வெளியிடப்பட்ட நேரம்: 13:14 (02/01/2018)

கடைசி தொடர்பு:13:15 (02/01/2018)

டியர் தமிழர்களே... 2018-ல் பெண்களுக்கு இதெல்லாம் கிடைக்கச் செய்வீர்களா?!

இதோ இன்னொரு புது வருடம் பிறந்துவிட்டது. வழக்கம்போல இந்த வருடமும் பெண்களின் தன்மானத்தையும், கண்ணீரையும், உழைப்பையும், உயிரையும் உறிஞ்சிக் குடித்து ஏப்பம்விடாமல், அவளை சக உயிராகவும் சம உயிராகவும் பார்க்க வேண்டும். அதற்கு, 2018-ம் ஆண்டில் இந்தச் சமூகத்திடமிருந்து பெண்களுக்கு என்னென்ன வேண்டும்? தெரிந்துகொள்ள வேண்டுமா, இதை அவசியம் படியுங்கள் ஆண்களே... இந்த லிஸ்ட்டில் உங்கள் வீட்டுப் பெண்களின் ஆதங்கமும் இருக்கிறது. 

பெண்கள்

முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பெண்ணுரிமையையும் பெரியாரிஸத்தையும் கடந்த ஆண்டு அதிகம் பேசி இருக்கிறீர்கள். பேச்சுடன் நிறுத்திவிடாமல், இந்தப் புத்தாண்டிலிருந்து அதைச் செயல்படுத்தும் முயற்சியில் இறங்குவீர்கள் என எதிர்பார்க்கிறோம் ஆண்களே! கூடவே, பெண்ணுரிமையெல்லாம் அடுத்தவன் வீட்டு பெண்களுக்கு மட்டும்தான். தன் வீட்டு பெண்களுக்கு கண்டிஷன் அப்ளையுடன்தான் பெண்ணுரிமையெல்லாம் என்கிற மனோபாவத்தை மாற்றிக் கொள்வீர்கள் என்றும் நம்புகிறோம். 

குழந்தைகளைத் தெய்வங்களுடன் இணைத்துக் கொண்டாடிய மண் இது. அந்தத் தெய்வங்கள் உங்கள் போதை வெறியில் உதிர்ந்துபோகாத தெளிவொன்று உங்களுக்கு வரவேண்டும். 

டிஜிட்டல் இந்தியா ஆகிவிட்டோம் நாம். ஆனால், இன்னமும் கழிவறை இல்லாத கிராமங்கள் எத்தனை எத்தனையோ. மலம் கழிப்பதற்காகவே இருட்டும் வரை காத்திருக்கும் எங்கள் கிராமத்துச் சிறுமிகள், மலங்காட்டு மரங்களில் தூக்கில் தொங்காத வரம் ஒன்றை எதிர்பார்க்கிறோம்.

பெண்

ஆடிப் பாடி வேலை செய்து அலுப்பில்லாமல் வீடு திரும்புவதில்லை இன்றைய பெண்கள். நைட் ஷிப்ட்டு, லேட் நைட் வொர்க் எங்களுக்கும் பொதுவாகிவிட்டது. அதனால், உழைத்துக் களைத்து திரும்பும் எங்கள் பெண்களுக்குப் பாலியல் வன்கொடுமை தீண்டாத பாதுகாப்பான இரவுகள் வேண்டும். 

பக்கத்து வீட்டில் இருப்பவன் அண்ணன் என்கிற நம்பிக்கை இன்னமும் எங்கள் வீட்டுச் சிறுமிகளின் மனங்களில் இருக்கிறது. அதனால், எங்கள் வீட்டு ஹாசினிகளை குழந்தைகளாகப் பார்க்கும் கருணைகொண்ட அண்ணன்கள் வேண்டும். 

‘நடுராத்திரி எட்டு மணிக்கு வெளியில் சென்றால், ஆண்களால் பிரச்னை வரும்தான்' என்று பாலியல் வன்கொடுமைகளை நியாயப்படுத்தாத நல்ல (!)  அரசியல்வாதிகள் வேண்டும்.

காதல் சொல்ல உங்களுக்கு உரிமை இருப்பதுபோல, மறுக்க எங்களுக்கும் உரிமை இருக்கிறது. அந்த உரிமையில் அமிலம் வீசாத, நெருப்பு வைக்காத, கத்தி எடுக்காத ஆண்மை நிறைந்த தோழமை வேண்டும். 

பெண்களுக்கு

காதல் சொல்லி ஏமாற்றாத, வார்த்தையில் கற்பு கொண்ட நல்ல ஆண்மைக் காதல்கள் வேண்டும்.

எங்கள் மனநிம்மதியின்மையை ஆன்மிகமாக்கி, சூறையாடும் சாமியார்கள் இல்லாத தேசம் வேண்டும். 

உலகம் முழுக்க வேலை பார்க்கும் இடத்தில் எத்தனை சதவிகிதப் பெண்கள் பாலியல் தொல்லைகளை சந்திக்கிறார்கள் என்று சர்வே எடுக்கத் தேவையில்லாத நல்லதொரு உலகு வேண்டும். 

நோ என்றால் நோதான் என்று புரிந்துகொள்ளும் கண்ணியமான கணவர்களின் ஆண்டாக மலர வேண்டும். 

அநீதிக்கு எதிராகக் குரல் உயர்த்தும் எங்கள் கவுரி லங்கேஷ்களுக்குத் துப்பாக்கி குண்டுகளைப் பரிசு அளிக்காத தர்ம காலம் வேண்டும். 

சமூக வலைதளங்களில் பெண்கள் இளைப்பாறுவதை, கீழ்த்தரமாக விமர்சிக்காத முதிர்ச்சி வேண்டும். அங்கேயும் இன்பாக்ஸில் வாட்ஸ்அப் நம்பர் கேட்காத நண்பன்கள் வேண்டும். 

எங்கள் கருத்துரிமைகளை ட்ரோல் பண்ணாத சமத்துவ சமூக வலைதளங்கள் வேண்டும். 

கடைசியாக, எங்கள் நாடு காக்க, பணத்துக்கு விலைபோகாத ஓட்டுகள் வேண்டும்.


டிரெண்டிங் @ விகடன்