வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (31/12/2017)

கடைசி தொடர்பு:14:20 (31/12/2017)

'போயஸ் தோட்டம்-2 எங்களுக்குத் தேவையில்லை!' - சுப.உதயகுமாரன் காட்டம்

ரஜினிகாந்த அரசியலுக்கு வருவதாக அறிவித்து இருப்பது பற்றிப் பேசிய சுப.உதயகுமாரன், தமிழக மக்கள் பல்வேறு பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் நிலையில் போயஸ் தோட்டம்-2 எங்களுக்குத் தேவையில்லை எனக் காட்டமாகத் தெரிவித்தார்.

சுப.உதயகுமாரன்

பச்சைத் தமிழகம் கட்சியின் தலைவரும் அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான சுப.உதயகுமாரன் நெல்லையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ’’கூடங்குளத்தின் முதல் இரு அணு உலைகளிலும் ஊழல்களும் ஊதாரித்தனங்களும் நடந்து இருப்பதாக மத்தியத் தணிக்கைக் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாங்கள் ஏற்கெனவே இது தொடர்பாக இரு புத்தகங்கள் எழுதி இருந்த நிலையில், சி.ஏ.ஜி அறிக்கையும் அதனையே உறுதிப்படுத்தி இருக்கிறது. 

இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் யார் மீது நடவடிக்கை எடுக்கப்போகின்றன? சி.ஏ.ஜி அறிக்கையை அரசுகள் ஏற்றுக் கொண்டால், அப்பாவி மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். அவர்களின் பாஸ்போர்ட் முடக்கத்தை கைவிட வேண்டும். பாஸ்போட்டுகளை உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். இந்த ஊழலில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளையும் பிடித்து விசாரிக்க வேண்டும். இந்த அறிக்கை தொடர்பாக மக்களிடம் நாங்கள் பரப்புரை செய்வோம்.

குமரி மாவட்டத்தில் 19,844 கோடி மதிப்பீட்டில் சரக்குப் பெட்டக துறைமுகத் திட்டத்தை கீழமணக்குடி, கோவளம் இடையே அமைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 500 கோடி ரூபாய்க்கு அதிகான திட்டத்தை நிறைவேற்றும்போது, அப்பகுதி மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த வேண்டும், திட்டம் குறித்த தகவல்களை அளிக்க வேண்டும் என்பதை நிறைவேற்றாமல் சாதி மத உணர்வுகளைத் தூண்டிவிட்டு திட்டத்தை செயல்படுத்த முற்படுவதைக் கண்டிக்கிறோம். 

ரஜினிக்கு எதிர்ப்பு

வளர்சித் திட்டம் என்ற பெயரில் தமிழக மக்கள் மீது அழிவுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரக்கூடிய நிலையில், மாற்று அரசியல் குறித்து மக்கள் முனைப்போடு சிந்தித்து வருகிறார்கள். அதனை மடைமாற்றும் முயற்சியாக மத்திய அரசு, எந்த அரசியல் கொள்கையும், மக்கள் சிந்தனையும் இல்லாத நடிகர்களைக் களம் இறக்குகின்றன. இதனைக் கண்டிக்கிறோம். 

போயஸ் தோட்டம் பிரமாண்டம்-2 என்ற படம் எங்களுக்குத் தேவையில்லை. ஏற்கெனவே, போயஸ்தோட்டம் முதல் படத்தின் காரணமாக நாங்கள் சிக்குண்டு துன்பத்தைச் சந்தித்த நிலையில், மீண்டும் அதே போன்ற நிலைமை ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை. தமிழக மக்களுக்கு வேற்று மாநிலத்தைச் சேர்ந்த அரசியல் தலைமை தேவையில்லை. அதனால், எந்தக் கொள்கையும் கோட்பாடும் இல்லாமல், தமிழக மக்களைப் பற்றி எதுவுமே தெரியாமல் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்து இருப்பதை வன்மையாக எதிர்க்கிறோம்.’ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம்’ எனச் சம்பிரதாயமாக சொல்பவர்களும் கூட தமிழக மக்களுக்குத் துரோகம் செய்கிறார்கள்.

கூடங்குளம் அணு உலையைச் சுற்றிலும் அளவுக்கு அதிகமான மக்கள் தொகை இருப்பதால், 3-வது மற்றும் 4-வது அணு உலைகளை கட்ட முடியாது என்பதால் தகவல் கொடுக்க மறுக்கிறார்கள். ஒரு மாதத்தில், தகவல் கொடுக்காவிட்டால், நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்துவோம்’’ என்றார், சுப.உதயகுமாரன். பேட்டியின்போது, அகில இந்திய மக்கள் மேடை அமைப்பின் தேசியக்குழு உறுப்பினர் ரமேஷ் உடன் இருந்தார்.