'அவசரத்துக்குக்கூட தண்ணீர் கொடுப்பதில்லை'- புத்தகத் திருவிழாவில் பொதுமக்கள் வேதனை | Water scarcity in chengalpattu book fare

வெளியிடப்பட்ட நேரம்: 14:15 (02/01/2018)

கடைசி தொடர்பு:14:15 (02/01/2018)

'அவசரத்துக்குக்கூட தண்ணீர் கொடுப்பதில்லை'- புத்தகத் திருவிழாவில் பொதுமக்கள் வேதனை

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் செங்கை பாரதியார் மன்றம் இணைந்து, செங்கல்பட்டில் செங்கைப் புத்தகத் திருவிழாவை நடத்தி வருகிறார்கள். பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் ஒரே இடத்தில் கிடைப்பதால், சுற்றுவட்டார மக்கள் புத்தகங்களை வாங்க தினமும் ஆர்வமாக வருகிறார்கள்.

செங்கைப் புத்தகத் திருவிழா, பாரதி கிருஷ்ணகுமார்

ஆனால், புத்தகம் வாங்க வரும் பொதுமக்களுக்கு போதிய வசதிகளைச் செய்துகொடுக்கவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள். ”நுழைவு வாயிலில் உள்ள சிற்றுண்டிக் கடைகளில் பானிபூரி போன்ற உடலுக்கு ஒவ்வாத பொருள்களை மட்டுமே விற்கிறார்கள். தொண்டையில் அடைத்துக்கொண்டு விக்கல் ஏற்பட்டால், அவசரத்துக்குக்கூட தண்ணீர் கொடுப்பதில்லை. இங்கே, குடிக்க தண்ணீர் கொடுக்க மாட்டோம்;வேண்டுமென்றால் 20 ரூபாய் கொடுத்து பாட்டில் தண்ணீர் வாங்கிக்கொள்ளுங்கள் என்கிறார்கள். அதுபோல குடிப்பதற்கு எங்கேயும் தண்ணீர் வைக்கப்படவில்லை. பொது உடைமை பேசிவிட்டு, முதலாளித்துவத்தை ஊக்குவிப்பதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கிறார்கள். புத்தகக் கடைக்காரர்கள், லட்சக்கணக்கான புத்தகங்களை இரவு நேரத்தில் அப்படியே வைத்துவிட்டுப் போகிறார்கள். மின்கசிவு போன்ற காரணங்களால் தீ விபத்து ஏற்பட்டால், அந்தப் புத்தகங்கள் தீயில் கருக வாய்ப்புள்ளது. தீயணைப்புக் கருவிகள் போதிய அளவு இல்லை. மேலும், இயற்கை உபாதைகளைக் கழிக்க கழிவறைகள் எந்தப் பக்கத்தில் இருக்கின்றன என்ற அறிவிப்புகூட எந்த இடத்திலும் தென்படவில்லை” எனப் பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கிறார்கள்.

செங்கைப் புத்தகத் திருவிழா

புத்தகத் திருவிழாவில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார், “முன்பெல்லாம் எந்த வீட்டில் போய் தண்ணீர் கேட்டாலும் கொடுப்பார்கள். தண்ணீரை விலைகொடுத்து வாங்கும் பழக்கதுக்கு வந்துவிட்டோம். 20 ஆண்டுகளுக்கு முன்  இந்தப் பழக்கம் இல்லை. மனிதன், தான் உற்பத்திசெய்யும் ஒரு பொருளுக்கு விலை வைத்து விற்பனை செய்ய உரிமை இருக்கிறது.

செங்கைப் புத்தகத் திருவிழா

தண்ணீர், மனிதன் உற்பத்திசெய்ததா? அது இயற்கையின் அருட்கொடை. மழை கொடுத்த தண்ணீரை அடைத்து விற்கும் உரிமை மனிதனுக்கு ஒருபோதும் இல்லை. தான் உற்பத்திசெய்யாத ஒன்றை விற்பதன் வழியாக, ஒரு சமூகம் சிறுமையின் சிக்கலில் மாட்டிக் கொள்கிறது. அது, எல்லாவற்றுக்கும் விலை வைக்கிறது. கருணைக்கும் அன்புக்கும் விலை வைக்கிறது” என்று கண்கள் கலங்கப் பேசினார்.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க