வெளியிடப்பட்ட நேரம்: 15:09 (31/12/2017)

கடைசி தொடர்பு:07:31 (02/01/2018)

“ஆன்மிகமும் அரசியலும் இருவேறான பாதை!” - ரஜினிக்கு அட்வைஸ் செய்யும் அரசியல் தலைவர்கள்

ரஜினி

னது ‘ஆன்மிக அரசியல்’ பிரவேசத்தை 2017-ம் ஆண்டின் இறுதி நாளான இன்று உறுதிபடுத்தியிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். 1996லிருந்து அவரது அரசியல் அறிவிப்புக்காக காத்திருக்கும் அவரது ரசிகர்களுக்கு கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்குப் பிறகு அதற்கான விடை கிடைத்துள்ளது. கூடவே, வரவிருக்கும் 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாகவும் சாதி மத பேதமற்ற அரசியலை முன்னெடுத்துச் செல்லப்போவதாகவும்  அறிவித்துள்ளார். அதுவரை யாரும் அரசியல் பற்றிப் பேசக் கூடாது என்று தனது ரசிகர்களிடம் கூறியுள்ளார். தமிழக அரசியல் சில கட்சிகளாலும் அதன் தலைமைகளாலும் சீரழிந்து இருப்பதாகவும் அதனை அடித்தளத்திலிருந்து மாற்றி அமைக்கவேண்டியது  கடமை என்றும் ரசிகர்களிடையே அவர் பேசி இருக்கிறார். ரஜினியின் அரசியல் பிரவேச முடிவுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் ஆதரவும் எதிர்ப்பும் எழுந்த வண்ணம் இருக்கின்றன.

திராவிடக் கட்சிகளின் உதவி இல்லாமல் ரஜினி வெற்றிபெற முடியாது  

நாஞ்சில் சம்பத்

ரஜினியின் அரசியல் எண்ட்ரி குறித்து கருத்து கூறியிருக்கும் தினகரன் அணியின் நாஞ்சில் சம்பத்,“இந்தியா ஜனநாயக நாடு. இங்கே யார் அரசியல் கட்சி தொடங்குவதற்கும் உரிமை இருக்கிறது. ஆனால், மக்களிடம்தான் அவர்களை ஆதரிப்பதா? வேண்டாமா? என்கிற முடிவு இருக்கிறது. மேலும், ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதரவு இருந்த விஜயகாந்த் அரசியல் கட்சியில் நுழைவதற்கும் எதிர்க்கட்சித் தலைவராக அமர்வதற்கும் அ.தி.மு.க.வின் உதவி தேவையாய் இருந்தது. அதனால் அவர் அரசியலில் வெற்றி பெறுவது என்பது திராவிடக் கட்சிகளின் உதவியில்லாமல் இங்கே சாத்தியமில்லை. ஏனென்றால் இது பெரியாரின் மண், அண்ணாவின் நந்தவனம், எம்.ஜி.ஆரின் தோட்டம், ஜெயலலிதாவின் கோட்டை.மேலும், ஆன்மிகம் என்பது வேறு, அரசியல் என்பது வேறு. இரண்டும் ஒன்றாகப் பயணிக்கக் கூடாது தனித்தனியாகதான் பயணிக்கவேண்டும்” என்றார்.

“சரியான சமயத்தில் முடிவை அறிவித்திருக்கிறார் ரஜினி!”

திருமாவளவன்


‘விஜயகாந்த் அரசியலில் நுழைந்த சூழலில் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா என இரண்டு வலுவான தலைவர்கள் தமிழக அரசியலில் இருந்தார்கள். ஆனால், தற்போதைய தமிழக அரசியல் சூழல் அப்படியான வலுவான தலைமை இல்லாமல் இருக்கிறது. இப்படியான சூழலில் ரஜினி தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. சாதிமத வேறுபாடற்ற ஆன்மிக அரசியல் என்று 234 தொகுதிகளிலும், தான் தனித்து போட்டியிடுவேன் என்று கூறியிருப்பதன் மூலம் எவ்வித மதச்சார்புடைய தேசியக் கட்சிகளுடனோ அல்லது சாதியக் கட்சிகளுடனோ அவர் கூட்டணி வைக்கப்போவதில்லை என்பது தெள்ளத்தெளிவாகிறது. இனி அவருக்கு அரசியல் கட்சிகளிடமிருந்து எதிர்ப்பு என்பதைத் தவிர அவருக்கு நிகரான வலுவான எதிர்ப்பு என்பது அவரது சினிமாத்துறையிலிருந்து மட்டுமே வர வாய்ப்பிருக்கிறது’ என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன்.

“மக்கள் பிரச்னைகளைப் பேசாமல் என்ன அரசியல் செய்துவிட முடியும்?”

வேல்முருகன்

“நான் கனவில்கூட நினைக்காத அளவுக்கு 1000 மடங்கு பணம், புகழை எனக்குக் கொடுத்தவர்கள் தமிழர்கள் என்று மேடையிலேயே அறிவிக்கும் ரஜினி, இன்றைய நாள்வரை அந்தத் தமிழர்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளில் ஏதாவது ஒன்றிற்காவது தமிழர்களுக்கு ஆதரவாக களம் இறங்கிப் போராடியிருக்கிறாரா? அல்லது ஆதரவுக் குரல்தான் எழுப்பியிருக்கிறாரா?

விவசாயிகள் தற்கொலை, காவிரிப் பிரச்னை, ஈழப் பிரச்னை, கந்துவட்டி, நீட் தேர்வு, ஒகி புயல் பாதிப்பு.... என்று தமிழக மக்கள் பிரச்னைகள் எதிலுமே தலையிடாமல், இதுநாள்வரை சொகுசு வாழ்க்கை நடத்திவந்த ரஜினிகாந்த், நேரடியாக முதல்வர் நாற்காலியில் போய் அமர்ந்துகொள்ளத் திட்டம் போடுகிறார். அவர் நினைப்பதுபோல், தமிழர்கள் ஒன்றும் இளிச்சவாயர்கள் அல்ல....

ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்குப் பின்புலமாக இருப்பது பி.ஜே.பி கட்சிதான். தலைகீழாக நின்று பார்த்தும், தமிழகத்தில் பி.ஜே.பி-யால் டெபாஸிட்கூட வாங்கமுடியவில்லை. எனவே, ரஜினியை மறுமுகமாக வைத்துக்கொண்டு, தமிழகத்தில் 'ஆன்மிக அரசியல்' செய்ய நினைக்கிறார்கள். எந்தப் பிரச்னைகளுக்கும் கருத்துசொல்லக்கூடப் பயந்து இமயமலைக்கு ஓடிவிடும் ரஜினிகாந்த்தான், தமிழக மக்களைக் காக்கப்போகிறாரா? 

எல்லா சோதனையையும் செய்துபார்த்து சோர்ந்துவிட்ட பி.ஜே.பி. கடைசி முயற்சியாக ரஜினியை பலிகடாவாக்கத் முயற்சி செய்கிறார்கள். அரசியல் களத்தில் நிச்சயம் ரஜினிகாந்த் பலிகடா ஆவார்!'' என்றார் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்