நெல்லை மாவட்டம் குறித்த தகவல்களை அறிய ‘நம்ம நெல்லை’ செயலி அறிமுகம்! | A new App of Namma Nellai has been introduced from new year onwards

வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (01/01/2018)

கடைசி தொடர்பு:03:00 (01/01/2018)

நெல்லை மாவட்டம் குறித்த தகவல்களை அறிய ‘நம்ம நெல்லை’ செயலி அறிமுகம்!

நெல்லை மாவட்டத்தின் அனைத்துத் தகவல்களையும் அறிந்து கொள்ளும் வகையில், ‘நம்ம நெல்லை’ என்கிற செயலியை மாவட்ட நிர்வாகம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. நெல்லையின் சுற்றுலா மையங்கள், ஆன்மீகத் தலங்கள், அதிகாரிகளின் தொடர்பு எண்கள் உள்ளிட்ட முக்கியத் தகவல்களை இதன் மூலம் அறிந்து கொள்ளும் வசதி ஏற்பட்டு உள்ளது.

நம்ம நெல்லை செயலி

நெல்லையில் பொதுமக்களின் நலனுக்காக ’அன்புச் சுவர்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. பொதுமக்களின் குறைகளை மாவட்ட நிர்வாகத்திடம் தெரியப்படுத்தும் வகையில் ’கால் யுவர் கலெக்டர்’ என்கிற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கெனக் கொடுக்கப்பட்ட மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு தங்கள் பகுதியின் பிரச்னைகள், தனிப்பட்ட சிக்கல்கள் குறித்து தெரியப்படுத்தினால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நரிக்குறவர் இனக் குழந்தைகள் மற்றும் குழந்தைத் தொழிலாளர்களின் கல்வி வசதிக்கான சிறப்புத் திட்டத்தையும் நெல்லை மாவட்ட நிர்வாகம் அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. மாவட்டத்தில் நிலவும் கந்துவட்டிக் கொடுமைக்கு முடிவு கட்டும் வகையில், தொலைபேசி வாயிலாகவே புகார் அளிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது., தொலைபேசி வாயிலாக அளிக்கப்படும் புகார்கள் தொடர்பாக வருவாய்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 

இந்த நிலையில், நெல்லை மாவட்டம் மற்றும் வெளியிடங்களில் இருந்து நெல்லைக்கு வரக்கூடிய மக்களுக்கு உதவும் வகையில், ’நம்ம நெல்லை’ ( Namma Nellai) என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த நவம்பர் 12-ம் தேதி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்ற போது, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதனை முறைப்படி தொடங்கி வைத்த போதிலும், இந்தச் செயலி புத்தாண்டு முதல் செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது. 

புதிய செயலி

இந்த செயலியில் மாவட்டத்தின் ஒட்டு மொத்த தகவல்களும் குவிந்து கிடப்பது தான் இதன் சிறப்பு அம்சம். மாவட்டத்தின் அனைத்து அதிகாரிகளின் தொடர்பு எண்கள், முக்கியமான சுற்றுலாத் தலங்கள், அந்த இடங்களின் சிறப்பு அம்சங்கள் குறித்த தகவல்கள், மாவட்டத்தின் முக்கியமான் ஆன்மீக திருத்தலங்கள் அதன் முகவரிகள் உள்ளிட்ட தகவல்கள் அனைத்தும் இடம்பெற்று இருக்கின்றன. 

நெல்லை மாவட்ட ஆட்சியர் அறிவிக்கும் திட்டங்கள், செய்திக் குறிப்புகள், மாவட்டம் குறித்து இதழ்களில் வெளியாதம் செய்திகளின் தொகுப்புக்கள், ஆட்சியரின் அறிவிப்புக்கள், கல்வி நிறுவனங்கள், கல்வி அறிவிப்புக்கள் என அனைத்து முக்கிய அம்சங்களும் இந்த செயலியில் இடம் பெற்று இருப்பதால் இது பொதுமக்களுக்கு மட்டும் அல்லாமல், சுற்றுலாப் பயணிகள், ஆன்மீகப் பயணமாக வரக்கூடியவர்கள் என அனைவருக்கும் பெரிதும் பயன் உள்ளதாக இருக்கும் என்பதால் இந்த ‘நம்ம நெல்லை’ செயலி முக்கியத்தும் வாய்ந்ததாக மாறி இருக்கிறது. புத்தாண்டுப் பரிசாக இந்த செயலியை மாவட்ட நிர்வாகம் அறிமுகப்படுத்தி இருப்பதை சமூக ஆர்வலர்கள் வர்வேற்று உள்ளனர்.