வெளியிடப்பட்ட நேரம்: 15:27 (31/12/2017)

கடைசி தொடர்பு:15:27 (31/12/2017)

ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு: குற்றவாளி மக்களா... தேர்தல் ஆணையமா?!

ஆர்.கே.நகர்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி 1977-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அன்றுமுதல்,  இன்றுவரை இந்தத்தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளால் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான ஒரே பணி 'வைத்தியநாதன் மேம்பாலம்' கட்டப்பட்டது மட்டும்தான். தொகுதியில் ஏற்கெனவே செயல்பட்டுவந்த உடற்பயிற்சிக் கூடத்துடன் கூடிய 13 விளையாட்டு மைதானங்கள் இப்போது இல்லை. நான்காண்டுகளுக்கு ஒருமுறை என்ற கணக்கில் அந்த மைதானங்கள் ஒன்றன்பின் ஒன்றாகக் காணாமல் போயின. பின்னர், மீண்டும் அவை புதுப்புதுப் பெயர்களில் தொடங்கப்பட்டன. அங்கன்வாடி மையங்கள், சமூகசேவை மன்றங்கள், இரவுப் பள்ளிகள் (இங்கு இதுவரையில் யாருக்கும் கல்வி போதித்தது இல்லை என்பது தனிக்கதை), ஆவின் பால்பூத்துகள் என்று வெவ்வேறு பெயர்களில் அந்த விளையாட்டு மைதானங்களின் பெயர்கள் மாறிப்போய் உள்ளன. பொதுமக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக தொகுதியில் மிச்சமிருப்பது கொருக்குப்பேட்டை மற்றும் துறைமுக ஊழியர் குடியிருப்பில் உள்ள இரண்டு மைதானங்கள் மட்டுமே. கடைசியாகக் காணாமல் போன உடற்பயிற்சிக்கூட மைதானத்தில்தான் இப்போது ஆர்.கே.நகர் தொகுதிக்கான  மாநகராட்சி மண்டல அலுவலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இங்குதான் அண்மையில் இடைத்தேர்தல் பணிகளை, அதிகாரிகள் சிறப்பாக நடத்தி முடித்துள்ளனர்.

ஆர்.கே. நகர் தொகுதி உருவாக்கப்பட்ட காலத்திற்கு முன்பிருந்தே டாட்டா, பெஸ்ட் அன்ட் கிராம்ப்டன், மபத்லால் உள்ளிட்ட 12 தனியார் நிறுவனங்களும், பால்மர் லாஹி, ஐ.ஓ.சி.எல். போன்ற மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்த 11 துணை நிறுவனங்களையும் சேர்த்து 23 பிரபல நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. இவை தவிர நூற்றுக்கணக்கான அரிசி, பருப்பு மில்களும், ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களும் இத்தொகுதியில் செயல்பட்டுக் கொண்டிருந்தன. இந்த நிறுவனங்களின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் இப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு வேலை உறுதி என்ற நிலை இருந்தது. ஆனால், இன்றைய நிலையோ தலைகீழாக மாறிவிட்டது. எந்த வேலைவாய்ப்புக்கும் வழியின்றி, ஏற்கெனவே செயல்பட்டு வந்த அந்த நிறுவனங்கள் எல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் தொலைந்து போய் விட்டன. 

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலின்போது, தொகுதியில் உள்ள பிரின்ஸ் அபார்ட்மெண்ட்டில்தான் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அந்த அபார்ட்மெண்ட்தான் முன்பொரு காலத்தில் 'டாடா' கம்பெனி இருந்த இடம். இப்போது தொகுதியின் பத்தாவது எம்.எல்.ஏ.வாக, சுயேச்சையாகப் போட்டியிட்ட டி.டி.வி. தினகரன் வெற்றிபெற்றிருக்கிறார். இந்தத் தொகுதியில் செயல்பட்டு வந்த நிறுவனங்கள் மூடப்பட்டபோது, அத்தொகுதியில் எம்.எல்.ஏ.க்களாக இருந்தவர்களின் ஒருவர்கூட அதுபற்றிக் கவலைப்பட்டதில்லை. விளையாட்டு மைதானங்கள் உருமாறியபோதும் அதைப்பற்றி அவர்கள் வருந்தியது இல்லை. 

ஆர்.கே.நகரில் பத்து பொதுத்தேர்தல்களும், இரண்டு இடைத்தேர்தல்களும் நடைபெற்றுள்ளன. இந்தத் தொகுதியில் தி.மு.க. சார்பில் சற்குணம் இரண்டு முறையும், அ.தி.மு.க. சார்பில் சேகர்பாபு இரண்டு முறையும் வெற்றி பெற்றனர். எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் துணை அமைச்சராக இருந்த ஐசரிவேலன், அமைச்சர்களாக இருந்த மதுசூதனன், சற்குணம், முதல்வர் ஜெயலலிதா ஆகியோரும் இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ-க்களாக வெற்றிபெற்றுள்ளனர். 

அண்மையில் நடைபெற்று முடிந்த இடைத்தேர்தலில், ஆர்.கே.நகர் தொகுதியில் அடங்கிய வாக்காளர்கள் பணம் பெற்றுக் கொண்டுதான் வாக்களித்தார்கள் என்ற குற்றச்சாட்டு அனைத்துமட்டத்திலும் பரவலாக விவாதிக்கப்படுகிறது. பணப்பட்டுவாடா குறித்த புகார் காரணமாகவே, கடந்த ஏப்ரல் மாதம் இந்தத் தொகுதியில் நடக்கவிருந்த இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. வருமான வரித்துறையினர், அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தியதில், வாக்காளர்களுக்கு 89 கோடி ரூபாய்வரை விநியோகிக்கப்பட்டதாக தெரியவந்ததால் அப்போது தேர்தல் ரத்து செய்யப்பட்டது. வருமான வரித்துறை அப்போது கைப்பற்றிய ஆவணத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்களின் பெயர்களும் இடம்பெற்றிருந்தது. அவர்கள் அனைவர் மீதும் குற்றச்சாட்டு சொல்லப்பட்டது.  

கடந்த ஏப்ரல் மாதத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட போது டி.டி.வி. தினகரனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள்  செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, தங்கமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரைத்தும் சென்னை அபிராமபுரம் போலீஸார் யார் மீதும் வழக்குப்பதிவு செய்யவில்லை. போலீஸாரின் எப்.ஐ.ஆரில் தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட எந்தவொரு நபரின் பெயரும் சேர்க்கப்படவில்லை. அதன் பின்னர், மீண்டும் டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்தபோது, 'தொகுதி வாக்காளர் பட்டியலில் இருக்கும் இரட்டை வாக்குரிமையை நீக்கிய பின்னரே தேர்தலை நடத்த வேண்டும்' என்று தி.மு.க. சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொரடப்பட்டது. இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன், 'ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்த 45 ஆயிரத்து 819 போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டு விட்டனர்' என்று தெரிவித்து, அதுதொடர்பான அறிக்கையையும் தாக்கல் செய்தார். இதனை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. 

“ஓராண்டுக்கும் மேலாக மக்கள் பிரதிநிதி இல்லாமல் ஒரு தொகுதியை காலியாக வைத்திருக்க அனுமதிக்க முடியாது. 2017, டிசம்பர் 31-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடியுங்கள். போலி வாக்காளர்கள் குறித்த விவரத்தை தேர்தல் ஆணைய இணைய தளத்தில் வெளியிடுங்கள்" என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

‘போலி வாக்காளர்கள் குறித்த விவரம் இணையதளத்தில் முழுமையாக வெளியிடப்பட்டதா?’ என்பது குறித்து வழக்குப் போட்ட தி.மு.க.வும் அதற்குப் பின்னர் பேசவில்லை. ஆனால், வேறொரு தளத்தில் நின்று மக்கள் பேசினர். ‘நாங்கள் 45 ஆயிரம் பேர், எங்களுக்கு வாக்குரிமை மொத்தமாகப் போய்விட்டது' என்று தொகுதியின் மேற்குப் பகுதி வாக்காளர்கள் தேர்தல்தேதி அறிவிக்கப்பட்ட  நாள்முதல் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். மறியலில் ஈடுபட்ட மக்கள்  இரட்டை வாக்குரிமை பெற்றவர்களா அல்லது அவர்கள் பக்கத்துத் தொகுதியைச் சேர்ந்தவர்களா என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் உள்பட யாரும் எழுப்பவில்லை. குறைந்தபட்சம், மறியல் செய்த மக்கள் பக்கம் நியாயம் இருக்கிறதா, அவர்கள் ஆர்.கே.நகர் தொகுதியைச் சேர்ந்த வாக்காளர்கள்தானா என்றுகூட யாரும் கவலைப்படவில்லை. 

ஆர்.கே.நகர்

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்கள் தினமும் வீதிக்கு வந்து போராடினார்கள். மறியல் செய்தார்கள், போலீஸாரால் அப்புறப்படுத்தப்பட்டார்கள். அவ்வளவுதான், நடந்தது. 'எங்களுடைய வாக்கு எங்கே?' என்றுகேட்டு போராடியவர்களை வாக்குப்பதிவுக்கு நான்கு நாள்கள் முன்னர் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அழைத்தனர். ஆர்.கே. நகர் தொகுதிக்கான தேர்தல் அலுவலகத்தில் அந்த மக்களின் கோரிக்கைகள் மனுவாகப் பெறப்பட்டன. 'தேர்தலுக்கு முதல்நாள், உங்கள் பெயர் பட்டியலில் வந்து விடும்' என்று அவர்களுக்கு அதிகாரிகள் உறுதியளித்தனர். அது சாத்தியம்தானா என்று யாரும் அப்போது கேட்கவில்லை. ஆனால், இவ்வளவு மெனக்கெட்டும் அந்த மக்களுக்கு வாக்குகள் இல்லாமல் போன விஷயம், வாக்களிக்கப்போன அன்று காலைதான் தெரிந்தது.

நேதாஜிநகரின் பல இடங்களில் மக்கள் சாலை மறியல் செய்தனர். 'நீங்கள் இப்படியெல்லாம் கும்பலாகக் கூடினால் துணை ராணுவத்தை அழைக்க நேரிடும்' என்று சொல்லி அங்குகூடிய மக்களை போலீஸார் சுலபமாக அப்புறப்படுத்தினர். பணப்பட்டுவாடா சம்பவங்களும் இதேபோல்தான் அமைந்தது. தொகுதியையொட்டியுள்ள காலடிப்பேட்டை, சாத்தாங்காடு சாலையில் உள்ள ஒரு மண்டபத்தில் 'பணப்பட்டுவாடா' செய்வதாக தகவல் பரவியது. தகவல் கிடைத்து ஸ்பாட்டுக்குச் சென்ற திருவொற்றியூர் போலீஸார், சூழ்நிலையைப் பார்த்தபின் செயற்கை தியானத்தில் ஈடுபட்டனர்.

பணப்பட்டுவாடாவைப் படம் பிடித்த ஊடக புகைப்படக்காரர்கள், வீடியோகிராபர்கள் தாக்கப்பட்டனர். மீடியாவைச் சேர்ந்தவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து தி.மு.க.வினர் குரல்கொடுக்க, மொத்த மீடியாவையும் தி.மு.க. ஆதரவாளர்களாகச் சித்தரித்து மிரட்டியது போலீஸ். இப்படி ஒரு சம்பவமல்ல... தொகுதியில் பல இடங்களில்  'பணப்பட்டுவாடா' வைக் கண்டித்தும், தடுத்தும் சிறுசிறு மோதல்கள் நடந்து கொண்டேதான் இருந்தன.  தேர்தல் பிரசாரம் ஓய்ந்ததாகச் சொன்ன நாளில் ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் காட்சிகளைக் கொண்ட வீடியோக்கள் நூற்றுக்கணக்கில் வெளிவந்தன. அந்த வீடியோக்கள் எதையும் தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ளவில்லை.

போலீஸ், துணை ராணுவம், தேர்தல் ஆணையப் பறக்கும் படை அதிகாரிகள் என்று பல பெயர்களில் பாதுகாப்பும், கண்காணிப்பும் மேற்கொள்ளப்படுவதாகச் செய்திகள் மட்டுமே வெளியாகின. இப்படி தீவிரக் கண்காணிப்பில்(?) இருந்த அத்தனை அரசு அதிகாரிகளும், பாதுகாப்புடன் தொகுதியில் வலம் வந்தனர்.  பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், சில சுயேச்சைகளும் எடுத்த பணப்பட்டுவாடா வீடியோக்கள், தேர்தல் அதிகாரிகளுக்குத்தான் அதிகமாக 'ஷேர்' செய்யப்பட்டன. 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா என்று தெரிவித்து கடந்த முறை இடைத்தேர்தல் நிறுத்தப்பட்ட நிலையில், அப்போது அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீஸார் எடுத்த நடவடிக்கை (?) தேர்தல் ஆணையத்துக்குத் தெரியும். அதேபோல், இந்த முறையும் தேர்தல் ஆணையம் பணப்பட்டுவாடா குறித்து புகார் அளித்திருந்தால், அபிராமபுரம் காவல்நிலையம் செய்த அதே சாதனையை இன்னொரு காவல் நிலையமும் செய்திருக்கும் என்பதால் தேர்தல் ஆணையம் இந்தமுறை அமைதி காத்தது என்றே எடுத்துக் கொள்ளவேண்டும். 'நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, தேர்தலை நடத்தி முடித்து விட்டால் போதுமானது' என்று தேர்தல் ஆணையம் நினைத்திருக்கக் கூடும்.

இந்த முறையும் பணப்பட்டுவாடாவைக் கண்டுபிடித்து, அதன்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அதற்காகப் புகார் அளித்து, தேர்தல் மீண்டும் நிறுத்தப்பட்டு விட்டால்...? 'ஒரு சிறிய தொகுதியில் இடைத்தேர்தலைக்கூட நடத்த முடியாமல் தேர்தல் ஆணையம் எதற்கு உள்ளது?' என்ற கேள்வி எழக்கூடும். ஒவ்வொரு முறையும் பல கோடி ரூபாய் செலவிட்டு கடைசி நேரத்தில் தேர்தலை ரத்து செய்தால் என்னாவது என்பது போன்ற பல பலகேள்விகள் தேர்தல் ஆணையத்துக்கு முன் இருந்தன. ஆர்.கே.நகர் தொகுதியில் கண்ணெதிரே நடந்த குற்றங்களைக் கண்டும், காணாமலும் விட்ட அதிகாரிகள் யாரும் இன்று விவாதப்பொருளாக மாறவில்லை. ஆனால் தொகுதி மக்கள்தான் விவாதப்பொருளாகி இருக்கின்றனர்.

அந்தவகையில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் முடிவுக்குப் பின்னால் அத்தேர்தலில் தோல்வியடைந்த கட்சிகளைவிடவும் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது தொகுதி மக்கள்தான். அவர்கள் கொள்ளைக் கூட்டம் போன்று சித்தரிக்கப்படுகிறார்கள். தேர்தல் ஆணையம் மீதோ, அரசியல் கட்சிகள் மீதோ, காவல்துறை உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் மீதோ இப்படிப்பட்ட விமர்சனங்கள் வர வாய்ப்பில்லை. ஆர்.கே.நகரில் வாக்குகளைப் பதிவுசெய்த ஒரு லட்சத்து 76,885 மக்கள் மீதுதான் விமர்சனங்கள் எழுப்ப முடியும். கண்டிப்பாக அந்த மக்கள் யார் மீதும் வழக்குப் போட மாட்டார்கள். அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனுக்கு 48,306 பேரும், தி.மு.க.வின் மருதுகணேஷூக்கு 24,651 பேரும், நாம் தமிழர் கலைக்கோட்டுதயத்துக்கு 3,802 பேரும் வாக்களித்துள்ளனர். யாருக்கும் வாக்களிக்க விரும்பாமல் 'நோட்டா'-வுக்கு 2,348 பேர் வாக்களித்ததும், தேசிய கட்சியான பா.ஜ.க. வேட்பாளர் கரு. நாகராஜனுக்கு நோட்டாவைக் காட்டிலும் மிகக் குறைவான, அதாவது 1,368 பேர்தான் வாக்களித்துள்ளனர். 

பி.ஜே.பி. தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அளித்த ஒரு பேட்டியில், "அந்தத் தொகுதியில் பெரும்பாலான மக்கள் 'அப்படிப்பட்டவர்கள்' தான் என்று மிகச்சாதாரணமாக வாக்காளர்கள் மீது சேற்றைவாரி இறைத்துச் சென்றிருக்கிறார்.
ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலில் மக்கள் அளித்துள்ள தீர்ப்பு, பல முன்னுதாரணங்களை தவிடு பொடியாக்கி விட்டு புதிய வரலாற்றைப் படைத்துள்ளது. இடைத்தேர்தல் முடிவு உணர்த்துவது ஒருபுறம் இருக்கட்டும்; இந்த முடிவின் பின்னணியில் யாரைக் குற்றம்சாட்டுவது என்பதே இப்போதைய கேள்வி. பணப்பட்டுவாடாவைத் தடுக்கத் தவறிய தேர்தல் ஆணையமா? அல்லது பணம் பெற்றுக் கொண்டு வாக்களித்ததாகக் கூறப்படும் தொகுதி மக்களா என்பதற்கு எதிவரும் காலம்தான் பதிலளிக்க வேண்டும்.


டிரெண்டிங் @ விகடன்