வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (01/01/2018)

கடைசி தொடர்பு:15:53 (01/01/2018)

குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடிய பன்னீர்செல்வம்!

பொதுவாக, விசேஷ நாள்களில் தனது சொந்த ஊருக்கு வந்துவிடுவார் துணைமுதல்வர் பன்னீர்செல்வம். இன்றைய புத்தாண்டுக் கொண்டாட்டத்தைத் தனது சொந்த ஊரான பெரியகுளம் மக்களோடு கொண்டாடிவருகிறார் பன்னீர்செல்வம். முன்னதாக, காலையில் தனது வீட்டுக்கு வந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, ஆதரவற்ற குழந்தைகளைத் தனது வீட்டுக்கு வரவழைத்த பன்னீர், அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். பின்னர், பெரியகுளம் சுப்பிரமணியர் கோயிலுக்குச் சென்ற பன்னீர்செல்வம், சுவாமி தரிசனத்தை முடித்துவிட்டு கோயிலுக்கு வந்திருந்த பொதுமக்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அங்கேயே சிறிது நேரம் அமர்ந்து குழந்தைகளோடு விளையாடிக்கொண்டிருந்தார்.

அப்போது, கைக்குழந்தையை பன்னீரிடம் கொடுத்து, குழந்தைக்குப் பெயர் வைக்குமாறு கேட்டுக்கொண்டார். `ராமச்சந்திரன்` என்று அக்குழந்தைக்கு பெயர் வைத்தார். சுற்றியுள்ளவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அதைப் பார்த்த பலர், தங்கள் குழந்தையையும் பன்னீரிடம் கொடுத்தனர். அவரும் புன்னகையோடு குழந்தைகளை வாங்கிக்கொண்டார். குழந்தைகளோடு சிறிது நேரம் விளையாடினார். பின்னர், கோயில் நிர்வாகிகள் சிலரிடம் பேசிவிட்டுப் புறப்பட்டார். மாலை, பெரியகுளம் அருகே இருக்கும் கைலாசநாதர் கோயிலுக்குச் செல்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.