’இது எவ்வளவு பெரிய அபாயம்?’ - பெட்ரோல் ரசாயன முதலீட்டு மண்டலம்குறித்து வைகோ எச்சரிக்கை | vaiko statement regarding Petrochemical Investment Zone

வெளியிடப்பட்ட நேரம்: 14:35 (01/01/2018)

கடைசி தொடர்பு:14:35 (01/01/2018)

’இது எவ்வளவு பெரிய அபாயம்?’ - பெட்ரோல் ரசாயன முதலீட்டு மண்டலம்குறித்து வைகோ எச்சரிக்கை

சென்னை தாயகத்தில், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “தமிழகத்தின் நலனைக் காக்க மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டன. அதனால்தான், உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்றபோது தமிழ்நாட்டு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், ‘நீங்கள் மேகதாதுவில் அணை கட்டிக்கொள்ளலாம். ஆனால், எங்களுக்கு கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள்’ என்று சொல்கிறார். இதைவிட, பெரிய பச்சைத்துரோகம் இருக்க முடியாது. நாகை, கடலூர், காவிரி டெல்டா உள்ளிட்ட பகுதிகளை வேளாண்மைப் பாதுகாப்பு மண்டலமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று நாம் தொடர்ந்து போராடிவருகிறோம். இதற்காக நம்மாழ்வாரின் மீத்தேன் எதிர்ப்புப் போராட்டத்தை நாங்கள் கையில் எடுத்து தொடர்ந்து போராடிவருகிறோம். ஆனால், மத்திய அரசு இங்கே பெட்ரோலிய ரசாயன முதலீட்டு மண்டலத்தை 318 சதுர கி.மீ (57500 ஏக்கர்) அமைப்பதற்கு முனைப்பாகச் செயல்பட்டுவருகிறது.

வைகோ

அந்தப் பணியை ஜூலை 19-ம் தேதி தொடங்குவதற்கு தமிழக அரசு அறிவிப்பு செய்திருக்கிறது. இது எவ்வளவு பெரிய அபாயம்? காவிரி வேளாண்மைப் பாதுகாப்பு மண்டலமாக இப்பகுதியை அமைக்க வேண்டும் என்று கேட்கிறோம். ஆனால், அவர்கள் பெட்ரோல் ரசாயன முதலீட்டு மண்டலமாக அறிவிக்கை கொடுக்கிறார்கள். இதனால், ஹைட்ரோ கார்பன் திட்டத்தின்மூலம் இந்திய அரசுக்கு பெருமளவு தொகை கிடைக்கும். தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் நான் வாதாடும்போது, ஓ.என்.ஜி.சி தரப்பில் வாதாடியவர்கள், ‘இந்தியப் பொருளாதாரம் உச்சத்தில்போவதை இவர்கள் தடுக்கிறார்கள்’ எனச் சொன்னார்கள். நான் அதை ஒப்புக்கொண்டேன். ஆனால், நாம் அழிந்துவிடுவோம்.

வைகோ

இந்த பாறைப் படிம எரிவாயு என்பது முழுக்க முழுக்க நிலத்தடி நீரை பாழாக்கிவிடும். ஏறத்தாழ 634 வேதியியல் பொருள்களைச் சேர்ப்பதால், அதிலிருந்து வெளியேற்றப்படும் நச்சுநீர், நிலத்தின் தன்மையைப் பாழாக்கிவிடும். இதை எதிர்த்து கதிராமங்களத்திலும் நெடுவாசலிலும் போராட்டம் நடக்கிறது. போராட்டம் நடைபெற்றபோது அங்கே வந்த மத்திய அமைச்சர்கள், ‘நாங்கள் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற மாட்டோம்’ என்று சொன்னார்கள். ஆனால், கடந்த மார்ச் மாதத்திலேயே மத்திய அரசு ஜெம் லெபாரட்டரி கம்பெனிக்கு ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி கொடுத்துவிட்டார்கள். தற்போது, பசுமைத் தீர்ப்பாயங்களை மூட வேண்டும் என மத்திய அரசு ஒரு யோசனையில் இருக்கிறது. இது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது" என்கிறார் வைகோ.

மேலும், 'ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்புகுறித்து எந்த கருத்தும் கூற விரும்பவில்லை' என்று வைகோ கூறினார். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க