருவாக்கம் செய்வதோடு, முன்னோர்களின் பண்டிகைகள், அவர்களின் வழிபாட்டு முறைகள், நடனங்கள் என அனைத்தையுமே அடுத்த தலைமுறையிடம் கொண்டுசெல்லும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் டோள்கட்டை கலைக்குழுவை, கலை பண்பாட்டுத்துறை உறுப்பினராக அங்கீகரித்திருக்கிறது நமது அரசு. முதியோர்களுக்கு உதவித்தொகையும், மாணவர்களுக்குக் கல்வி உதவியும் செய்து ஊக்கப்படுத்துகிறது. 

“எங்க குழு மூலமா அரசாங்கம் இப்போ நிறைய உதவிகளைச் செய்துட்டிருக்கு. வருசத்துல ஒருமுறை எங்க சனங்க, குலதெய்வம் கன்னியம்மனை வழிபடுறதுக்காக மாமல்லபுரத்தில் ஒண்ணு கூடுவோம். அங்கேயும் அரசு அதிகாரிகளை அழைச்சு வந்து, எங்க முன்னேற்றத்துக்காக எந்த மாதிரியான திட்டங்கள் வெச்சிருக்காங்க, சலுகைகள் என்னென்ன இருக்குனு அவங்க மூலமாவே சொல்லவைப்போம். ஆரம்பத்தில், பாடல்களை மீட்கும் நோக்கத்துக்காக ஆரம்பிச்ச இந்தக் குழுவை, அரசாங்கம் அங்கீகரிச்சு ஏகப்பட்ட சலுகைகளை கொடுக்கிறதை நினைக்கும்போது சந்தோஷமா இருக்கு. எங்க பாட்டுக்களை எங்க சனங்களைக்கொண்டே பாடவும் ஆடவும் வெச்சு, யூடியூப்ல பதிவு பண்றோம். இதனால், எல்லா மக்களுக்கும் எங்க உணர்வுகளைக் கொண்டுசெல்ல முடியுது” 

பொறுப்போடு பேசும் ராணி, இருளர் சமூகத்தின் பண்பாட்டுப் பொக்கிஷம்.


டிரெண்டிங் @ விகடன்