வெளியிடப்பட்ட நேரம்: 12:57 (02/01/2018)

கடைசி தொடர்பு:12:57 (02/01/2018)

‘நாங்களும் அ.தி.மு.க-தான்..!’ - ஆதரவாளர்களுக்கு தினகரனின் புத்தாண்டு சர்ப்ரைஸ்

தினகரன்

புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த ஆதரவாளர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தியிருக்கிறார் தினகரன். புதுக்கட்சி, புதிய திட்டம்குறித்து ஆதரவாளர்களிடம் தினகரன் ஆலோசித்துள்ளதால் உற்சாகத்தில் உள்ளனர்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வில் கடும் குழப்பம் ஏற்பட்டது. சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், தினகரன், பழனிசாமி என அதிகார மையங்கள் உருவாகின. அ.தி.மு.க-வில் நடந்த அதிகாரப் போட்டியால், தேர்தல் ஆணையத்தால் கட்சியும் சின்னமும் முடக்கப்பட்டது. இதனால், கட்சி, சின்னத்தை மீட்டெடுக்க பல களேபரங்கள் நடந்தன. தேர்தல் ஆணையத்தில் நடந்த விசாரணைக்குப் பிறகு சின்னம், கட்சி ஆகியவை ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இரட்டை இலை சின்னம் கிடைத்த உற்சாகத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலைச் சந்தித்தனர் அ.தி.மு.க.வினர். ஆனால், சுயேச்சையாகப் போட்டியிட்ட தினகரன், தேர்தலில் வெற்றிபெற்று அ.தி.மு.க-வினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதனால், அ.தி.மு.க-வில் ஏற்படுத்திய சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க, தினகரனின் ஆதரவாளர்கள் கட்சியிலிருந்தும் கட்சிப் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டுவருகின்றனர். காலியான பதவிகளைப் பெற பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடையே கடும் போட்டிநிலவுகிறது. 

இந்தச் சூழ்நிலையில் நடிகர் ரஜினி, அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு, திராவிடக் கட்சிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அ.தி.மு.க-வுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்று கருதப்படுகிறது. ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை ஒற்றைத் தலைமையில் செயல்பட்ட அ.தி.மு.க., தற்போது இரட்டைத் தலைமையில் செயல்படுகிறது.  தினகரனின் ஆர்.கே.நகர் வெற்றியால் அ.தி.மு.க-வுக்கு ஏற்பட்டுள்ள சவால்கள்குறித்து பன்னீர்செல்வம், பழனிசாமி தரப்பினர் ஆலோசித்துவருகின்றனர். சட்டசபையில் தினகரனை சமாளிப்பது தொடர்பாக, நாளை எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தை பன்னீர்செல்வம், பழனிசாமி நடத்த உள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி

ரஜினியின் அரசியல் பிரவேசம்குறித்து ஆலோசித்த தினகரன், புதிய வியூகத்துக்கு திட்டமிட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் சொல்கின்றனர். ரஜினி, புதிய கட்சியைத் தொடங்குவதற்கு முன்பே, புதிய கட்சியை அறிவிக்க வேண்டும் என்று தினகரன் ஆலோசித்துள்ளார். அதுவும் அ.தி.மு.க என்ற பெயரில்தான் அந்தக் கட்சி செயல்பட வேண்டும் என்று, தினகரனுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த ஆதரவாளர்களிடம் அவர் ஆலோசித்துள்ளார். ‘புத்தாண்டு சர்ப்ரைஸாக புதிய கட்சி அறிவிப்பு வெளியிடுவேன்’ என்று தன்னுடைய நெருக்கமானவர்களிடம் தினகரன் சொல்லியிருக்கிறார். இருப்பினும், அதுதொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

இதுகுறித்து தினகரனின் ஆதரவாளர்கள் கூறுகையில், “தற்போதைய சூழலில் தினகரன் அதிரடியாக முடிவெடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அதாவது, ரஜினி புதிய கட்சியைத் தொடங்கினால், அதன் பாதிப்பு ஆளுங்கட்சியான அ.தி.மு.க-வுக்கு ஏற்பட வாய்ப்பில்லை. இரட்டைத் தலைமையில் செயல்படும் அ.தி.மு.க-வில் ஏகப்பட்ட குளறுபடிகள் உள்ளன. தொண்டர்கள் இன்னமும் மதில்மேல் பூனையாகவே இருக்கின்றனர். ஆர்.கே.நகரில் தினகரன் வெற்றிபெற்ற பிறகு, அவருக்கு மக்களிடையே செல்வாக்கு இருப்பது நிரூபணமாகியிருக்கிறது. 

தினகரனின் வெற்றியால் அதிர்ச்சியடைந்த பன்னீர்செல்வம், பழனிசாமி, அவரது ஆதரவாளர்களைத் தொடர்ந்து நீக்கிவருகின்றனர். கட்சிப் பொறுப்பிலிருந்து மட்டுமே நீக்குவதாக அறிவிக்கின்றனர். ஏன், கட்சிக்குத் துரோகம் செய்ததாகச் சொல்லும் அவர்கள், கட்சி உறுப்பினர் பொறுப்பிலிருந்து சிலரை ஏன் நீக்கவில்லை? எங்களை நீக்கும் அதிகாரம் பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோருக்கு இல்லை. நாங்கள் நினைத்தால் பன்னீர்செல்வம், பழனிசாமியைக்கூட நீக்கிவிடுவோம். அதனால், ஆட்சிக்கு சிக்கல் ஏற்படக்கூடாது என்று கருதி தினகரன் அமைதியாக இருக்கிறார். 

தினகரன்

சிறையில் சசிகலாவைச் சந்தித்தபோது, அ.தி.மு.க-வை எப்படி வழிநடத்த வேண்டும் என்று தினகரன் ஆலோசனை நடத்தினார். அப்போது, மௌன விரதத்தில் சசிகலா இருந்ததால், முக்கியத் தகவல்களைத் தன் கைப்பட எழுதிக்கொடுத்துள்ளார். அதன்படி, தினகரன் செயல்பட உள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க-வில் இடியாப்பச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்தச் சிக்கல்களுக்குத் தீர்வு காண முதலில் விரும்பினோம். ஆனால், மத்திய அரசின் ஆதரவால் அ.தி.மு.க-வை துரோகிகளிடமிருந்து கைப்பற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் புதிய கட்சியைத் தொடங்கலாம் என்ற ஆலோசனையில் தினகரன் இருக்கிறார். ‘அம்மா திராவிட முன்னேற்றக் கழகம்' என்று ஆரம்பிக்கலாம் என்ற யோசனை இருக்கிறது. அதைச் சுருக்கினால் அ.தி.மு.க என்றுதான் வரும். ஆனால், அதுதொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடந்துவருகிறது. மேலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்குப் பிறகு, குக்கர் சின்னம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்திருக்கிறது. அதனால், இனிவரும் தேர்தல்களில் குக்கர் சின்னத்திலேயே போட்டியிடலாம் என்ற எண்ணமும் இருக்கிறது. 

இதற்கிடையில், சட்டசபைக்குள் தினகரன் காலடி எடுத்துவைக்க உள்ளார். அப்போது, மக்களின் பிரச்னைகள்குறித்து சட்டசபையில் பேச தினகரன் திட்டமிட்டுள்ளார். இதனால் பழனிசாமி, பன்னீர்செல்வத்துக்கு கண்டிப்பாக சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. தினகரன் கூறியதுபோல பிப்ரவரி மாதத்துக்குள் ஜெயலலிதா விரும்பிய ஆட்சி தமிழகத்தில் தொடரும். அதற்கான ஏற்பாடுகளில் நாங்கள் ஈடுபட்டுவருகிறோம். தினகரன் புதிய கட்சி தொடங்குவதுகுறித்த அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியிடப்பட உள்ளது. அதன்பிறகு, நாங்களும் அ.தி.மு.க-தான்" என்றனர் உற்சாகமாக.


டிரெண்டிங் @ விகடன்