வெளியிடப்பட்ட நேரம்: 10:25 (02/01/2018)

கடைசி தொடர்பு:10:38 (02/01/2018)

`எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக அகற்றப்பட்ட வேகத்தடைகள்! - குற்றம்சாட்டும் மக்கள்

கரூர் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டையொட்டி பல்வேறு இடங்களில் சாலையில் இருந்த வேகத்தடைகள்(Speed Breakers) அகற்றப்பட்டன. ஆனால் மூன்று மாதங்கள் ஆகியும் இன்னும் வேகத்தடைகள் மீண்டும் அமைக்கப்படவில்லை என்று கரூர் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.          

’கரூர் மாவட்டத்துல நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு முதல்வர் வர்றான்னு, ஏழெட்டு ஊர்கள்ல இருந்த ஸ்பீடுபிரேக்கர்களை எடுத்தாங்க. ஆனா, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா முடிஞ்சு மூணு மாசம் ஆவப்போவுது. மறுபடியும் அந்த இடங்கள்ல ஸ்பீடு பிரேக்கர்களை அமைக்கலை. கரூர் மாவட்டத்தில் பல நெடுஞ்சாலைகள் உள்ளன. தமிழகத்தின் மையப்பகுதி என்பதால், அதிக வாகன விபத்துகள் நடந்து ஏழெட்டு உயிர்கள் போயிட்டு. கோவையில எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடத்துறேன்னு ஊர்பட்ட கட்டவுட்களை வச்சு, ரகு-ங்கிற அப்பாவியைக் கொன்னீங்க. கரூர்ல ஸ்பீடுபீரேக்கர்களை எடுத்து,கொள்ளை உயிர்கள விபத்து வடிவுல கொன்னுக்கிட்டு இருக்கீங்க. இன்னும் எத்தனை உயிர்கள் போனா, முதல்வர் வருகையால் எடுத்த அந்த ஸ்பீடுபிரேக்கர்களை மறுபடியும் அமைப்பீங்க’ என்று கதறியபடி கேட்கிறார்கள் கரூர் மக்கள். 


 

கரூர் - திருச்சி சாலையில் கரூரிலிருந்து வீரராக்கியம் பைபாஸில் சேரும்வரை 20 கிலோமீட்டர் தூரத்தில் இருந்த ஏழெட்டு ஊர்களில் இருந்த வேகத்தடைகளை அமைக்காததால்தான் ஏகப்பட்ட விபத்துகள் ஏற்படுவதாக மக்கள் புலம்புகிறார்கள். இந்த 20 கிலோமீட்டரில் ஏழெட்டு இடங்களில், 'Accident Zone' ஆக கருதப்பட்டு, அமைக்கப்பட்டிருந்த ஸ்பீடுபிரேக்கர்களைக் கடந்த அக்டோபர் மாதம் 4-ம் தேதிக்கு முன்பு அப்புறப்படுத்தினார்கள். காரணம், அன்றுதான் கரூர் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் நடத்தப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி,திருச்சி விமான நிலையத்திலிருந்து காரில் வருவதற்கு ஏதுவாக, இந்த ஸ்பீடுபிரேக்கர்கள் அப்புறப்படுத்தப்பட்டன. ஆனால், விழா முடிந்து மூன்று மாதங்கள் கடந்தும் அந்த ஸ்பீடுபிரேக்கர்கள் அமைக்கப்படாததால், 20-க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்து, உயிர் பலியும் ஏற்பட்டுள்ளதாக மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.