வெளியிடப்பட்ட நேரம்: 19:15 (01/01/2018)

கடைசி தொடர்பு:08:10 (02/01/2018)

மன்னார்குடியில் புத்தாண்டு கொண்டாட்டம்... குடும்ப அஸ்திரத்தை தனதாக்குவாரா தினகரன்?! #VikatanExclusive

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்றதில் இருந்து தமிழக அரசியலில் முக்கிய பேசு பொருளாக மாறியுள்ளார் டி.டி.வி.தினகரன். வெற்றியின் மூலம் கட்சி தன் வசம்தான் இருக்கிறது என்பதுபோல ஒரு பிம்பத்தைக் கட்டமைத்த தினகரன், தற்போது குடும்பமும் தன் வசம்தான் உள்ளது என்பதை உரக்கச் சொல்ல மன்னார்குடியில் புத்தாண்டை கொண்டாடியுள்ளார். 

ஒரே மாலையில் தினகரன் மற்றும் திவாகரன்

பொதுவாக புத்தாண்டை ஆதரவாளர்களுடன் அடையாறில் இருக்கும் தனது வீட்டில் கொண்டாடும் வழக்கமுடையவர் தினகரன். அன்று ஆதரவாளர்களுக்கு விருந்து கொடுப்பது, குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது என்று இருப்பார். ஆனால், ஆர்.கே.நகர் வெற்றியால் அரசியலில் அடுத்தக்கட்ட நகர்வுக்கு அவர் தயாராகி உள்ளார். குடும்ப உறுப்பினர்களில் திவாகரன், ஜெயானந்த் ஆகியோர் தினகரனுக்கு ஆதரவாக இருக்கும் சூழலில், விவேக் ஜெயராமன், கிருஷ்ணப்பிரியா தன்னிச்சையாக செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக, ஆர்.கே.நகர் தேர்தலுக்கு முந்தைய நாளன்று தினகரன் சொல்லியதற்கிணங்க வெற்றிவேல், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவை வெளியிட்டதாகத் தகவல் வந்தது. இதற்கு, கிருஷ்ணப்பிரியா நேரடியாக பேஸ்புக்கில் எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டார். ஆனால் ஜெயானந்த், `வீடியோ வெளியிட்டதில் எந்தத் தவறும் இல்லை. இதனால், சசிகலா மீதுள்ள கலங்கம் துடைக்கப்பட்டுள்ளது' என்று கூறி தினகரனுக்கு ஆதரவுக்கரம் நீட்டினார். அதேபோல முன்னர் ஜெயா டிவியில் துரைமுருகன் பேட்டியைப் போட வேண்டாம் என்று விவேக்கிடம் தினகரன் கேட்க, `டி.ஆர்.பி ரேட்டிங்கிற்கு இந்தப் பேட்டி உதவும். அது மட்டுமில்லாமல், அவர் பேட்டியில் நமக்கு ஆதரவாக பல கருத்துகளை தெரிவித்துள்ளார்' என்று கூறி, தினகரனின் கோரிக்கை வெளிப்படையாகவே நிராகரித்தார் விவேக். இதனால், கோபத்தின் உச்சத்திலேயே இருந்தார் தினகரன். ஆனால், இடைத்தேர்தல் வெற்றி கட்சிக்குள்ளும் குடும்பத்துக்குள்ளும் தனது செல்வாக்கை உயர்த்தி இருக்கிறது என்று நம்புகிறார் தினகரன்.

கட்சி நிர்வாகிகளுடன் ஜெயானந்த்

இப்படி குடும்ப உறுப்பினர்களில் தினகரனுக்கு ஆதரவானவர்கள், எதிரானவர்கள் என்று இரு தரப்பு இருக்கும் சூழல் தனது அரசியல் முன்னேற்றத்துக்கு தடைக்கல்லாக இருக்கும் என்பதை கணித்திருக்கிறார் தினகரன். இதனால் புத்தாண்டை மன்னார்குடியில் கொண்டாடி, குடும்பத்தை ஒரு குடையின் கீழ் கொண்டுவர எத்தனித்துள்ளார். இதையடுத்து, இன்று திவாகரன் மற்றும் ஆதரவாளர்களுடன் மன்னார்குடியில் புத்தாண்டை கொண்டாடியுள்ளார். அப்போது, தினகரன் - திவாகரன் ஆகிய இருவருக்கும் ஆள் உயர மாலையை ஆதரவாளர்கள் அணிவிக்க, அதை இருவரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுள்ளனர். இதன் மூலம், குடும்பம் முழுவதையும் தனக்கு ஆதரவாக கொண்டுவரும் முதல் முயற்சியில் வெற்றி கண்டுள்ளார் தினகரன். இதே நேரத்தில், திவாகரன் மகன் ஜெயானந்த், சென்னை,  ஈக்காட்டுத்தாங்கலில் இருக்கும் தனது வீட்டில், ஆதரவாளர்களைச் சந்தித்து அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு குறித்து விரிவாக ஆலோசித்துள்ளார்.