வெளியிடப்பட்ட நேரம்: 17:52 (01/01/2018)

கடைசி தொடர்பு:07:41 (02/01/2018)

`அரசியல் மாற்றத்தை விரும்புபவர்களே...' - புதிய இணையதளம் தொடங்கினார் ரஜினி!

`சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம்' என்று அறிவித்து, தன் அரசியல் பிரவேசத்தை நேற்று ஆரம்பித்தார் நடிகர் ரஜினிகாந்த். அவரின் இந்த அறிவிப்புகுறித்து பரவலாக பேசப்பட்டுவரும்நிலையில், இன்று ஒரு வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில், அரசியல் மாற்றத்தை விரும்புபவர்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளார்.

ரஜினிகாந்த்

அவரது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், `வணக்கம். அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.  என்னுடைய அரசியல் பிரவேசத்தை வரவேற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஒரு முக்கிய அறவிப்பு. எனது பதிவுசெய்யப்பட்ட ரசிகர் மன்றத்தின் உறுப்பினர்களும், பதிவு செய்யப்படாத மன்றத்தின் உறுப்பினர்களும் மற்றும் தமிழ்நாட்டில் ஒரு நல்ல அரசியல் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்று நினைக்கும் மக்களை ஒருங்கிணைத்து ஒரு குடையின் கீழ் கொண்டுவரும்பொருட்டு rajinimandram.org  என்ற இணையதளத்தை உருவாக்கியிருக்கிறேன். அதில், உங்கள் பெயர் மற்றும் வாக்காளர் அடையாள எண்ணைப் பதிவுசெய்து, உறுப்பினர் ஆகுங்கள். தமிழ்நாட்டில் ஒரு நல்ல அரசியல் மாற்றத்தைக் கொண்டுவருவோம். வாழ்க தமிழக மக்கள். வளர்க தமிழ்நாடு' என்று தெரிவித்துள்ளார்.