வெளியிடப்பட்ட நேரம்: 08:29 (31/12/2017)

கடைசி தொடர்பு:09:31 (31/12/2017)

’வரப்போகும் சட்டமன்றப் போரில் நம் படை இருக்கும்!’ - ரஜினிகாந்த் பகீர்  #LiveUpdates

ரஜினியின் அரசியல் அறிவிப்பால் அவரின் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். 

ரஜினி

ரஜினிகாந்த்

”பதவிக்கு ஆசைப்பட்டவன் நான் அல்ல. அப்படி பதவி ஆசை இருந்திருந்தால் பல ஆண்டுகளுக்கு முன்னரே நான் நாற்காலியில் அமர்ந்திருப்பேன். 45 வயதில் இல்லாத பதவி ஆசை இப்போது வருமா? நான் இப்போது அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைப்பது ஜனநாயக ரீதியாக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். அரசியல் கெட்டு போய்விட்டது. பிற மாநிலங்கள் நம்மை பார்த்து சிரிக்கின்றன. இந்த நேரத்திலும் நான் மக்களுக்காக அரசியலுக்கு வரவில்லை என்றால், நான் சாகும்வரை குற்றவுணர்ச்சி இருக்கும்.  அனைத்து சிஸ்டத்தையும் மாற்ற வேண்டும். ஆண்டவனின் அருளும் மக்களின் நம்பிக்கையும் இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும். இது இரண்டும் எனக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன். சாதி மத பேதமற்ற ஆன்மீக அரசியலை முன்னெடுக்க வேண்டும். ’உண்மை, உழைப்பு, உயர்வு இது தான் என் மந்திரம். வருகிற சட்டமன்ற போரில் நம் படையும் இருக்கும். நான் ஜெயித்து நான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் மூன்று ஆண்டுகளில் ராஜினாமா செய்வேன்’” என்றார் ரஜினிகாந்த். 

ரஜினிகாந்த்

ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்கள் மத்தியில் பேசி வரும் ரஜினிகாந்த் “ரொம்ப பில்ட் அப் கொடுத்துவிட்டோம் என்று நினைக்கிறேன். எனக்கு மீடியா பார்த்தால் தான் பயம். அரசியல் பார்த்தால் பயம் இல்லை.  மற்றபடி நான் அரசியலுக்கு வருவது உறுதி. இதுகாலத்தின் கட்டாயம். வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் தனி கட்சி ஆரம்பித்து போட்டியிடுவேன். 45 வயதில் இல்லாத பதவி ஆசை இப்போது வருமா?” என்றார். 

ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் இன்று ஆறாவது நாளாக தன் ரசிகர்களை சந்திக்கிறார். அரசியல் பிரவேசம் குறித்து இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்க உள்ளார் ரஜினிகாந்த். கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினிகாந்த் ரசிகர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். ரஜினிகாந்தின் அரசியல் நிலைபாட்டை தெரிந்துகொள்ள உலகம் முழுவதும் உள்ள அவரின் ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். ரஜினி ஒரு பேரவைத் தொடங்கவே 21 ஆண்டுகாலம் எடுத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ரஜினியின் போயஸ் இல்லம் அருகே இன்று  காலையே செய்தியாளர்கள் குவிந்துவிட்டனர். ரசிகர்களை சந்திக்க காரில் புறப்பட்ட ரஜினியிடம் அரசியலுக்கு வருவீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த ரஜினி “மண்டபத்தில் சொல்கிறேன். பத்து நிமிடம் காத்திருங்கள்” என்றார் அவரது ஸ்டைலில். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க