மதுபோதை மற்றும் பைக் சாகசம்... எதிர்காலம் வீணாகும்..! புத்தாண்டு கொண்டாட்டம் கவனம் | New year celebrations take care and be safe, warns police

வெளியிடப்பட்ட நேரம்: 07:57 (31/12/2017)

கடைசி தொடர்பு:15:29 (31/12/2017)

மதுபோதை மற்றும் பைக் சாகசம்... எதிர்காலம் வீணாகும்..! புத்தாண்டு கொண்டாட்டம் கவனம்

புத்தாண்டு

2016 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி இரவு 10 மணி வரை சென்னையின் சாலைகள் மிக அமைதியாக இருந்தன. இரவு பத்து மணிக்கு மேல் திடீர் திடீரென வாகன விபத்துகள். சாலைகளில் ஆங்காங்கே ரத்தக் கறைகள். இந்த விபத்துகள் அடுத்தநாள் அதிகாலை 6 மணி வரை தொடர்ந்தது. ஓர் இரவில் எவ்வளவு விபத்துகள்? கணக்கெடுத்துப் பார்த்தால் மொத்தம் 140-க்கும் மேற்பட்ட விபத்துகள். 5 பேர் மரணம். ஏன் இவ்வளவு விபத்துகள்? அன்றைய இரவில்தான் 2017 ஆம் ஆண்டு பிறந்தது. புதிய வருடத்தின் கொண்டாட்டங்களே இத்தனை விபத்துகளுக்கும் காரணம். புதிய வருடத்தைக் கொண்டாடி வரவேற்பதில் என்ன தவறு இருக்கிறது என கேட்கிறீர்களா? அமைதியான முறையில் அடுத்தவர்களுக்கு வாழ்த்துச் சொல்லி கொண்டாடுவதை விடுத்து சாகசம் என்ற பெயரில், இளைஞர்கள் மதுபோதையில் செய்யும் அட்டூழியங்கள் மட்டுமே இத்தனை விபத்துகளுக்கும், உயிரிழப்புகளுக்கும் காரணம்.

புத்தாண்டு விபத்து

சாகசம் என்ற பெயரில் சாலையில் நெருப்பு பறக்க இருசக்கர வாகனங்களை ஓட்டிச் செல்வது; அளவுக்கதிகமான மதுபோதையில் வாகனங்களை ஓட்டிச் செல்வது... இவை மட்டும்தான் புத்தாண்டுக் கொண்டாட்டம் என இன்றைய இளைஞர்கள் பலரது நினைப்புதான், அவர்களையும் பொதுமக்களில் பலரையும் பேராபத்தில் கொண்டு சேர்த்துவிடுகிறது. கடந்த சில ஆண்டுகளில், புத்தாண்டு இரவுக் கொண்டாட்டத்தில் மட்டும் சென்னையில் எவ்வளவு விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் நேர்ந்திருக்கின்றன என்று தெரியுமா? 2017 ஆம் ஆண்டு புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் 140-க்கும் அதிகமான வாகன விபத்துகள். அதில் 120-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 5 பேர் மரணமடைந்தனர். அதேபோல 2016 ஆம் ஆண்டு புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் மொத்தம் 900 விபத்துகள் ஏற்பட்டன. இதில் 290-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் 4 பேர் இறந்துவிட்டனர். 2015 ஆம் ஆண்டு 100-க்கும் மேற்பட்ட விபத்துகள். இதில் 50 -க்கும் மேற்பட்டவர்கள் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றனர். 5 பேர் உயிரிழந்தனர். இத்தனைக்கும் காரணம் மதுபோதையில் தாறுமாறாக பைக் மற்றும் கார்களை ஓட்டிச் செல்லும் இளைஞர்கள்தான். இந்த வருடம் இதுபோன்ற விபத்துகள் பெருமளவில் தடுக்கப்படும். மதுபோதையில், பைக் மற்றும் கார்களை ஓட்டிச் செல்பவர்கள் மீது கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

புத்தாண்டு பைக் சாகசம்

இதைப்பற்றி போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் அருணிடம் பேசினோம்... “இதுபோன்ற விபத்துகள் இரவு 9 மணியிலிருந்து அடுத்தநாள் காலை 6 மணி வரை நடக்கின்றன. இதில் 90 விழுக்காடு விபத்துகள் 18 வயதிலிருந்து 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களால் நடைபெறுகிறது. மது அருந்திவிட்டு பைக் சாகசங்களில் ஈடுபட்டு அவர்கள் வாழ்க்கையைக் கெடுத்துக்கொள்வதுடன், பொதுமக்களின் வாழ்க்கையையும் சேர்த்துக் கெடுத்துவிடுகிறார்கள். புத்தாண்டு இரவு அன்று சென்னை முழுவதும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களைச் சார்ந்த 126 ஆம்புலன்ஸ்கள் தயார்நிலையில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும். இந்தவருடம் எங்களுடைய டார்கெட் ஜீரோ ஆக்ஸிடென்ட்; ஜீரோ டெத் (Zero Accident Zero Death). இதற்காக சென்னையின் கடற்கரைகள், ஈ.சி.ஆர்., ஓ.எம்.ஆர் சாலைகள் மற்றும் சென்னையின் முக்கிய இடங்கள் அனைத்திலும் 176 செக்கிங் பாயின்ட்கள் உருவாக்கப்பட்டு கடுமையான சோதனைகள் இருக்கும். இந்த செக்கிங் பாயின்ட்களில், உரிய ஆவணங்கள் இல்லாமலும், மதுபோதையிலும் பைக் மற்றும் கார் ஓட்டி வருபவர்களின் லைசென்ஸ் மற்றும் பாஸ்போர்ட்க்கான என்.ஓ.சி.கள் தடை செய்யப்படும். மேலும் தண்டனைகள் கடுமையானதாகவும் இருக்கும். 

புத்தாண்டு கொண்டாட்டம்

குறிப்பாக பெற்றோர்கள் அனைவரும், அன்று ஒரு நாள் மட்டும் தங்களின் பிள்ளைகள் பைக் எடுக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஒருவேளை உங்களது பிள்ளைகளால் அன்றைய தினத்தில், ஏதேனும்  விபத்துகள் நடந்தால், உங்கள் பிள்ளைக்கு லைசென்ஸ், பாஸ்போர்ட் கிடைக்காது. விபத்து கேஸ் பதிவாகும். அதனால் அவர்களது வேலை வாய்ப்பு, வெளிநாடுகள் செல்லும் வாய்ப்பு என அனைத்தும் கேள்விக்குறியாகி எதிர்காலமே வீணாகிவிடும். பொதுமக்களின் நலன் மட்டுமே அன்றைய தினத்தில் முக்கியமாகக் கருதப்படும். எனவே உங்கள் பிள்ளைகளுக்கு அறிவுரை சொல்லி, 'பைக் எடுக்கவேண்டாம்' என்று எடுத்துச் சொல்லுங்கள். அதேபோல இளைஞர்களும் 'தங்களின் சந்தோஷம் எவ்வளவு முக்கியமோ... அதேபோல அடுத்தவர்களின் சந்தோஷமும் முக்கியம்' என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும். மதுபோதையில், பைக் சாகசத்தில் ஈடுபட்டு உங்களின் வாழ்க்கையையும், பொதுமக்களின் வாழ்க்கையையும் ஆபத்தில் முடித்துவிடாதீர்கள். புத்தாண்டு என்பது கொண்டாடுவதற்கே... அதை மற்றவர்களுடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள். பைக் சாகசமும், மதுபோதையும் ஒருபோதும் மகிழ்வைத் தராது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அனைவரும் சேர்ந்து புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்போம்." என்றார்.

மதுபோதையில், பைக் சாகசத்தில் ஈடுபடும் இளைஞர்கள் இந்த அறிவுரையைப் புரிந்துகொண்டால் சரி. இல்லையென்றால், போக்குவரத்துக் காவல்துறை கூடுதல் ஆணையர் சொல்லியது போல், ஒருநாள் கூத்துக்காக உங்களது வாழ்நாட்களை ஜெயிலுக்குள் கழிக்க வேண்டியது இருக்கும். அனைவரும் சேர்ந்து புத்தாண்டை விபத்து இல்லாத விழாவாகக் கொண்டாடுவோம்!


டிரெண்டிங் @ விகடன்