``நாடாளுமன்றத் தேர்தல்குறித்து ரஜினி வாய்திறக்காதது ஏன்?'' - ரகசியம் உடைக்கும் சுப.வீ | Why does not Rajini speak about Parliament election, asks SUba Veerapandiyan

வெளியிடப்பட்ட நேரம்: 14:41 (01/01/2018)

கடைசி தொடர்பு:19:25 (02/01/2018)

``நாடாளுமன்றத் தேர்தல்குறித்து ரஜினி வாய்திறக்காதது ஏன்?'' - ரகசியம் உடைக்கும் சுப.வீ

ரஜினிகாந்த்

''வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் நம் படை இருக்கும்'' என்ற ரஜினிகாந்தின் அறிவிப்பு, ஒட்டுமொத்த இந்திய அரசியலையே அதிரவைத்துக்கொண்டிருக்கிறது. ரஜினியின் அரசியல் பிரவேசம்குறித்த ஆதரவு - எதிர்ப்பு கருத்துகள் பரவலாக வெளிப்படத் தொடங்கியிருக்கின்றன. இந்நிலையில், 'திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை'யின் தலைவர் சுப.வீரபாண்டியனிடம் ரஜினியின் அரசியல் பிரவேசம்குறித்த நமது கேள்விகளை முன்வைத்தோம்...

''ரஜினியின் அரசியல் அறிவிப்புகுறித்து உங்களது கருத்து என்ன?''

''ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு எனது வாழ்த்துகள்; ஆனால், வரவேற்பு அல்ல. ஏனெனில், வரவேற்கக்கூடிய அளவில் எந்த ஒரு புதிய செய்தியையும்  அவர் தன் உரையில் குறிப்பிடவில்லை. ரஜினியின் அரசியல் வருகை என்பது, தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டியதாகவே இருக்கிறது. அப்போதுதான் தனது கட்சியைத் தொடங்கவிருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.

பகவத் கீதையைச் சொல்லி, அவர் தன் உரையைத் தொடங்கியிருப்பதும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்தோ அல்லது மத்திய அரசு குறித்தோ பேசாமல் இருப்பதும், ஆன்மிக அரசியல் செய்யவிருப்பதாக அவர் சொல்வதும்... இயல்பான ஐயம் அல்லது அச்சத்தை ஏற்படுத்துகிறது.  இதன் பின்னணியில், மறைமுக நிழலாக பி.ஜே.பி இருக்கிறதோ என்ற எண்ணத்தை இது உருவாக்குகிறது.''

''நாடாளுமன்றத் தேர்தல்குறித்து அந்தச் சமயத்தில் முடிவை அறிவிப்பேன் என்றிருக்கிறாரே..?''

''எப்போது வரும் என்பது தெரியாத சூழலில் இருக்கும் சட்டமன்றத் தேர்தல்குறித்து தனது நிலைப்பாட்டை மிகத் தெளிவாக அறிவித்திருக்கும் ரஜினி, நாடாளுமன்றத் தேர்தல்குறித்து மட்டும் அப்போதைய சூழலில் அறிவிப்பேன் என்றிருக்கிறார். எனவே, ஒவ்வொன்றிலும் அவரது நிலைப்பாடு வெவ்வேறாக இருக்கின்றன என்பதற்காகத்தான் நான் அப்படிச் சொன்னேன்.''

''ரஜினியின் இப்போதைய அறிவிப்பும்கூட, அடுத்தடுத்து வெளியாகப்போகிற அவரது படங்களை ஓடவைப்பதற்கான முயற்சிதான் என்கிறார்களே..?''

''தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021-ல் வர வேண்டியது. ஆனால், எந்த நேரத்திலும் வரக்கூடிய தேர்தல். காரணம், ஏற்கெனவே 18 எம்.எல்.ஏ-க்கள் விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும், 12 எம்.எல்.ஏ-க்கள் விலக்கி வைக்கப்படவேண்டும் என்று வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. இவைகளில் நீதிமன்றம் என்ன சொல்லும்? இந்த அரசாங்கம் பெரும்பான்மையைத் தக்கவைத்துக்கொள்ளுமா? என்பனபோன்ற பல கேள்விகள் இருக்கின்றன. எனவே, உறுதிசெய்யப்பட முடியாத நிலையில் இருக்கும் சட்டமன்றத் தேர்தல்குறித்து தெளிவாகப் பேசும் ரஜினிகாந்த், 2019-ல் திட்டவட்டமாக வரும் என்ற நிலையில் இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்குறித்து உறுதியாக ஏதும் பேசாமல் இருப்பது ஏன்... என்பதுதான் என்னுடைய கேள்வி.'' சுபவீ

''ஆன்மிக அரசியல் செய்வேன் என்கிறாரே..?''

''நேர்மையான அரசியலைத்தான் 'ஆன்மிக அரசியல்' என்று குறிப்பிடுவதாக அவர் விளக்கம் சொல்லியிருக்கிறார். அதுதான் உண்மையான செய்தி என்றால், சொல்லுகிறபோதே 'நேர்மையான அரசியல்' என்று சொல்லியிருக்கலாம். 'ஆன்மிக அரசியல்' என்கிற சொல்லுக்கு வேறு பொருளே கிடையாது என்று கருதுபவராக ரஜினி இருக்கமுடியாது. எனவே, முதலில் அந்தச் சொல்லை சொல்லிப் பார்ப்பதுவும், அதற்கு எதிர்ப்பு என்கிற நிலை வரும்போது வேறொரு விளக்கம் தருவதுமாக அவரது நிலை இருக்கிறது. 

ஆன்மிகம் வேறு, மதம் வேறு என்பதை எல்லோருமே அறிவோம். ஆனால், ஆன்மிகத்துக்கும் மதத்துக்கும் தொடர்பே இல்லை என்று யாரும் சொல்லிவிடமுடியாது. 'ஆன்மா' என்ற சொல்லிலிருந்துதான் 'ஆன்மிகம்' வருகிறது. உபநிடதங்கள்தான் இந்த 'ஆன்மா'வைப் பற்றி மிகக்கூடுதலாகப் பேசுகின்றன; அதுவும் பிற்கால உபநிடதங்கள். அதற்குப் பின்னால் வருகிற 'கீதை'யிலும் ஆன்மாவைப் பற்றிய பல செய்திகள் இருக்கின்றன. அவரது உரையே கீதையிலிருந்துதான் தொடங்குகிறது. எனவே, ரஜினியின் அறிவிப்பை கேட்பவர்களுக்கு, 'ஒரு செய்தி மறைக்கப்படுகிறதோ' என்ற எண்ணம்  ஏற்படுகிறது"

அரசியலுக்குள் வந்துவிட்டேன் என்று சொல்லிவிட்டாலே, நாட்டு நடப்புகளின்மீது அவரது தலையீடு இருக்க வேண்டுமா இல்லையா? நல்லவைகளை வரவேற்பதுவும், அல்லவைகளை எதிர்ப்பதுமாக களத்தில் இறங்கிப் போராடத்தானே வேண்டும். ஆனால், 'போராட்டம் செய்வதற்கென்று வேறு ஆட்கள் இருக்கிறார்கள். நான் தேர்தலின்போதுதான் வருவேன். அதற்குள் என் இரண்டு படங்களையும் முடித்துவிடுவேன்' என்று ரஜினி சொல்வதையும் மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்றால், அது அவர்கள் விருப்பம்.''

 


டிரெண்டிங் @ விகடன்