புதுவிதமான புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னெடுத்த ’அடடே’ இளைஞர்கள்! | Youngsters celebrated New Year in a different way

வெளியிடப்பட்ட நேரம்: 09:36 (02/01/2018)

கடைசி தொடர்பு:09:43 (02/01/2018)

புதுவிதமான புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னெடுத்த ’அடடே’ இளைஞர்கள்!


 

 

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பட்டாசு வெடிப்பதால் குப்பைகள் குவியும் என்றுதான் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் குப்பைகளை அகற்றுவதையே புத்தாண்டு கொண்டாட்டமாக மாற்றியுள்ளனர்.  'எங்கள் பகுதியில் இந்த புத்தாண்டில் இருந்து 100 சதவிகிதம் குப்பைகளை ஒழிப்போம்' என்று சபதம் ஏற்று, அதற்கான முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறார்கள் அந்த இளைஞர்கள். 

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் இருக்கிறது லாலாபேட்டை. இந்தப் பகுதியைச் சேர்ந்த தினேஷ், பார்த்திபன், வினோத், கார்த்திக், சுந்தரேஷன் ஆகியோர் அங்குள்ள இருபதுக்கும் மேற்பட்ட இளைஞர்களை ஒருங்கிணைத்து கிங் பவுண்டேஷன் என்ற அமைப்பைத் தொடக்கி இருக்கிறார்கள். அந்த அமைப்பின் மூலம் அந்தப் பகுதி மக்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்துவருகிறார்கள். இந்தச் சூழலில், புத்தாண்டை ஒட்டி, லாலாபேட்டைப் பகுதியை 100 சதவிகிதம் தூய்மையாக மாற்ற சபதம் எடுத்தனர். அதற்காக, அந்த பகுதியில் உள்ள எல்லா வீடுகளுக்கும் குப்பைகளைச் சேகரிக்கும் கூடைகளை வழங்கினர்.

 இதுசம்பந்தமாக, நம்மிடம் பேசிய கிங் பவுண்டேஷன் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தினேஷ், "இந்த லாலாபேட்டை ஊராட்சி பெரிய ஊராட்சி. இங்கு டெங்கு உள்ளிட்ட பாதிப்புகள் இருந்துச்சு. அதற்கு காரணம், குப்பைகள் ஆங்காங்கே முட்டுமுட்டாக கிடந்ததுதான். ஊராட்சி சார்பில் ஆங்காங்கே குப்பை வண்டிகள் வைக்கப்பட்டிருந்தாலும், மக்கள் அதில் குப்பைகளைப் போடவில்லை. காரணம், மக்களிடம் சரியான விழிப்பு உணர்வு இல்லை. அதனால், எல்லா வீட்டுக்கும் குப்பை சேகரிக்கும் கூடைகள் வழங்கினோம். அதோடு, 'பஞ்சாயத்து குப்பை வண்டி வரும்போது, உங்க வீடுகளில் சேரும் குப்பைகளை இந்த கூடைகளில் அள்ளி, வண்டியில் போடுங்கள். அப்படி குப்பைகள் இல்லாத ஊராக மாறினால்தான், இங்கே கொசுக்கள் உற்பத்தி ஆகாது. டெங்கு போன்ற பிரச்னைகள் வராது'ன்னு வீடுவீடாக விழிப்பு உணர்வும் செய்தோம். மக்கள் ஆர்வமாக கேட்டுக் கொண்டனர். 100 சதவிகிதம் குப்பைகள் அற்ற சுகாதாரமான ஊராட்சியாக லாலாபேட்டையை மாற்றியே தீருவோம்" என்று சபதத்தோடு முடித்தார்.