கிராமத்து பெண்களிடம் நூதன மோசடியில் ஈடுபட்ட பெண்கள்..!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சுற்றியுள்ள கிராமங்களில் மோசடி செய்த மூன்று பெண்களை இன்று மாலை காவல்துறையினர் கைது செய்தனர். இச்சம்பவத்தால் அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த கிராமங்களில் பரபரப்பு ஏற்பட்டது. 'அன்னை தெரசா தொண்டு நிறுவனம்' மற்றும் 'தமிழ்நாடு மகளிர் நல மேம்பாடு திட்டம்' என்ற பெயரில் ஒரு மகளிர் கும்பல், ஊடகம் என்று ஸ்டிக்கர் ஒட்டிய வாகனத்தில் அறந்தாங்கியைச் சுற்றியுள்ள கிராமங்களில் சுற்றிச் சுற்றி மோசடி செய்து வந்திருக்கிறது. 

கிராமத்து ‎பெண்களிடம், '4,500 ரூபாய் கொடுத்தால் உடனடியாக கேஸ் அடுப்பு தருவோம். இரண்டு நாட்கள் கழித்து ஒரு சிலிண்டர் கொடுப்போம். ஒரு வாரம் சென்றதும் 50 ஆயிரம் லோன் தருவோம். அந்த லோன் தொகையில் 20 ஆயிரம் மானியம் போக 30 ஆயிரம் மட்டும் திரும்ப செலுத்தினால் போதும்" என்று பேசி, பெண்களிடம் 4,500 ரூபாய் பெற்றுக் கொண்டு வெறும் 1,500 ரூபாய் பெறுமானமுள்ள அடுப்பை கொடுத்துள்ளனர். கிராமத்து பெண்களும் அந்தக் கும்பலின் பேச்சை நம்பிவிட்டனர். ‎இது போன்று ஆறு மாதங்களுக்கு முன்பு, கூத்தங்குடி என்ற கிராமத்தில் பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு அடுப்பைக்கொடுத்து ஏமாற்றியுள்ளனர். ஆனால், அவர்கள் சொன்னபடி திரும்பி வராமல் ஏமாற்றி உள்ளனர்.

அவர்கள் கொடுத்த அடுப்பும் ஏமாற்று அடுப்பு என்பது தெரிய வந்திருக்கிறது. அதே போல் அந்தப் பெண்கள் கொடுத்த போன் நம்பரும் பொய் நம்பர் என்பதும் தெரிந்தபோதுதான் தாங்கள்  ஏமாற்றப்பட்டு விட்டோம் என்ற விசயமே கூத்தங்குடி பெண்களுக்கு புரிய ஆரம்பித்திருக்கிறது. அந்த மோசடிப் பெண்கள் மீண்டும் ஊர்வணி என்ற கிராமத்துக்கு சென்றுள்ளனர்..அந்தப்பகுதி பெண்களுக்கு ஏற்கெனவே இவர்களது, விவரம் தெரிந்தநிலையில், உடனே  உஷாராகி, மோசடிப் பெண்களை வளைத்துப்பிடித்து அறந்தாங்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஏற்கனவே இவர்களிடம் அடுப்பு வாங்கி ஏமாந்தவர்கள் தகவலறிந்து அடுப்புகளுடன் காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்தனர்.

அதன் அடிப்படையில் போலீசார் மூன்று பெண்களையும் இன்று மாலை கைது செய்தனர். இதுகுறித்து அறந்தாங்கி காவல் நிலைய ஆய்வாளர் சொல்லும்போது, "மோசடியில் ஈடுபட்டவர்கள் திருச்சியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பெயர் ரேவதி, மேரி, சங்கீதா. குறைந்த விலையுடைய அடுப்பை கூடுதல் விலைக்கு விற்பதற்காகவே இப்படி ஒரு மோசடி செய்திருக்கிறார்கள். இவர்கள் மூவரும் வேறு ஏதாவது மோசடியில் ஈடுபட்டார்களா என்பதையும் விசாரித்து வருகிறோம். அவர்கள் பயன்படுத்திய ஆம்னி வாகனத்தையும் அடுப்புகளையும் பறிமுதல் செய்திருக்கிறோம்' என்றார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!